Thursday, February 8, 2024

தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு....!

செயற்கை  நுண்ணறிவு புரட்சிக்கு தமிழ் மொழி  முக்கிய பங்கு வசிக்கும்....!

பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.....!

சென்னை,பிப்09-சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழக அரசின் சார்பில், தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் பிப்ரவரி 8 முதல் 10ஆம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முதல்நாளில், தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார். 

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு இந்த பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்தப்படுகிறது. 

மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  கணினி தொழில்நுட்பம் என்பதை கடந்து, அதன் மற்றொரு எல்லையை தமிழகம் தொட்டு இருப்பதாக கூறினார்.  ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் கல்வி துறையில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் வரலாம் என நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட இந்த தொழில் நுட்பம் ஒரு வரமாக அமையும் என்றும் கூறினார். 

மொழியின் பங்கு:

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மொழியின் பங்கு முக்கியம் என்றும், அதன் மூலமாக இந்த நுண்ணறிவை தமிழக மக்கள் பெற இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  செயற்கை நுண்ணறிவு மாபெரும் புரட்சிக்கும் பெரும் பாய்ச்சலுக்கும் தன்னைத் தயார்படுத்தி வருவதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். 

தமிழ் மக்களுக்கு பலன்கள்:

உலகம் முழுவதும் இருந்து செய்கை நுண்ணறிவு குறித்து வரும்  தகவல்கள் மூலம், மனித இனம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பல அற்புத செயல்களை எதிர்காலத்தில் சாதித்து காட்டும் என்றும் அவர் கூறினார்.  அப்படி இந்த தொழில்நுட்பம் வளரும் போது, தமிழ் மொழியில் அதற்கான தரவுகள் கிடைக்கும் போது, உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ் மொழி நீண்ட கலாச்சாரம், பாரம்பரியம் உள்ள செம்மொழி என்றும், தமிழ் மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு என்றும் அவர் கூறினார். 

தற்போது தரவுகளின் காலம் இருந்து வருவதாகவும், எவ்வளவுக்கு எவ்வளவு தரவுகள் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஒரு மொழி முன்வரிசைக்கு செல்லும் என்றும் அமைச்சர் கூறினார். எனவே, தமிழ் மொழியில் தரவுகளை பெற, தமிழ் மொழியை முன்வரிசையில் கொண்டு வர, தமிழக மக்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் தமிழக மக்கள் சிறப்பான தகவல்களை பெற்று பயன் அடைய முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 

காலத்தின் ஓட்டத்திற்கு ஈடு:

தமிழ் மொழியின் கடந்த காலப் பெருமைகளை மட்டுமே பேசி, தமிழக மக்கள் ஓய்ந்துவிடக் கூடாது என அறிவுறுத்திய பிடிஆர் பழனிவேல் தியாகரான், நவீன காலத்தின் வேகத்திற்கும், ஓட்டத்திற்கும், ஈடுகொடுத்து ஓடுவதற்கான ஆற்றலை, தமிழ் மொழியில் இருந்து அனைவரும் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  கடந்த 1999-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி நடத்திய தமிழ்நெட்-99, மாநாட்டிற்குப் பிறகு, தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கப்பட்தை நினைவு கூர்ந்த அமைச்சர், தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக கூறினார்.  

செயற்கை நுண்ணறிவு மூலம், தமிழ் மொழியை மேம்படுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்வது, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வது, தமிழ் மொழியில் தரவுகளை பெற செயல் திட்டங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: