Thursday, February 8, 2024

கருப்பு - வெள்ளை போர் ஆரம்பம்....!

கருப்பு - வெள்ளை போர்....!


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஆளும் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையேயான அரசியல் விளையாட்டுகள் படுவேகத்தில் தொடங்கியுள்ளன.  பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி, அடிக்கடி கடுமையாக தாக்கி பேசி வருகிறார். நாடு விடுதலை அடைந்தபிறகு, ஆட்சியில் இருந்த காங்கிரஸ், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சரியான திட்டங்களை தீட்டவில்லை என்றும், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பணிகளை ஆற்றவில்லை என்றும் மோடி குற்றம்சாட்டி வருகிறார். முன்னாள் பிரதமர் நேருவையும் அவர் விமர்சனம் செய்து வருகிறார். 

இதேபோன்று, பாஜகவின் மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் ஆட்சியின் காரணமாக, நாடு மிகவும் பின்தங்கி விட்டதாகவும், அதன் முன்னேற்றத்திற்காக பாஜக கடுமையாக சவால்களை எதிர்கொண்டு பணியாற்றி வருவதாகவும் கூறி வருகிறார்கள். 

வெள்ளை அறிக்கை:


இப்படி, அரசியல் களம்,  வார்த்தை மோதல்கள் மூலம் கோடைக்கால வெப்பத்தைப் போன்று சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டு காலப் பணிகள் மற்றும் தற்போதை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 10 ஆண்டு காலப் பணிகள் தொடர்பாக,  வெள்ளை அறிக்கையை பாஜகவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்துள்ளார். 

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவரிக்கும் இந்த 54 பக்க வெள்ளை அறிக்கையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 15 முறைக்கேடுகள் நடைபெற்றதாக பட்டியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பொருளாதாரத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி பதவி ஏற்றபிறகு, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், பொருளாதாரத்தை மேம்படுத்த படிப்படியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முழுமையாக தோல்வி அடைந்தது என்றும் பாஜக அரசின் வெள்ளை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

கருப்பு அறிக்கை:


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி குறித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி குறித்தும், அதன் பணிகள், மக்கள் சந்தித்த துயரங்கள் ஆகியவை குறித்தும் காங்கிரஸ் கட்சி புதுடெல்லியில் கருப்பு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. 

காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த 54 பக்க கருப்பு அறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தோல்விகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் பொருளாதார சீரழிவு, வேலையின்மை அதிகரிப்பு, விவசாய துறை அழிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அநீதிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகும், நாடு பல்வேறு துயரங்களை சந்தித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி விவரங்களை பட்டியலிட்டுள்ளது. 

கருப்பு-வெள்ளை போர்:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி குறித்து பாஜக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி குறித்து கருப்பு வெளியிட, நாட்டின் அரசியல் களம் மேலும் சூடுபிடித்து வேகம் எடுத்துள்ளது.  இந்த இரண்டு அறிக்கைகள் மூலம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி குறித்தும், பாஜக தலைமையிலான ஆட்சி குறித்தும், மக்கள் தற்போது எடைப்போட்டு பார்க்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. 

பாஜக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில்,  உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை ஏற்படவில்லையா, அல்லது வேண்டும் என்றே குற்றம்சாட்டும் நோக்கில், அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என்பதை நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். 

இதேபோன்று, காங்கிரஸ் வெளியிட்டுள்ள கருப்பு அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும், அதன் உண்மை நிலை குறித்தும், மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாடு எந்த திசையை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்து இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் வெளியிட்டுள்ள கருப்பு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களையும், அம்சங்களையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்த கருப்பு-வெள்ளை போர் அறிக்கை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவுக்கு எதிரொலிக்கும் என்றே கூறலாம். 

பொறுப்பு மக்களின் கைகளில்:


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது? அப்படி மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாடு எந்த திசையில் பயணிக்கும்? அதன்மூலம் நாட்டு மக்களுக்கு எத்தகைய துயரங்கள் கிடைக்கும்? நாடு உண்மையான வளர்ச்சியை, முன்னேற்றத்தை எட்டுமா? வெறும் வெற்று முழக்கங்கள் மூலம் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என துடிக்கும் பாஜக போன்ற கட்சிகள் மூலம் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கிச் செல்லுமா? மதசார்பற்ற நாடு என்ற கொள்கையில் பாஜக உறுதியாக இருக்குமா? அல்லது ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற நோக்கியில் பயணிக்குமா? இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாட்டு நலனில் உண்மையாக அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. 

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உண்மையான வளர்ச்சி கிடைக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியாக, ஒற்றுமையாக, சகோதரர்களாக வாழ வேண்டும். அனைத்து மதவழிப்பாட்டு தலங்கள் காக்கப்பட வேண்டும். கடந்த 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மதவழிப்பாட்டு தலங்கள் சட்டம், உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் மத்தியில் பிரினையை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். 

ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், வேளாண் என முக்கிய துறைகளில் நாடு வேகமான வளர்ச்சியை எட்ட வேண்டும். அதன்மூலம், நாட்டில் எந்தவித பாகுபாடு இல்லாமல், மக்கள் அனைவருக்கும் பலன்கள் கிடைக்க வேண்டும். இதற்கு தற்போதைய சூழ்நிலையில் யார் ஆட்சிக்கு வந்தால், தீர்வு கிடைக்கும் என்பதை நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். 

வெற்று முழக்கங்களை நம்பி ஏமாற்றம் அடையாமல், மத ரீதியாக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு அளிக்காமல், இந்தியாவின், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத் தன்மை அடையாளத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இனி நாட்டு மக்களிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த பொறுப்பை வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தங்களது ஜனநாயக கடமையை சிறப்பான வாக்குகள் மூலம் மக்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த தேர்தல் அவர்களின் தலை எழுத்தை மாற்றக் கூடிய தேர்தல் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் மனதில் உள்வாங்கிக் கொண்டு, பொறுப்புடன் செயல்பட வேண்டும். இனி பொறுப்பு மக்களின் கைகளில் தான் உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: