Tuesday, February 27, 2024

கே.எம்.கே. சிறப்பு நேர்காணல்....!

 

ஒன்றிய பாஜக ஆட்சியில் வளர்ச்சி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது...! 

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நடவடிக்கைளை பிரதமர் கண்டிக்கவில்லை...! 

.யூ.முஸ்லிம் லீக் தனது அமைப்புகளை நாடு முழுவதும் விரிவுப்படுத்தி வருகிறது....! 

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெறுகிறது...! 

நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் நல்ல முடிவை தருவார்கள்...! 

டி.டி.தமிழ் செய்திப்பிரிவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

தேசிய தலைவர்

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அளித்த சிறப்பு நேர்காணல்

 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், டி.டி.தமிழ் செய்திப்பிரிவு குழு, அரசியல் கட்சி தலைவர்களிடம் சிறப்பு நேர்காணலை நடத்தி "தேர்தல் களம் 2024" என்ற பேரில்,  ஒளிப்பரப்பி வருகிறது. அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் நடத்தப்பட்ட நேர்காணல், நேற்று (26.02.2024) இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பானது. இந்த நேர்காணலை நடத்திய செய்தியாளர் எம்.பாஸ்கரன், தலைவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப, அதற்கு  பேராசிரியர் கே.எம்.கே. சிறந்த முறையில் தனது வாதங்களை முன்வைத்தார். இந்த நேர்காணல் குறித்து மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு செய்தியாளர் எஸ்..அப்துல் அஜீஸ் தரும் ஒரு சிறப்பு ரிப்போர்ட் இதோ உங்கள் பார்வைக்கு:

கேள்வி: 1906-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முஸ்லிம் லீக் கட்சி,  தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களை தாண்டி, பிற மாநிலங்களில் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. அதற்கு முக்கிய என்ன காரணம்? கட்சியை எப்படி நீங்கள் பலப்படுத்துவீர்கள்?

கே.எம்.கே.: 1906 டிசம்பர் 30-ஆம் தேதி டாக்காவில் தொடங்கப்பட்ட முஸ்லிம் லீக், அகில இந்திய முஸ்லிம் லீக். அகில இந்திய முஸ்லிம் லீக் என்பது 1947ஆம் ஆண்டோடு முடிந்துவிட்டது. அகில இந்திய முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்காகவே உழைத்த, பாடுபட்ட கட்சி. அதில் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் சேர முடியவில்லை. 1947க்குப் பிறகு இந்தியாவில் முஸ்லிம் லீக் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் முஸ்லிம்கள் ஒன்று கூடி, இந்தியாவில் முஸ்லிம் லீக் இருக்க வேண்டும் என முடிவு எடுத்தார்கள். அது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக அகில இந்திய முஸ்லிம் லீக் மறைந்துவிட்டது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு அரசியல் ரீதியான அமைப்பு வேண்டும் என்ற நோக்கத்தில்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் கட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்திய யூனியன் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டது என்றால், அரசியலமைப்பு சட்டத்தில் அப்படி தான் இருக்கிறது. அதாவது, இந்தியா பல்வேறு யூனியன்களை சேர்ந்த ஒரு நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தொடங்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நாடாளுமன்ற ஜனநாயக முறை தொடங்கப்பட்டது முதல், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்று வருகிறது. இந்த வரலாறு காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மட்டுமே உண்டு. பிறகு கட்சிகளுக்கு இல்லை. 1957ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது முதல் .யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அங்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள்.

தற்போது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் .யூ.முஸ்லிம் லீக் மிகச் சிறந்த முறையில் வலுவுடன் இருந்து வருகிறது. இரண்டு மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும், நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் வேண்டும் என தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால், வட மாநிலங்களில் முஸ்லிம் லீக் தேவையில்லை என சொல்லிவிட்டார்கள். 300 கவுன்சில் உறுப்பினர்களில், 14 பேரை தவிர மற்றவர்கள் முஸ்லிம் லீக் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள். எனவே தான் வட மாநிலங்களில் முஸ்லிம் லீக் நீடிக்க முடியவில்லை. தற்போது வட மாநிலங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்த்து நாங்கள் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்.


கேள்வி: பொதுவாக முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் பிரதமர் மோடி அரசு மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள். இந்த அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ஒரு அரசு என பலரும் கூறி வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா?

கே.எம்.கே.: நான் யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிலை சொல்லவில்லை. இந்தியாவில் 142 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 25 கோடி. இப்படி ஒரு புள்ளிவிவரம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இந்து சாமியார்கள் ஒன்று கூடி, இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லிம்கள் வெளியேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானம் நடைமுறைக்கு வர முடியாது. வர வாய்பே இல்லை.

.யூ.முஸ்லிம் லீக் சார்பாக நாங்கள் வைக்கும் கேள்வி என்னவென்றால், இந்து சாமியார்களின் நடவடிக்கையை கண்டித்து இந்திய பிரதமர் கண்டன அறிக்கை கொடுத்தாரா என்பது தான் எங்கள் கேள்வி. மணிப்பூரைப் பற்றி நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நாட்டில் வாழும் 25 கோடி முஸ்லிம்கள் நாட்டில் இருக்கக் கூடாது என தீர்மானம் போடும்போது, அதை பிரதமர் ஏன் கண்டிக்கவில்லை. இப்படி ஒரு கண்டன அறிக்கை கொடுக்காமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இருப்பது உறுதியாக தெரியவருகிறது. உணர்ச்சிகளை தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்களை கண்டிக்க வேண்டியது ஒரு பிரதமரின் பொறுப்பாகும். ஆனால், மோடி அதை செய்யவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி ஏறிய வேண்டும் அல்லவா? மதத்தின் பெயரால் பேசுவது தவறு. அப்படி ஒரு வார்த்தையை பிரதமர் மோடி சொல்லி இருந்தால்,  அது மிகப்பெரிய மகிழ்ச்சியை சிறுபான்மையின மக்களுக்கு தந்து இருக்கும். ஆனால், அவர் அதை செய்யவில்லை.

ஆனால், பாட்னாவில் இருந்து ஒரு ஆலிம், 25 ஆயிரம் இஸ்லாமியர்கள் உங்கள் முன்வந்து நிற்கிறோம். எங்களை கொன்றுவிடுங்கள் என அறிக்கை வெளியிட்டார். இப்படி சொல்லும் அளவுக்கு நிலைமை தூண்டப்பட்டது என்பதை இங்கு குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். இதுபோன்று, நிறைய காரியங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த பாஜக அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.


கேள்வி: பிரதமர் மோடி அரசின் பத்து ஆண்டுக் கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

கே.எம்.கே.: பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்து இருப்பதை நாம் மறுக்க முடியாது. பாதுகாப்பு துறைக்கு தேவையான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் நாம் வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். செல்பேசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கும் நமது தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, திமுக ஆட்சியில் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக சதவீதம் செல்பேசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி, வளர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், இந்த வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சில பேருக்கு மட்டுமே சென்று சேர்க்கிறது. நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படவில்லை. எல்லாருக்கும் எல்லாமே என்ற அடிப்படையில் வளர்ச்சி கிடைக்கவில்லை. மோடி அரசின் வளர்ச்சி திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்று போய் சேர்ந்து இருக்கிறதா என்பது தான் எங்கள் கேள்வி. காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைப் போன்ற வளர்ச்சி பாஜக ஆட்சியில் இல்லை. வளர்ச்சிக்கான பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். இதற்கு ஏன் தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ளது போன்ற வளர்ச்சி, ஒன்றிய அரசில் நாம் பார்க்க முடியவில்லை. 

கேள்வி: வரும் தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எந்த கூட்டணி வலுவாக உள்ளது. உங்கள் கண்ணோட்டம் என்ன? உங்கள் அரசியல் கணக்கு என்ன?

கே.எம்.கே.: அரசியலில் வெற்றி கூட்டணி எது? வெற்று கூட்டணி எது? இந்த முடிவை செய்யும் அதிகாரம் மக்களிடையே தான் உள்ளது. மக்களிடம் எல்லா கருத்துகளும் சொல்லப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, பாஜக தலைமையிலான ஆட்சி என இரண்டு ஆட்சிகள் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு தீர்ப்பு வழங்க வேண்டியது 90 கோடி வாக்காளர்கள் தான். அவர்களின் தீர்ப்பு என்ன இருக்கும் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. கடைசி நாளில் தான் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் செய்கிறார்கள். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, பாஜக அணி 370 இடங்களை கைப்பிடிக்கும் என்றும் 400 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பிரதமர் கூறி வருகிறார். ஆனால், 100 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கணித்துள்ளார்.

இந்தியா கூட்டணி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், உத்தரப் பிரதேம், பீகார், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு மிகச் சிறந்த முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி என்பது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்தியா கூட்டணியில் கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பது தான் பேசப்பட்டு முக்கிய அம்சமாகும். குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது தான் இந்தியா கூட்டணியில் முக்கிய நோக்கம். அது நிச்சயம் நடக்கும்.


கேள்வி: நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடு இருந்து வருகிறதே. இது குறைய வாய்ப்பு உண்டா? உங்கள் பார்வை என்ன?

கே.எம்.கே.: இந்தியா என்பது ஒரு சிறிய உலகம். இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 968 சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி, சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஒரே மதம், ஒரே மொழி என்றே பேச்சுக்கே இடமில்லை. 4 ஆயிரத்து 968 சமுதாய மக்களின் நன்மைக்காக அரசு பாடுபட வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வாதமே இருக்கக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற வரலாறு காட்டும் உயர்ந்த பண்பை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதை உடைக்கும் எந்த பேச்சும் வாதமும் நாம் ஏற்க முடியாது. இதனை முறியடிக்கும் இடத்தில் ..யூ.முஸ்லிம் லீக் இருந்து வருகிறது.

கேள்வி:.யூ.முஸ்லிம் லீக்கை தவிர, சிறுசிறு முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதன் வளர்ச்சியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கே.எம்.கே.: மும்பையில் கடந்த 1989ஆம் ஆண்டு இந்திய முஸ்லிம்கள் ஒன்று கூடி, ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் உள்ள பல முன்னணி முஸ்லிம் அமைப்புகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று இதனை நிறைவேற்றின. அதன்படி, பாஜகவை முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. இந்த தீர்மானம் பாம்பே டிக்ளேரேஷன் என புகழ்பெற்றது. இந்த தீர்மானம் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாஜகவையும் ஆதரிக்க முடியாது. பாஜகவுடன் சேர்பவர்களையும் ஆதரிக்க முடியாது என்பது தான் அந்த தீர்மானமாகும். காரணம், பாஜகவின் தத்துவங்கள், கொள்கைகள் நாட்டின் பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிரான உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதனை குலைக்கிறார்கள். அதனால் பாஜகவை நாங்கள் ஆதரிக்க முடியாது. இது .யூ.முஸ்லிம் லீக் எடுத்த முடிவு இல்லை. அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாகும். ஆனால், முஸ்லிம் அமைப்புகள் பல இருந்தாலும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்கு ஆதரவு அளிக்காது. பிற முஸ்லிம் அமைப்புகளின் செயல்களை சமுதாயம் ஏற்காது. இந்திய முஸ்லிம் சமுதாயம் பாஜகவை ஆதரிக்காது. அதற்கு மாற்றம் ஏற்பட வேண்டுமானால், பாஜக தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கேள்வி: தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்லும் முக்கிய செய்தி என்ன?

கே.எம்.கே.: இந்திய மக்கள் ஆன்மிகத்தில் மிகவும் ஆர்வம் உள்ள மக்கள். இந்தியா ஆன்மீக சக்தி உள்ள நாடு. அதன் அடிப்படையில், உள்ளது தான் இந்திய ஜனநாயகம். இந்திய மக்கள் அமைதியை விரும்பும் மக்கள். அமைதிக்காக பாடுபடும் மக்கள். அதன்படி, வரும் தேர்தலில் இந்திய மக்கள் ஒரு நல்ல முடிவை நிச்சயம் எடுப்பார்கள். நாட்டில் அமைதி நிலவ தங்களது கடமையை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். 

- நன்றி: டிடி தமிழ் செய்திப்பிரிவு

 

No comments: