Wednesday, February 21, 2024

தனி முத்திரையை பதித்த சவுதி அரேபியா....!

டெல்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில்  தனி முத்திரையை பதித்த சவுதி அரேபியா....!


உலகம் மிகமிக வேகமாக பயணித்து கொண்டு இருந்தாலும், மனித மனம் எப்போதும் அமைதியை விரும்புகிறது. தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறும் சந்தைக்கு வந்துக் கொண்டே இருக்கின்றன. இந்த புதிய கருவிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சமுதாயம் இருந்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தங்களது அறிவையையும், திறமையையும் வளர்த்துக் கொள்கிறார்கள் என்றே கூறலாம். 

உலகம் மிகவும் சுருங்கிவிட்ட நிலையில், தற்போது அனைத்து தகவல்களும் கைவிரல் நுனியில் கிடைக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. இது மனித சமுதாயத்திற்கு நன்மையை தந்தாலும், அதிலும் சில தீமைகள் இருந்து வருகின்றன. கைபேசி, இணையதளம் போன்ற நவீன விஞ்ஞான சாதனங்கள் வந்தபிறகு, புத்தகங்கள் வாசிப்பது மக்களிடையே குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

இந்த குற்றச்சாட்டு ஓரளவுக்கு உண்மை என்றாலும், நவீன சாதனங்கள் மூலம், இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் இருந்து வருவதை மறுக்க முடியாது. எனவே, மனித மனம் இயல்பாகவே, அறிவை தேடுவதில் எப்போதும் ஆர்வமாக உள்ளது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். அதேநேரத்தில், பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கி படிக்கும் பழக்கம் குறைந்து வருவதை தடுக்கும் நோக்கில், நாட்டின் முக்கிய நகரங்களில் புத்ததக் கண்காட்சி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் அண்மையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 

சர்வதேச புத்தகக் கண்காட்சி:

தலைநகர் டெல்லியில் உள்ள பிரமாண்ட பிரகதி மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.  இந்த புத்தகக் திருவிழா, உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான புத்தக ஆர்வலர்கள், வாசகர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டும் பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சர்வதேச மாநாட்டு மையத்தில் ஒன்பது நாட்கள், சர்வதேசப் புத்தகக் கண்காட்சி-2024 என்ற பெயரில் மிகப்பெரிய அளவுக்கு கண்காட்சி நடத்தப்பட்டது. 

கண்காட்சியில், சவுதி அரேபியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், துருக்கி, ஈரான், இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சி, அனைத்து வயதினரும், அனைத்து தரப்பு மக்களும் புத்தகங்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்தது. அனைத்து வகைகளிலும் பாடங்களிலும், அனைத்து மொழிகளிலும் புத்தகங்கள் கிடைத்தன. குழந்தைகள் இலக்கியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆளுமை மேம்பாடு, சுயசரிதைகள், வணிகம், கலை, கலாச்சாரம், பாடப்புத்தகங்கள், துணை வாசிப்புப் பொருட்கள் மற்றும் கல்வி உதவிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  இந்த புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி  18ஆம் தேதி வரை நடைபெற்றது. 

புத்தகங்கள் மீது ஆர்வம்:

இந்த முறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளதை கண்காட்சியில் அவர்களின் வருகை அதிகரித்து இருந்ததன் மூலம் அறிய முடிந்தது. அவர்கள் புராண புத்தகங்களை அதிகம் வாங்கினர். இளைஞர்கள் தங்கள் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் புத்தகங்களை கேட்டு வாங்கி சென்றனர். புத்தகங்கள் பெரும்பாலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டாலும், தங்கள் உள்ளூர் கலாச்சாரத்தைப் பற்றி பெருமிதம் கொள்வதற்காகவோ அல்லது அதனுடன் மீண்டும் இணைவதற்காகவோ, நாட்டில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் நூல்களை வெளியிட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். 

பல்வேறு மாநில அரங்குகள்:


ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த உலகப் புத்தகத் திருவிழாவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இயங்கி வரும் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் அரசுகளும் கலந்துகொள்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும், பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாநில மொழிகளிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. டெல்லியில் வாழும், அனைத்து மாநில மக்களுக்கும், தங்களது மாநில மொழிகளில் நல்ல புத்தகங்களை வாங்க, இது மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்தது என்றே கூறலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்மாநில மொழிகளிலும் ஏராளமான புத்தகங்கள் குவிந்து கிடந்தன. இவற்றை தென்மாநில மக்கள் வாங்க ஆர்வம் செலுத்தியது புத்தக வெளியீட்டாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. 

தனி முத்திரை பதித்த சவுதி அரேபியா:


டெல்லி சர்வதே புத்தகக் கண்காட்சியில் இந்த முறை சவுதி அரேபியா தனது முத்திரையை பதித்துள்ளது. சவூதி அரேபியா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றது மட்டுமல்லாமல், விருந்தோம்பல் துறையிலும் தனது முத்திரையைப் பதித்து, வாசகர்களை  தனது அரங்கிற்கு, கலை மற்றும் இசையில் வரவேற்றது. இது  மிகச் சிறப்பாக இருந்தது என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

ஒன்பது நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில், சவுதி பெவிலியனில் அதிக மக்கள் கலந்து கொண்டனர். இது கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக மாறியது, சவூதி கலாச்சாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி அறிய ஆர்வமுள்ள பார்வையாளர்களை, இந்த அரங்கு வெகுவாக ஈர்த்தது. அரபி மொழி, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, நவீன சவுதி அரேபியாவின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அங்குள்ள வாய்ப்புகள் ஆகியவற்றை அறிந்துகொள்வதில், கண்காட்சிக்கு வந்த இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தினர். இத்தகைய இளைஞர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சவுதி அரேபிய அரங்கில் இருந்த நிர்வாகிகள், அரபி மொழியில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும், இந்தி, உர்தூ ஆகிய மொழிகளிலும், வாசகர்களுக்கு நல்ல விளக்கங்களை அளித்தனர். இது மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்தது என டெல்லி ஜாமியா நகரைச் சேர்ந்த இளைஞர் ஜாவீத் அகமது கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

கவிதை, இலக்கிய போட்டிகள்:

இந்த புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை கவர பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. குறிப்பாக தர்பன் போன்ற போட்டிகளுடன், இலக்கியங்கள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டன. அத்துடன் கவிதை போட்டிகளும், உர்தூ, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவிதை அரங்குகளும் இடம் பெற்றன. குஜராத்தி, ஹிந்தி, உர்தூ, ராஜஸ்தானி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் கவிதைகளைப் பாடிய கவிஞர்கள்,  கண்காட்சிக்கு வந்த வாசர்களை கவிதை மழையில் நனைத்தனர்.  இந்த கவி அரங்கில், கேசவ் திவாரி, வினோத் ஸ்ரீவஸ்தவா, ஷாரிக் கைஃபி, மதன் மோகன் டேனிஷ், உதயன் தாக்கர், அம்பிகா தத் மற்றும் சுக்விந்தர் அம்ரித் ஆகியோர் கலந்துகொண்ட கவிஞர்களில் அடங்குவர்.

மக்களை இணைப்பதில் மொழி வகிக்கும் பங்கை ஆராயும் ஒரு அமர்வும் இருந்தது. ஆஸ்திரிய தூதரகம், உலகளாவிய மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தில் ஆஸ்திரிய இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய விவாதத்தை ஏற்பாடு செய்தது. பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கம் புத்த மதம், உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள், அரசியல் அறிவியல் தொடர்பான நூல்கள், தமிழ்த் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை அதிக கவனத்தைப் பெறுவதாகக் கூறப்படும் தமிழ்த் தொகுப்புகளைக் கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருந்தது. 

குழந்தைகளுக்கான புத்தகங்கள்:

குழந்தைகளுக்கான புத்தக வெளியீட்டாளரான ஏக்லவ்யா பிதாரா, பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்தி, புந்தேல்கண்டி, கோண்டி மற்றும் குர்கு போன்ற பேச்சு வழக்குகளில் புதுமையான கதைகள் மற்றும் கவிதைகள் தொடர்பான நூல்களை தங்களது அரங்கில் வைத்திருந்தது. குழந்தைகள் கவிதை, இயற்கை மற்றும் அறிவியல் பற்றிய உரையாடல்களில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்து இருந்தது. 

புத்தகக் கண்காட்சியில் ஒரு பொம்மை-ஒருங்கிணைந்த கற்றல் மண்டலம் இருந்தது, இது குழந்தைகளில் படைப்பாற்றலைத் தூண்டுவதையும் இளம் மனதை மூழ்கடிக்கும் கற்றல் அனுபவங்களைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டு இருந்ததால், கண்காட்சிக்கு வந்த குழந்தைகள் மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன், துணியால் செய்யப்பட்ட புத்தகங்களை வைத்திருக்கும் ஸ்டார்ட்-அப் பதிப்பகமும் கண்காட்சியில் கலந்து கொண்டு, தனது படைப்புகளை பார்வையாளர்களின் முன்வைத்தது. 

செயற்கை நுண்ணறிவு:

பிசினஸ் வேர்ல்டின் தலைவரும், தலைமை ஆசிரியருமான டாக்டர் அன்னுராக் பத்ரா, 'செயற்கை நுண்ணறிவின் நவீன யுகத்தில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை' என்ற தலைப்பில் தனது பார்வையை கண்காட்சியில் பகிர்ந்து கொண்டார். ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவின்  ஒருங்கிணைப்பு மற்றும் அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பு திறமையில் இந்தியா எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை அவர் விளக்கம் அளித்தார்.  மேலும், புத்தகங்களைப் படிக்குமாறு மக்களை அறிவுறுத்திய அவர், "புத்தகங்கள் கலாச்சாரத்தைப் பற்றி அறிய சிறந்த வழியாகும், அவை நமக்குத் துணைகள் மற்றும் உண்மையான அறிவைக் கொடுப்பவர்கள், நீங்கள் அதிகம் படித்தால் உங்கள் வாழ்க்கை வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று கூறி, விமர்சன சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். 

சிறப்பு அம்சங்கள்:


இந்த ஆண்டு நடந்த புத்தக் கண்காட்சியின் சிறப்பு அம்சங்களாக, பங்கேற்பாளர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளவும், நுண்ணறிவு கலந்த விவாதங்களில் பங்கேற்கவும், எழுத்தாளர் தொடர்புகளில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கண்காட்சியில் கலாச்சார நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகள், பட்டறைகள். இலக்கியம் மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கொண்டாடும் நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. சில வகை புத்தகங்களும் பாடங்களும் பொதுவாக வெவ்வேறு வயதினரால் விரும்பப்படுகின்றன, ஆனால் இந்த ஆண்டு. மக்கள் தங்கள் வேர்கள் மற்றும் அவர்களின் சொந்த கலாச்சாரத்துடன் இணைக்கும் புத்தகங்களைத் தேடுவதைப் பார்க்க முடிந்தது. உலகம் நவீன யுகத்தில் பயணம் செய்தாலும், வாசிப்பு மற்றும் நூல்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குறையவே இல்லை என்பதை டெல்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியின் மூலம் அறிய முடிந்தது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: