Thursday, February 29, 2024

வெற்றி உங்கள் கைகளில்.....!

வெற்றி உங்கள் கைகளில்.....!


மனித வாழ்க்கை என்பது ஒரு அமானிதம். ஏக இறைவனால் வழங்கப்பட்ட மிக அற்புதமான ஒரு அருட்கொடை. இந்த அற்புதமான அருட்கொடையை மனிதன் மிகமிக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம், அவனுக்கு மட்டுமல்லாமல், அவனை சார்ந்தவர்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். வளர்ச்சி, முன்னேற்றம் கிடைக்கும். வாழ்க்கையில் அமைதி நிலவும். மனித வாழ்க்கையில் எப்போதும் அமைதி நிலவிக் கொண்டு இருந்தால், அதைவிட மிகப்பெரிய ஆனந்தப் பரிசு எதுவுமே இருக்கவே முடியாது. 

ஆனால், அற்புதமான இந்த அருட்கொடையான வாழ்க்கையை, மனிதன் சரியான முறையில் பயன்படுத்தி, பயணிக்க தவறி விடுவதால், எப்போதும் ஒருவித பதற்றம், படபடப்பு, குழப்பங்கள், கோபம் ஆகியவற்றில் மனிதன் வீழ்ந்து தனது வாழ்க்கையை உலகிலேயே நரக வாழ்க்கையாக மாற்றிக் கொள்கிறான். இதனால், மனிதனிடம், தன்னம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது. தோல்வி பயத்திலேயே அவன் மூழ்கி விடுகின்றான். இதனால் வாழ்க்கையில் அமைதி இழந்து விடுகிறது. நிம்மதி போய் விடுகிறது. மனிதன் தனது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம், வாழ்க்கையில் தொடர்ந்து அமைதியான முறையில் பயணிக்க முடியும். அதற்கு சில பழக்க வழக்கங்களை மனிதன் கைவிட வேண்டும். சிலவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 

நல்ல சிந்தனைகள் அவசியம்:


மனிதன் தனது வாழ்க்கையை அற்புதமான வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என நினைத்தால், முதலில் அவனது எண்ணங்கள், சிந்தனைகள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும், தூய்மையான சிந்தனைகள் மூலம் நல்ல செயல்களையும் மனிதன் செய்து வர வேண்டும். நல்ல எண்ணங்கள், இயல்பாகவே நல்ல செயல்களை செய்ய மனிதனை பணித்துவிடும். நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் இருந்தால், மனித முகத்தில் எப்போதும் ஒருவித அழகு இருந்துகொண்டே இருக்கும். இந்த முக அழகு, மற்றவர்களை ஈர்த்து, அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். இது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொடுக்கும். நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், உடல் ஆரோக்கியத்திற்கு மிகமிக முக்கியம் என்பதை தற்போதைய நவீன மருத்துவ உலகமும் நிரூபித்து வருகிறது. 

நல்ல சிந்தனைகள்,எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், செயல்கள் ஆகியவற்றின் மூலம், பல நோய்கள் குணமாகின்றன. மருந்துகள் மட்டுமே, நோய்கள் குணமாக காரணம் என நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையாக இருந்தாலும், மருந்துடன், நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல செயல்கள் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான், உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். நோய்கள் வந்தாலும், விரைவில் குணம் அடைந்துவிடலாம். நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல செயல்கள், நல்ல ஆரோக்கிய உணவுகள் ஆகியவை, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும். 

குடும்பத்தை நேசித்தல்:


ஏக இறைவன் மனிதனுக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அருட்கொடையான இந்த வாழ்க்கையில், அழகிய குடும்பத்தையும் மனிதனுக்கு அவன் பரிசாக வழங்கியுள்ளான். அழகிய பரிசான இந்த குடும்பத்தை நாம் எப்போதும் நேசிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், மனைவி, குழந்தைகள், குடும்பத்தில் உள்ள முதியவர்கள் என அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும். அவர்களின் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்காக பல தியாகங்களை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் ஆசைகளை, விருப்பங்களை முடிந்த அளவுக்கு நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். 

குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் நல்ல கல்விக்காக கடினமாக உழைக்க வேண்டும். அதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் திறமைகளை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களின் கல்வி விருப்பங்களை அறிந்து அதற்கு ஏற்ப, வழிக்காட்ட வேண்டும். படிப்பில் சிறந்த முறையில் குழந்தைகள் விளங்க, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் எப்போதும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாட வேண்டும். சிடுசிடுப்புடன், கோபத்துடன், குடும்பத்தினரிடம் பேசவேக் கூடாது. பழகக் கூடாது. கோபம் வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு, பொறுமையுடன் செயல்பட்டால், குடும்ப உறுப்பினர்கள், ஒருவனை நேசிப்பார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்லாமல், நமது சொந்த, தூரத்து உறவுகள் மீதும் நாம் எப்போதும் அன்பு செலுத்த வேண்டும். அவர்களின் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும். இதேபோன்று, நமது நண்பர்கள், அலுவலக தோழர்கள் என வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரிடமும், அன்புடன், பாசத்துடன் பழகுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால், நிச்சயம், நம்மை அனைவரும் நேசிப்பார்கள். விரும்புவார்கள். நம்மீது பாசம் காட்டுவார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

அமானிதங்களை பயன்படுத்துதல்:


ஏக இறைவன் மனிதனுக்கு ஏராளமான அருட்கொடைகளை, அமானிதங்களாக கொடுத்து இருக்கிறான். நமது உடலில், மூளை, இதயம், கண், செவி, நாக்கு, கை, கால்கள் போன்ற ஏராளமான உறுப்புகள்  அமானிதங்களாக இருந்து வருகின்றன. இதை ஒவ்வொன்றையும் நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.  நல்லவற்றைப் பார்ப்பது, நல்லவற்றைக் கேட்பது, நல்லவற்றைச் சொல்வது, நல்லவற்றை கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலம் அமானிதங்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்த முடியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 

நமது பதவிகள், பொறுப்புகள், பணிகள் ஆகியவையும் ஏக இறைவனால் வழங்கப்பட்ட அமானிதங்கள் என்பதை நினைவில் கொண்டு, அவற்றை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும். நமது பதவிகள், பொறுப்புகள், பணிகள் மூலம் பிற மக்கள் பயன் அடைய வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் வளர்ச்சி கிடைத்து, மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அந்த வகையில் நமது வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் அமைதி கிடைக்க, மகிழ்ச்சி ஏற்பட இவை முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

சமுதாயத்தில் ஏழை நிலைவில் உள்ள மக்கள் மீது நாம் அன்பு செலுத்துவது, நமது வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது மஹல்லாவில் உள்ள மக்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவிச் செய்ய வேண்டும். ஏழை குழந்தைகளின் கல்விக்காக நமது செல்வதை செலவழிக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்த்தால், இதுபோன்ற உதவிகளை நிச்சயம் நம்மால் செய்ய முடியும். அதை வாழ்க்கையில் பலர் செய்து வருவதை நாம் கண்டு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். 

வெற்றி உங்கள் கைகளில்:


உங்களது வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமானால், அது பிறர் கைகளில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றி என்பது உங்கள் கைகளில் மட்டும் தான் உள்ளது என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். வாழ்க்கையில் எந்தவொரு செயல்களையும் ஆர்வத்துடன் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். அப்படியே தோல்வி கிடைத்தாலும், பின்னர் மீண்டும் முயற்சி செய்யும்போது, அதன்மூலம் ஒரு நல்ல படிப்பினைக் கிடைத்து, அது மிகப்பெரிய வெற்றியாக அமைந்துவிடும். 

வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களின் வரலாறுகளைப் படித்தால், அவர்கள் எல்லோரும் தொடர் தோல்விக்குப் பிறகே, மீண்டும், மீண்டும் முயற்சி செய்து, கவலைக் கொள்ளாமல், களைப்பு அடையாமல் பணிகளை தொடர்ந்து செய்து வெற்றியை குவித்து இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதன்மூலம் தங்கள் இலக்குகளை அடைந்தது மட்டுமல்லாமல், உலகிற்கும், மனித சமுதாயத்திற்கும் மிகப்பெரிய அளவுக்கு அவர்கள் சேவைகளை ஆற்றி இருக்கிறார்கள். சில காலம் வாழும் இந்த வாழ்க்கையில், போட்டி, பொறாமை, பிறரை வீழ்த்தும் குணம் ஆகியவற்றை நாம் நிச்சயம் கைவிட வேண்டும். நம்மை எல்லோரும் நேசிக்கும் வகையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொருவரிடம் இருந்து, நாம் ஏதாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி கற்றுக் கொண்டே இருப்பதன் மூலம், நமது அறிவு விசாலமாகும். அதன்மூலம், நமது மனம் விரிவு அடையும். மனதில் மகிழ்ச்சி குடிப் புகுந்து எப்போதும் நிலைத்து நிற்கும். மகிழ்ச்சியமான மனம், வாழ்க்கையில் கடின சூழ்நிலைகளையும் எளிதில் எதிர்கொள்ளும். வாழ்க்கையில் வெற்றி என்பது பிறரிடம் இருந்து கிடைப்பதில்லை. நம்மிடம் இருந்து தான் அது, தொடங்குகிறது. கிடைக்கிறது. அதற்கு, நாம் நமது வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால், வெற்றி உங்கள் கைகளில் நிச்சயம் என்பதை உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: