Thursday, February 22, 2024

ஸ்மார்ட்போன் முந்தும் இந்தியா...!

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் முந்தும் இந்தியா...!

தமிழ்நாட்டில் இருந்து 38 சதவீத செல்பேசிகள்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை....!

நவீன யுகத்தில் செல்பேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களிடமும், செல்பேசி இல்லாத நிலை இன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக, செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, விதவிதமான நவீன செல்பேசிகளை தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக, தற்போது ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியிலும் தயாரிப்பு நிறுவனங்கள் தனிக் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இப்படி தயாரிக்கப்படும் நவீன செல்போன்கள், உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. செல்போன் தயாரிப்பு மற்றும் வினியோகம் செய்வதில், சீனா எப்போதும் மக்கள் மத்தியில் அதிக கவர்ந்து வருவதுடன், அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகள், மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன. 

தற்போது சீனாவிற்கு போட்டி கொடுக்கும் வகையில், வியட்நாம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில், தனிக் கவனம் செலுத்தி வேகமாக முன்னேறி வருகின்றன. ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அண்மையில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் மூலம் பல நல்ல சுவையான தகவல்களை அறிய முடிகிறது. 

செல்பேசி ஏற்றுமதியில் முந்தும் இந்தியா:

அண்மைக் காலமாக, ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், உலகின் பல நாடுகள், இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்பேசிகளை மிகவும் விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் வாங்கும் நல்ல நிலை தற்போது உருவாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும், இந்தியாவில் இருந்து சுமார் 5 பில்லியன் டாலர் அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், மிக விரையில் உலகம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கும் செல்பேசிகளை பயன்படுத்தும் நிலை உருவாகும் என ஒன்றிய அரசும், தயாரிப்பு நிறுவனங்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க ஆர்வம் செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக, உலகின் முன்னணி செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன. இத்தகைய நிலை தொடர்ந்து வருவதால், வரும் 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து சுமார் 600 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 110 பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் நடைபெறும் என்றும் நம்பிக்கை உருவாகியுள்ளது. 

இந்த இலக்கை அடைய இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தற்போது 10 பில்லியன் டாலருக்கும் கீழே ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனினும், இந்தியா தற்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், விலை கொஞ்சம் கூடுதலாக இருப்பதால், சீனா மற்றும் வியட்நாம் நாடுகளின் செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலையில் இந்தியா இருந்து வருகிறது. 

அரசு புதிய முயற்சி:

\

இந்த சூழ்நிலையில், செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்திய அரசு, ஸ்மார்ட்போன் உபரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே இருந்து வந்த கட்டுப்பாடுகளை தற்போது கொஞ்சம் தளர்த்தியுள்ளது. அதன்படி, இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சார்ஜர்கள் மற்றும் சர்க்யூட் போர்டுகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதாக இருந்து வருகிறது. இதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. 

சீனா, வியட்நாம் ஆதிக்கம்:

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா தீவிரம் காட்டி வரும் நிலையிலும், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள், உலக அளவில் இத்துறையில் தொடர்ந்து அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதேபோன்று தென்கொரியாவும், ஸ்மார்ட்போன் ஏற்றுதியில் முக்கிய நாடாக இருந்து வருகிறது. 

கடந்த 2010ஆம் ஆண்டில் இந்தியாவும், வியட்நாமும், ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஒரு சதவீதத்திற்கும் கீழே இருந்து வந்தன. ஆனால் 2022ஆம் ஆண்டில், வியட்நாம் 12 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதியை செய்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி 2 புள்ளி 5 சதவீதமாக உயர்ந்து ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 7வது இடத்தை பிடித்துள்ளது. ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், செக் குடியரசு, அமெரிக்கா, மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளும், ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னணியில் இருந்து வருகின்றன. 

தமிழ்நாடு சாதனை:

உலக அளவில் இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 38 சதவீத போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தின் காஞ்சிரம் மாவட்டத்தில் பல நவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், புதிய தொழில் நிறுவனங்கள் குறிப்பாக, செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களை தமிழக அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று ஆதரவு அளித்து வருகிறது. இந்த புதிய தொழில் நிறுவனங்கள் மூலம், ஆயிரக்கணக்காக வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இதன்மூலம் உயர்கல்வி முடித்த தமிழக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. 

தமிழகத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் அதிகரித்து வரும் தேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரிக்கும் என தொழில் நிறுவன வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இனி, உலக நாடுகளின் சந்தைகளில் இந்திய தயாரிப்பான ஸ்மார்ட்போன்கள் தான் விற்பனை செய்யப்படும் என்ற நிலை உருவாகும் என்றும் அது வெகு தொலைவில் இல்லை என்றும் உறுதியாக கூறலாம். அதன்மூலம் உலக மக்கள் அனைவரின் கைகளிலும் இனி, இந்திய ஸ்மார்ட்போன்கள் தான் இருக்கும் என்பது உறுதி.

(குறிப்பு: தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த டேடா பாயிண்ட் என்ற கட்டுரையின் தகவலை அடிப்படையாக வைத்து இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது)

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: