Monday, February 12, 2024

அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் ஆளுநர்...!

அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.....!

தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். மேகலாயா, நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராக இருந்தபோது, அவரது பணிகள் தொடர்பான பல விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். 

தமிழக ஆளுநராக பொறுப்பு ஏற்ற அவர், ஆரம்பம் முதலே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். மதசார்பற்ற ஜனநாயக நாட்டில், தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், வேண்டும் என்றே, தன்னுடைய அதிகார வரம்பை மீறி ரவி செயல்பட்டு வருகிறார். 

ஆளுநரின் கடமைகள், பொறுப்புகள்:

இந்திய அரசியலமைப்பின்படி, மாநில ஆளுநர் என்பவர்  வெறுமனே சம்பிரதாயத் தலைவர் என்பது உறுதியாக தெரிய வருகிறது. அதேநேரத்தில், மாநில விவகாரங்களை நிர்வகிப்பதில் ஆளுநரின் முதன்மைப் பொறுப்பு, அரசியலமைப்பையும் சட்டத்தையும் பாதுகாப்பதுமாகும்.  ஒரு மாநிலத்தின் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

அதேநேரத்தில் அமைச்சர்கள் குழு உண்மையான நிர்வாகி என்பதும், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், ஆளுநர் தனது பதவிக்காலம் முழுவதும் பணியாற்ற வேண்டும் என்றும் சட்டத்தின் நெறிமுறைகளாக உள்ளன. தங்களின் விருப்பப்படி மாநில ஆளுநர்கள் செயல்பட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறும் ஆலோசனைகளை ஏற்று, அதை செயல்படுத்த வேண்டும். இதுதான், ஆளுநரின் முக்கிய பணியாக இருந்து வருகிறது. 

சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களை கூட்டுதல் என பல சிறப்புரிமைகளை செயல்படுத்துவது மாநில ஆளுநரின் செயல்பாடுகளில் முக்கியமானவை. 

ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள்:

ஆனால், இந்திய அரசியலமைப்பு வகுத்து தந்துள்ள பொறுப்புகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சரியாக நிறைவேற்றவில்லை என அவரது நடவடிக்கைகள் மூலம் மிகத் தெளிவாக தெரிய வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது, அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது, ஒரு கட்சியின் தலைவரைப் போல, அரசை விமர்சனம் செய்வது என அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதற்கு பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டுகளாக கூற முடியும். 

குறிப்பாக, சட்டப்பேரவையியில் ஆளுநர் ரவி நடந்துகொண்ட முறை, மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இதுபோன்று, வேறு எந்த ஆளுநர்களும் நடந்துகொள்ளவில்லை என்றே கூறலாம். மேலும், தமிழக நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதும் அவரது பணிகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

சட்டப்பேரவையில் சர்ச்சை:

ஒவ்வொரு ஆண்டும், சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநரின் உரையுடன் தொடங்கப்படுவது வழக்கம். இந்த உரையை தமிழக அரசு தயாரித்து, ஆளுநருக்கு அனுப்பி, அவரது ஒப்புதலைப் பெறுகிறது. அதன் பிறகே, ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்து அந்த உரையை நிகழ்த்த வேண்டும். இதுதான் வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. 

ஆனால், இந்த மரபுக்கு மாறாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு, சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் முதல்நாளில், அரசு தயாரித்த உரையை படிக்காமல், தனக்கு தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 

இந்த ஆண்டும் அதே பாணியில் ஆளுநர் செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக, தேசியகீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அவையில் இருந்து வெளியேறியது கடும் சர்ச்சையாகி, அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

தந்தைப் பெரியார், சமத்துவம், சமூகநீதி, மகளிர் உரிமை, திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி, யாதும் ஊரே, யாவரும் கேளிர், சமூக நல்லிணக்கம், வாழிய செந்தமிழ், விவசாயிகளின் நலன், போன்ற உரையில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளை ஆளுநர் ரவி வாசிக்க மறுத்ததாக தகவல்வள் வெளியாகியுள்ன. 

திட்டமிட்டே முரண்பாடு:

தமிழக அரசுடன் திட்டமிட்டே முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி, அரசியல் அரங்கில் தேவையற்ற பரபரப்பை ஆர்.என்.ரவி உருவாக்கி வருகிறார் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சொல்லி இருப்பது நூறு சதவீதம் உண்மை என்றே கூறலாம்.  தன் பொறுப்பையும், பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரநிதியைப் போல் அவர் செயல்படுவது அவரது அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன. 

இதன் காரணமாக, மசோதாக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில், ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம்  தெரிவித்தது. 

இப்படி உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக கண்டனம் கூறிய நிலையிலும், அதற்கு மதிப்பு அளிக்காமல், மீண்டும் மீண்டும், ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது வழக்கமான பாணியிலேயே பணியாற்றி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். மாநில அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறார். தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்  என அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது மீண்டும் சட்டபேரவையில் அவர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் உடன்பாடு இல்லை எனக் கூறி இரண்டு நிமிடத்தில் உரையை முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்ட முறை, மிகவும் வருத்தம் அளிக்கும் வகையிலும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் உள்ளது என்பதை பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழக நலனில் அக்கறை உள்ளவர்கள் கூறியுள்ள கருத்துகள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. 

ஏற்றுக்கொள்ள முடியாது:

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இத்தகையை செயல்பாடுகள் குழந்தைத் தனமாக உள்ளது. குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் இப்படி நடந்துகொள்வது பல்வேறு கேள்விகளை எழுப்ப வைக்கிறது. மேலும் ஆளுநா்கள் நடந்துகொள்ளும் விதம் அடாவடித்தனமாக உள்ளது. தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆர்.என்.ரவி., ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது மேலும் வலுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. 

சமூக வலைத்தளங்களில் ஆர்.என்.ரவியின் போக்கைக் கண்டித்து ஏராளமானோர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அதைப் படிக்கும்போது, ரவி உண்மையிலேயே பொறுப்புகளை மதிக்காமல் நடந்துகொள்வதை உறுதி செய்ய முடிகிறது. 

ஒரு தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை விவாதித்து ஏற்றுக் கொண்டு முன்வைத்த உரை மற்றும் அதன் கருத்துகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்று ஆளுநா் சொல்வதற்கு நியாயமில்லை. ஆர்.என்.ரவி பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார். அதனால்தான் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜனநாயகத்தில் ஆளுநா் பதவி தேவையற்றது என்ற கருத்து தற்போது மேலும் வலுப்பெற்று வருகிறது. இனி வரும் நாட்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நன்கு உணர்ந்து தமிழக அரசுடன் ஒத்துழைத்து, தமிழக மக்களின் நலனுக்காக பணியாற்றினால், நன்கு இருக்கும் என்பது பொதுமக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


No comments: