Tuesday, February 20, 2024

ராகுல் காந்தியின் பேச்சுகள்...!

இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பும் ராகுல் காந்தியின் பேச்சுகள்...!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த 2022-23-ல் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, அதன் இரண்டாம் கட்ட பயணமான, இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை, மணிப்பூரில் கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கினார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய இந்த பயணம், 66 நாட்களில் 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து, மும்பையில் வரும் மார்ச் 20-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இந்த பயணம், மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது.

மக்களிடையே வரவேற்பு:

இந்திய ஒற்றுமை பயணத்திற்கு நாட்டு மக்கள் மத்தியில் எப்படி பெரும் வரவேற்பு இருந்ததோ, அதைப் போன்றே, தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள, இந்திய ஒற்றுமை நீதி பயணத்திற்கும், வடகிழக்கு மற்றும் வட மாநில மக்கள்  மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனது பயணத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, திரளான மக்கள் அவருக்கு ஆதரவை அளித்து வருகிறார்கள். ராகுல் காந்தி பங்கேற்கும், பொதுக்கூட்டங்களிலும் மக்களின் கூட்டம் பெரும் அளவு வருகிறது. 

ராகுல் காந்தியின் பயணத்தின்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நாட்டில் நிலவும், பிரச்சினைகள், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் அவலங்கள், நாட்டில் வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சந்திக்கும் துயரங்கள், தொழில் அதிபர்களுக்கு மோடி அரசு அளித்துவரும் சலுகைகள் ஆகியவற்றை ராகுல் காந்தி எடுத்துக் கூறி வருகிறார். மக்களின் துயரங்களை தீர்க்க பல்வேறு யோசனைகளையும் அவர் தெரிவித்து வருகிறார். 

பாஜக மற்றும் மோடி மீது குற்றச்சாட்டு:


தனது ஒற்றுமை நீதி பயணத்தின்போது, ஒவ்வொரு நகரின் முக்கிய மையப்பகுதியில், மக்கள் சந்திக்கும் ராகுல் காந்தி, அவர்களிடம் கலந்துரையாடி, பிரச்சினைகளை கேட்டு அறிகிறார். மேலும், அதற்கு எத்தகைய வகையில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் ஒரு சிறிய உரையை நிகழ்த்துகிறார். இந்த உரையில் அன்பு தழைக்கிறது. அனல் பறக்கிறது. மக்களை சிந்திக்க வைக்கும் வகையில், அவரின் ஒவ்வொரு பேச்சுகளும் இருந்து வருகின்றன. 

"இந்தியாவின் ரத்தத்தில் அன்பு ஓடுகிறது. ஆனால் பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் வெறுப்பை பரப்புகின்றன" என குற்றம்சாட்டும், ராகுல் காந்தி, “இந்தியாவின் டிஎன்ஏவில் அன்பு ஓடுகிறது. பல்வேறு மதங்கள், இனங்களை சேர்ந்தவர்கள் அமைதியாக, அன்புடன் வாழ்கின்றனர். ஆனால் தற்போது பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி வருகின்றன. மொழி, சாதி, மாநிலங்கள் ரீதியாக இந்த வெறுப்பு பரவி வருகிறது. இது நாட்டை பலவீனப்படுத்தும்" என அவர் வேதனை தெரிவிக்கிறார்.

தனது பேச்சுகளில் மணிப்பூர் வன்முறை குறித்து கட்டாயம் குறிப்பிடும் அவர், "கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. நாட்டில் பல லட்சம் இளைஞர்களின் ராணுவ பணி கனவை அக்னி வீரர் திட்டம் சிதைத்து விட்டது. அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தொழிலதிபர் அதானிக்கு செல்வதை தான் நாடாளுமன்றத்தில் சொன்னதற்காக தன் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, அரசு வீட்டை காலி செய்ய வைத்தார்கள். ஆனால் மக்களின் இதயங்களில் வாழும் தனக்கு அரசு வீடு தேவையில்லை. எதிர்கால சந்ததியினருக்காக வெறுப்பும், வன்முறையும் இல்லாத இந்தியாவை காங்கிரஸ் விரும்புகிறது” என்று பேசி வருகிறார். 

திசை திருப்பும் பாஜகவின் உத்தி:


மேலும் "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு வெறுப்பையும், வன்முறையையும் பரப்பினாலும், காங்கிரஸ் கவலைப்பட போவதில்லை. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடு முழுவதும் அன்பின் கடைகளைத் திறப்போம். ஏனெனில், பாஜகவினரின் இதயத்தில் இருக்கும் வெறுப்புக்கும் அச்சத்துக்கும் எதிராகவே போராடுவதே எங்கள் பணி. நீதிக்காக குரல் கொடுப்பதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். ஒவ்வொருவரையும் ஒருங்கிணைக்க, அன்பின் கடைகளைத் திறக்கவே நாங்கள் வந்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு அநீதி இழைத்து வருகிறது. அதானியைத் தவிர நாட்டில் உள்ள அனைவருக்கும் அநீதி இழைக்கப்படுகிறது" இவ்வாறு ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின்போது பேசி வருகிறார்.

பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு ராகுல் காந்தி, அங்கு மக்கள் மத்தியில் பேசியபோது, அவர்களை மட்டுமல்லாமல், இளைஞர்களையும் தட்டி எழுப்பும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும், ஆற்றிய உரை தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான உரை, வட மாநில இளைஞர்களை சிந்திக்க வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பேசியபோது ராமர் கோவில் திறப்பு விழா குறித்து தனது பேச்சில் குறிப்பிட்ட ராகுல் காந்தி, "ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூ ஏன் அழைக்கப்படவில்லை" என கேள்வி எழுப்பினார். மேலும் "சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களும்  அழைக்கப்படவில்லை. ஏழைகள் அழைக்கப்படவில்லை. ஆனால் பெரிய தொழில் அதிபர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார்கள்" என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர், அடிக்கடி, வேறு விஷயங்களை முன்வைத்து வருவதாகவும் தற்போது வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஆகிய பிரச்சினைகளை திசை திருப்ப, ராமர் கோவில் விவகாரம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டு வருகிறார். 

இளைஞர்களை தட்டி எழுப்பும் பேச்சுகள்:


உத்தரப் பிரதேசம் அமேதியில் பேசிய ராகுல் காந்தி, தற்போது நாட்டில் உள்ள இளைஞர்களின் செயல்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் கடுமையாக சாடினார். "நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் 24 மணி நேரமும் செல்பேசியிலேயே தங்களது நேரத்தை செலவழித்து வருகிறார்கள். எப்போது பார்த்தாலும், இணையதளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையில், செல்பேசியை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் கண்டுக் கொள்வதில்லை. அதில் அக்கறை செலுத்துவதில்லை. தங்கள் வீட்டின் வருமானத்தை உயர்த்த உழைப்பதில்லை. கல்வியில் கவனம் செலுத்துவதில்லை. இத்தகைய செயல் அவர்களின் வாழ்க்கையை சிதைத்து விடுகிறது என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்வதில்லை. 

நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களான அதானி, அம்பானி, செல்பேசிகளை பெரும் அளவுக்கு பயன்படுத்துவதில்லை. அதன் காரணமாக தான் அவர்களின் வருமானம் கூடிக் கொண்டே போகிறது. இதை இந்திய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தங்களது பொன்னான நேரத்தை, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு செலவழிக்க முன்வர வேண்டும். நாட்டில் அமைதி நிலவ தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இந்திய நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேற்றம் அடைய வேண்டுமானால், இளைஞர்கள் உழைக்க வேண்டும். அதற்கு, செல்பேசியில் தங்கள் நேரத்தை செலவழித்துக் கொண்டு இருப்பதை இளைஞர்கள் நிறுத்த வேண்டும். தேவைப்படும் போது மட்டுமே செல்பேசியை பயன்படுத்த வேண்டும். 

வரும் நாட்கள் மிகவும் சவால்கள் நிறைந்தவை என்பதை நமது இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப, நன்கு திட்டமிட்டு தங்களது வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பு செலுத்தி, நாட்டில் அமைதி நிலவ இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். முன்வர வேண்டும். 

பாஜக தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை, நன்கு படித்து வைக்கிறார்கள். ஆங்கிலம் கற்க வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு நல்ல கல்வி தர மறுக்கிறார்கள். உங்களை போராட்டங்களில் ஈடுபட வைக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை. இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாஜக தலைவர்களின் பிள்ளைகள் நன்கு படித்து உயர் பதவிகளில் இருந்து வருகிறார்கள். ஆனால், உங்களின் நிலைமை எப்படி உள்ளது? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் நல்ல கல்வி பெற கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சரியான உரிமைகள் கிடைக்க வேண்டும். வாய்ப்புகள் தரப்பட வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும், நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு பிரிவினருக்கும் சம வாய்ப்புகள் தர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்மையான, சமமான நீதி கிடைக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும். பொருளாதார நீதி கிடைக்க வேண்டும். அரசியல் நீதி கிடைக்க வேண்டும். இவை கிடைக்க வேண்டுனாமால், எந்தவித அச்சமும், பயமும் இல்லாமல் அநீதிக்கு எதிராக நாட்டு மக்கள் துணிந்து நிற்க வேண்டும்." இவ்வாறு தனது இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் பேசி ராகுல் காந்தி, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர்களை நீண்ட தூக்கத்தில் இருந்தும் ஆழ்ந்த உறக்கத்திலும் இருந்தும் தட்டி எழுப்பி வருகிறார். 

பலன் தர வேண்டும்:


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆற்றிவரும் பேச்சுகள், உரைகள், நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால், இந்த கம்பீரமான பேச்சுகள் அனைத்தையும் மக்களிடையே கொண்டு செல்ல தேசிய ஊடகங்கள் பெருமளவுக்கு அக்கறை காட்டவில்லை. குறிப்பாக, வட மாநில மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிரதமர் மோடி ஆதரவு ஊடகங்கள், ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி பயணம் மற்றும் அவரது பேச்சுகள் தொடர்பான செய்திகளை சுதந்திரமாக வெளியிடுவதில்லை. மாறாக முற்றிலும் புறக்கணித்து வருகின்றன. மோடி ஆதரவு செய்திகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. 

அதேநேரத்தில், சமூகவலைத் தளங்கள் மூலம் மட்டுமே, ராகுல் காந்தியின் பேச்சுகள், நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது நாடு மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி, முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, மக்கள் மத்தியில் பிரச்சினையை உருவாக்கி, பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் மட்டுமே அரசியல் இலாபம் அடையலாம் என பாஜக நினைக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, நாட்டில் உள்ள இளைஞர்கள், தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. நாட்டு மக்களும் நன்கு சிந்தித்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினால் மட்டுமே, நாடு சர்வாதிகார பிடியில் சிக்குவதை தடுக்க முடியும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: