Friday, February 16, 2024

விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள்....!

நூல் மதிப்புரை

நூல் : விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள்

ஆசிரியர் : வி.என்.சாமி

வெளியீடு : வி.என்.சாமி, 45, செவ்வந்தி தெரு,

          பராசக்தி நகர், வில்லாபுரம்,

          மதுரை - 625 012 செல்பேசி: 96297 61984

விலை : ரூ.600/- 

இந்திய நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை செய்தவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். அந்த தியாகிகளின் வரலாற்றை நாம் படிக்கும்போது, அவர்கள் நாட்டு மீது வைத்திருந்த அன்பு, பாசம் மற்றும் நாட்டின் உரிமைகள், கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை பாதுகாப்பதில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் ஆகியவற்றை அறிய முடிகிறது. இப்படி, நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகங்களை செய்தவர்களின் வரிசையில் பத்திரிகையாளர்களும் இருந்து வருகிறார்கள். 

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தாங்கள் நடத்திய பத்திரிகைகள் மூலம், மக்கள் மத்தியில் சுதந்திரத்திற்கான ஆர்வத்தை அவர்கள் ஊட்டி, மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். நாடு விடுதலை அடைவதற்கு பத்திரிகையாளர்கள் செய்த பணிகள் ஏராளம். இந்த பத்திரிகையாளர்களின் தியாகங்களை எடுத்துக்கூறும் வகையில் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி, "விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள்" என்ற தலைப்பில் அற்புதமான நூலை எழுதியுள்ளார். 720 பக்கங்களை கொண்ட இந்த நூலில், 1772-ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி 1942-ஆம் ஆண்டு வரையிலான சுதந்திர போராட்டக் கால வரலாறு இடம்பெற்றுள்ளது. 

எளிமையான தமிழ் மொழி நடையில், அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் வகையில், நூல் எழுதப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றை தெரிந்துகொள்வதில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வரும் நிலையில், அவர்களுக்கு நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை அறிந்துகொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற முடியும். அதற்கு துணை செய்யும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது என்றே கூறலாம். 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் இந்த நூல் கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூல் இடம்பெற்றால், மாணவ மாணவியர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரும் படித்த பயன் அடைவார்கள். நமது நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்வார்கள். விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் செய்த தியாகங்களை புரிந்துகொள்வார்கள். 

- ஜாவீத்

No comments: