Tuesday, February 6, 2024

சூடுபிடிக்கும் அரசியல் களம்...!

நெருங்கும் தேர்தல் - சூடுபிடிக்கும் அரசியல் களம்...!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை சந்தித்து, தேர்தல் ஏற்பாடுகள், தயாரிப்புகள் குறித்த ஆலோசனைகள் நடத்திவரும் தலைமை தேர்தல் ஆணையம், இந்திய ஜனநாயகத் திருவிழாவை மிகச் சிறந்த முறையில் நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்துக் கட்சிகளும், தற்போதே, தேர்தல் பணிகளில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன. ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில், ஒவ்வொரு மாநில கட்சிகளும், தேர்தல் பணிகளில் தனிக் கவனம் செலுத்தி வருகின்றன. 

சூடுபிடிக்கும் அரசியல் களம்:

விரைவில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என நோக்கில் ஆளும் பாஜக காரியங்களை ஆற்றி வருகிறது. இதேபோன்று, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள், பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாடு அடைந்துள்ள பின்னடைவு மீண்டும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில், பாஜகவை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதேநேரத்தில், தங்களுடைய வளர்ச்சிப் பணிகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு, ராமர் கோவில் திறப்பு உள்ளிட்ட மத ரீதியான பணிகளை மட்டுமே வைத்துகொண்டு, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சுகளை தொடர்ந்து கவனித்தால், இதனை நன்கு புரிந்துகொள்ள முடியும். வட மாநில மக்களிடையே உள்ள அறியாமையைப் பயன்படுத்தி, மீண்டும், ஆட்சியை கைப்பற்ற பாஜக துடிக்கிறது. மக்கள் மத்தியில் மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற பாஜக திட்டங்களை தீட்டி, அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இப்படி, ஆளும் பாஜக, இந்தியா கூட்டணி மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளதால், இந்திய அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

தென்மாநிலங்கள் எதிர்ப்பு:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தென்மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டங்களில் குதித்துள்ளன. குறிப்பாக, கர்நாடகா காங்கிரஸ் அரசு, தங்கள் மாநிலத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயில் இருந்து சரியான பங்களிப்பு வழங்கப்படுவது இல்லை என குற்றம்சாட்டி வருகிறது.  மத்திய அரசின் மானியத்தில் அநீதி மற்றும் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து, மாநில காங்கிரஸ் அரசு இன்று டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ‘எனது வரி எனது உரிமை’ என்ற முழக்கத்தை முன்வைத்து, டெல்லி ஜந்தர்மந்தரில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கண்டன‌ ஆர்ப்பாட்டம் செய்து, மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களுக்கு உணர்த்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோன்று, தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததைக் கண்டித்து திமுக தலைமையில் தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து நாளை போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும், ஒன்றிய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசும், ஒன்றிய பட்ஜெட்டில் தங்கள் மாநிலத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. கேரள அரசும், இத்தகையை புகாரை தெரிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூட, ஆந்திர மாநிலம் உட்பட தென்மாநிலங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

இப்படி, தென்மாநிலங்களில் அனைத்து அரசுகளும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாநிலங்களில் பாஜகவிற்கு மிகப்பெரிய அளவுக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையில் காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிவைத்து கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அத்துடன், தாம் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க இருப்பது உறுதி என்றும், 400 தொகுதிகளுக்கு மேல், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். 

பிரதமரின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மீது விமர்சனம் வைக்காவிட்டால், பிரதமர் மோடிக்கு இரவில் தூக்கம் வராது என்று கிண்டல் செய்தார். அத்துடன், 400 இடங்களில் வெற்றி பெறுவோம் எப்படி அவர் முன்கூட்டியே தெரிவிக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோன்று கருத்தை கூறியுள்ள ராட்டீரிய ஜனதா தளம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைக்கேடு நடத்த திட்டம் திட்டப்பட்டு இருப்பது இதன்மூலம் உறுதியாக தெரிய வருகிறது என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளது. 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்:

இது ஒருபுறம் இருக்க, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகளை மிரட்டி, பாஜக தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தாமல், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

நாட்டின் 17வது தலைமை தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.ஒய்.குரைஷி கூட, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைக்கேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அண்மையில் கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இதன்மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக நாட்டில் பிரச்சாரம் வேகம் எடுத்து இருப்பதை கண்டு பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறலாம். 

கவனத்துடன் செயல்பட வேண்டும்:

இப்படி நாடு முழுவதும் தேர்தல் மற்றும் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு எப்படிப்பட்ட நிலையில் பின்நோக்கிச் செல்லும் என்ற அச்சம் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  எனவே தான் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உள்ளிட்டோர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோல்வி அடைய வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற பாஜக மிகப்பெரிய அளவுக்கு சதி திட்டங்களை நிறைவேற்றக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.  இதேபோன்று, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்றும், சர்வாதிகாரம் ஏற்பட்டுவிடும் என்றும் பல்வேறு தரப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர். 

இத்தகைய சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக தொடர்ந்து காரியங்களை செய்து வருகிறது. அத்துடன், மக்கள் மத்தியில் மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, எதிர்க்கட்சிகளும், நாட்டு மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு தேர்தலில் பாஜக பெறும் வாக்குகள் பெரும்பான்மை வாக்குகளை விட மிகமிக குறைவு என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் நன்கு தெரிய வருகிறது. எனவே, மக்களின் வாக்குகள் சிதறி போகாமல் இருக்க எதிர்க்கட்சிகள், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். "ஒற்றுமை என்ற கயிற்றை பற்றி பலமாக பிடித்துக் கொண்டு", தேர்தலை சந்தித்தால், பாஜக வீழ்ச்சி அடைவது உறுதி.  தற்போது, வட மாநிலங்களில் கூட பாஜகவின் உண்மை முகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதை நன்கு பயன்படுத்த எதிர்க்கட்சிகள் தங்களது பணிகளில் ஒற்றுமையை ஏற்படுத்த வேகத்துடன் செயல்பட வேண்டும். அதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமானால்,  அதற்கான பொறுப்பு இனி, இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் நாட்டு மக்களிடம் மட்டுமே உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: