Friday, February 16, 2024

மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில்  எத்தகையை அம்சங்கள் இடம்பெற வேண்டும்..!

முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் தீவிரம் வருகின்றன. இதற்காக ஒவ்வொருக் கட்சியும், தனிக்குழுக்களை அமைத்து, மக்களிடம் கருத்துக் கேட்கும் பணியில் இறங்கியுள்ளன. நாடு முழுவதும் மக்களை சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற கட்சிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஏற்கனவே தனது பணிகளை தொடங்கி, மக்களிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அத்துடன், பொருளாதார வல்லுநர்கள், தொழில் நிறுவன நிர்வாகிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், சமூகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடம் இருந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, ஆலோசனைகளையும் கருத்துகளையும் சேகரித்து வருகிறது. இதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது. 

கனிமொழி தலைமையில் குழு:

இதேபோன்று, திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில்,  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை திரட்டி வருகிறது. அத்துடன், இணையதளம் மூலமாகவும், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வரவேற்று, அதனை சேகரித்து வருகிறது. தமிழகத்தின் நலன் சார்ந்த அம்சங்கள், இந்திய ஒற்றுமைக்கும், அமைதிக்கும் செய்யப்பட வேண்டிய பணிகள், சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்தி அளிக்கும் வகையில் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களை இடம்பெறச் செய்ய, திமுக தேர்தல் அறிக்கை குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. 

இ.யூ.முஸ்லிம் லீக் கருத்து:

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியில் உள்ள குறைபாடுகள், அதை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய பணிகள், இஸ்லாமிய சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சினைகள், முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், அதற்கான தீர்வுகள், வழிப்பாட்டுத் தலங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், வேளாண், தொழில், சமூக சீர்திருத்தங்கள் ஆகியவற்றிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், என ஏராளமான ஆலோசனைகளை இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திமுக தேர்தல் குழுவிடம் அளித்து வருகிறார்கள்.  அத்துடன், இ.மெயில், இணையதளம் ஆகியவற்றின் மூலமாகவும் இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள், கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதேபோன்று, பல்வேறு முஸ்லிம் சமூக அமைப்புகளும் தங்களை கருத்துகளை தெரிவித்து வருகின்றன. 

மக்களின் தேர்தல் அறிக்கை:


தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வரும் நிலையில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு  நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, இந்த அமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதனை அரசியல் கட்சிகளின் பார்வைக்கு கொண்டு செல்வது வழக்கம். 

அதன்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக "மக்களின் தேர்தல் அறிக்கை" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள, அறிக்கையை சென்னையில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நேற்று வெளியிட்டது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில், அந்த அமைப்பின் தமிழகத் தலைவர்  மௌலவி எம்.ஏ.முஹம்மது ஹனீஃபா மன்பஈ இந்த அறிக்கையை வெளியிட்டார். அப்போது, துணைத் தலைவர்கள் கே.எம்.சிராஜ் அகமது, ஐ.ஜலாலுத்தீன், மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலாலுத்தீன், செயலாளர் முகமது காசீம், ஆலோசனைக் குழு உறுப்பினர் வி.எஸ்.முஹம்மது அமீன், மாநில மகளிர் அணி தலைவி பாத்திமா ஆகியோர் உடன் இருந்தனர். 

முக்கிய அம்சங்கள்:


இந்த மக்களின் தேர்தல் அறிக்கையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு, உறைவிடம், உடை, கல்வி, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பட்ட குடிநீர், அச்சமற்ற கண்ணியமான வாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள், மலைச் சாதியினர் ஆகியோரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும்  அதிகாரப் பங்கேற்புக்கும் உறுதி செய்ய வேண்டும். முஸ்லிம், கிறிஸ்துவ பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களின் உரிமைகளைக் காப்பதற்கும், வெறுப்பு பேச்சு ஆகியவற்றை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். 

தேசிய ஆலோசனைக் குழு முன் வைத்துள்ள சட்ட முன்வடிவை மறுஆய்வு செய்து கலவரத் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான விசாரணை நடத்த சுதந்திரமான நீதி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்படும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. ஆகிய சட்டங்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். 

மிஸ்ரா மற்றும் சச்சார் கமிட்டி பரிந்துரைகள்:

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் முஸ்லிம்கள் மற்றும் இதர நலிந்த பிரிவினருக்கு வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உர்தூ உள்ளிட்ட மொழிகளை மேம்படுத்த வேண்டும். இஸ்லாமிய மக்கள் மீது பாசிச அமைப்புகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தேசிய அளவில் சிறப்பு பாதுகாப்பு சட்டங்களை இயற்ற வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் நட்சத்திர விடுதி ஆகியவற்றை தடை செய்து பூரண மதுவிலக்கு கொள்கையை கடைபிடிக்க வேண்டும். 

நீட்  ரத்து செய்ய வேண்டும்:

கல்வி உதவித் தொகை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு. நீட் தேர்வு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசின் நிதிக் கொள்கையில் சீர்  திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். வக்ஃப் வாரியங்களுக்கு தன்னாட்சி தகுதி வழங்க வேண்டும் என ஏராளமான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

திமுக ஆட்சி திருப்தி:


அறிக்கை வெளியிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் எம்.ஏ.முஹம்மது ஹனீஃபா, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என கூறினார். ஒருசில குறைப்பாடுகள் இருப்பதை மறுக்க முடியாது என்றும், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க திமுக அரசு சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தாங்கள் இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்றும், ஆனால் நாட்டின் நலன் சார்ந்தே தங்களது நிலைப்பாடு இருக்கும் என்றும் ஹனீஃபா கூறினார். நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும், அந்த இலக்கை நோக்கியே தங்களின் முடிவு அமையும் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்தபிறகு, தேர்தலில் யாருக்கும் ஆதரவு என்பதை தங்களது தலைமை அறிவிக்கும் என்றும் முஹம்மது ஹனீஃபா கூறினார். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: