Sunday, February 18, 2024

இந்திய முஸ்லிம்களின் பொறுப்புகளும்....!

நாடாளுமன்றத் தேர்தலும், இந்திய முஸ்லிம்களின் பொறுப்புகளும்....!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில், இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவில், அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொண்டு தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். நாட்டில் மொத்தம் உள்ள 120 கோடி மக்களில், தேர்தல் ஆணையத்தில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள 96 கோடியே 88 லட்சம் பேர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்பதால், இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்த பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாஜகவின் சூழ்ச்சிகள்:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ள பாஜக பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற அக்கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக தலைவர்களில் சிலர், முஸ்லிம்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையில்லை என திட்டவட்டமாக கூறி வரும் நிலையிலும், முஸ்லிம்களின் வாக்குகளை கட்டாயம் பெற வேண்டும் என்றும், அதன்மூலம் மட்டுமே, சர்வதேச அளவில் நல்ல மதிப்பு பெற்று, தங்களுடைய பணிகளை மேலும் தீவிரப்படுத்த முடியும் என பாஜகவின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். 

எனவேதான், ஒருசில இஸ்லாமிய அமைப்புகளின் மூலம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பரப்பி வருகிறார்கள். இந்திய முஸ்லிம்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்றும் பாஜக எதிர்ப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்புகளின் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.  பாஸ்மாண்டா முஸ்லிம்கள் மற்றும் சூஃபி முஸ்லிம்கள் மீது பாஜக சிறப்பு கவனம் செலுத்துகிறது என்று சில முஸ்லிம் அறிவுஜீவிகள் வாதிடுகின்றனர். மேலும், சமூக நலனுக்கான பாஜகவின் திட்டங்களின் பயனாளிகள் முஸ்லிம்கள் என்றும் இந்திய முஸ்லிம்கள் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாட்டில் பெரிய வகுப்புவாத வன்முறை எதுவும் நடக்கவில்லை என்றும், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியா மிகவும் அமைதியாக இருந்தது என்றும் கூறி, முஸ்லிம்களின் கவனத்தை சிலர் திசை திருப்பும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். 

உண்மை நிலை என்ன?


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் யாருக்கு வாக்கு அளிப்பது என்பது அவர்களின் சொந்த விருப்பங்கள் ஆகும். ஆனால், நாட்டின் நிலையை நன்கு அலசி, ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள சுமார் 97 கோடி வாக்காளர்களும் இருந்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் செயல்பாடுகள், பணிகள், நடைமுறைகள், அவர்கள் செய்த சேவைகள், அவர்கள் ஆற்றிய உரைகள், ஜனநாயகத்தை காக்க அவர்கள் செய்த பங்களிப்புகள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நன்கு ஆராயப்பட வேண்டும். வரும் நாட்களில் நாடு அமைதியாக இருக்க வேண்டுமானால், யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு எடுப்பதை விட, யாருக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்பதை மிகமிகத் தெளிவாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

அதிலும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு வரும் தேர்தலில் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தல் திருவிழாவில் அவசியம் கலந்துகொண்டு தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? பாதிப்புகள், துயரங்கள், துன்பங்கள் என்ன? என்பதை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைத்துக் கொண்டே இருந்த பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பது முஸ்லிம்கள் முன்,  தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.  

பாஜக ஆட்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல், முஸ்லிம்களுக்கு எதிராக பெரிய அளவில் வன்முறைகள், கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது அப்பட்டமான பொய். டெல்லியில் ஷாஹீன் பாக் இயக்கத்திற்கு எதிராக பாஜக வன்முறையாளர்களால், "கோலி மாரோ சாலோங்கு" என்று முழக்கங்களை எழுப்பி வன்முறை நடத்தப்பட்டது. கடந்த 2021, பிப்ரவரி 23, அன்று டெல்லியில் 53 பேர் கொல்லப்பட்ட இந்த வகுப்புவாத வன்முறையில், 40 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், முஸ்லிம்களின் சொத்துகளை குறிவைத்து மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு முஸ்லிம்கள் இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

நாளுக்கு நாள் வன்முறைகள்:


இதேபோன்று, இந்திய முஸ்லிம்களின் சொத்துக்களைக் குறிவைத்து, ஏதாவது ஒரு சாக்குப்போக்குக் கூறி, நாளுக்கு நாள் புல்டோசர்கள் வீதிகளில் இறங்கி வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு யார் அதிக சேதம் விளைவிப்பது என்ற போட்டி நிலவுகிறது. பசு மாட்டிறைச்சி அரசியல், தெருக்களில் அலைந்து திரிந்த விலங்குகள் விபத்துக்களை ஏற்படுத்துவதற்கும் மறுபுறம் விளைந்த பயிர்களைத் தாக்குவதற்கும் வழிவகுத்தாலும், அதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என கூறி, அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் சம்பவங்கள் நாட்டில், நாள் தோறும் அரங்கேறி வருகின்றன. 

பசு தொடர்பான வன்முறைகள் பற்றிய சரியான தரவு கிடைக்கவில்லை. ஆனால் இது முஸ்லிம்களின் பெரும் பகுதியினரிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. அரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பாசிச வகுப்புவாதிகள் நடத்திவரும் வன்முறைகளை தடுக்க பாஜக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது இயல்பானதாகி விட்டன. 

சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதேபோன்று, என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி முஸ்லிம்களை பெரும் நெருக்கடியில் ஆழ்த்த பாஜக பணிகளை ஆற்றி வருகிறது. அத்துடன், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என ஒற்றை இலக்கை முன்வைத்து,  நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்வதை சீர்குலைக்க திட்டங்களை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முஸ்லிம்களின் உரிமைகள் பறிப்பு:


கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியாளர்கள் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. திட்டங்களை செயல்படுத்தவில்லை. மாறாக, முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்ற பேரில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து, முஸ்லிம்கள் கல்வி பெறவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாட நூல்களில் முஸ்லிம்கள் குறித்து தப்பான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முஸ்லிம்கள் குறித்த வரலாறுகள் திரித்து அமைக்கப்பட்டன. உண்மையான வரலாறு, பாட நூல்களில் இடம்பெறவில்லை. அஸ்ஸாம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மதரஸாக்கள் மூடப்பட்டன. அதன்மூலம் ஏழை முஸ்லிம் மாணவர்கள் இலவசமாக உணவு, உறைவிடம் பெற்று கல்வி பயிலுவதை பாஜக தடுத்து நிறுத்தியது. 

கொரோனா பேரிடர் காலத்தில், நாட்டில் கொரோனா பரவ தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. முஸ்லிம் வியாபாரிகள் சமூகங்களுக்குள் நுழைய மறுக்கப்பட்டனர். முஸ்லிம் நிறுவனங்களில் யாரும் பொருட்களை வாங்கக் கூடாது என வலதுசாரி பாசிச அமைப்புகள் பிரச்சாரம் செய்தன. இதனை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் பாஜக ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. 

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்த தினத்தில், நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. கடந்த 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டங்களையும் மீறி, முஸ்லிம்களின் மசூதிகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. அவற்றை பறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நகரங்களில் முஸ்லிம்களுக்கு வீடுகள்  மறுக்கப்படுகின்றன.  முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. பாஜக ஆட்சியில் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை குறித்து எடுக்கப்பட்ட உண்மையான ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, முஸ்லிம்கள் எந்தளவுக்கு மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. 

முஸ்லிம்களின் பொறுப்புகளும் கடமைகளும்:


வரும் நாடாளுமன்றத் தேர்தல், இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சவாலான தேர்தல் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. சில முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் வாதங்களை எல்லாம் மனதில் வாங்கவே கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வேட்பாளர்களின் தகுதியை, அவர்களின் நிலைப்பாடு ஆகியவற்றை கருதி, வாக்கு அளிக்க வேண்டும் என சில முஸ்லிம் அமைப்புகள், வாதங்களை செய்கின்றன. ஆலோசனைகளை தருகின்றன. இது ஒரு தேவையற்ற வாதம் மட்டுமல்ல, முஸ்லிம்களை குழப்பி அவர்களின் வாக்குகளை சிதற செய்யும் உத்தி என்பதை இந்திய முஸ்லிம்கள் மனதில் உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வதற்கும், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்து செயல்படும் அரசு மிகமிக அவசியம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, நாட்டை ஆள வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள், நாட்டை ஆள தகுதி அற்றவர்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும், அது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. பெரும்பான்மை மக்களுடன் இணைந்து சிறுபான்மையின மக்கள் நாட்டில் அமைதியாக, சகோதரர்களாக வாழ வேண்டும். தங்களுடைய உரிமைகளை பெற வேண்டும். அதற்கு தற்போதைய சூழ்நிலையில் "இந்தியா கூட்டணியை" தவிர மக்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. தேர்வும் இல்லை. எனவேதான், இந்தியா கூட்டணியை சிதைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 

எனவே, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி இணைந்து செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சி வலிமையுடன், சக்தியுடன் உள்ளதோ அந்த கட்சிக்கு முஸ்லிம்கள் முன்னுரிமை தந்து தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், வலிமையான முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டுமே தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சிதறாமல் இருக்கும். 

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு அளிக்கும்பாது,  கிறிஸ்துவ மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையை நான் பலமுறை கண்டு வியப்பு அடைந்துள்ளேன். அதுபோன்ற ஒரு ஒற்றுமை முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்திய முஸ்லிம்களுக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தலாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் வாக்காளர்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். குழப்பங்களுக்கு ஒருபோதும் இடம்கொடுக்காமல், யார் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை உறுதியாக எண்ணி வாக்களிக்க வேண்டும். கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், முஸ்லிம்கள் எப்படி ஒற்றுமையாக இணைந்து தங்களது கடமையை நிறைவேற்றினார்களோ, அதுபோன்று, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில முஸ்லிம்களும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

ஏக இறைவனிடம் துஆ:


கடைசியாக, இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல், புனித ரமலான் மாத நோன்பு காலத்தில் வருவதால், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் நாட்டில் நல்லாட்சி அமைய கட்டாயம் துஆ செய்ய வேண்டும். ஏக இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏக இறைவனிடம்  கையேந்தி  ஒவ்வொரு நாளும் இறைஞ்ச வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்விற்காக துஆ கேட்க வேண்டும். நாடு அமைதியாக, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற ஏக இறைவனிடம் கையேந்த வேண்டும். புனித ரமலான் மாதத்தில் கேட்கப்படும் துஆக்கள் நிச்சயம் ஏக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்திய நாட்டில் இனி நல்லாட்சி அமைய வேண்டும். அதற்கு ஏக இறைவன் துணை புரிய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மிகப்பெரிய சூழ்ச்சிகளை செய்தாலும், "சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிகச் சிறந்தவன், சூழ்ச்சியாளர்களில் மிகப்பெரிய சூழ்ச்சியாளன்" என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஏக இறைவனின் சூழ்ச்சி, பாஜகவை நிச்சயம் வீழ்த்தும் என்ற உறுதியான நம்பிக்கையுடன். முஸ்லிம்கள் ஏக இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: