பாஜகவிற்கு எதிராக பாட்னாவில் வீசத் தொடங்கிய பயங்கர சுனாமி அலை.....!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இருக்கும் ராஷ்டிடீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அந்த இலக்கை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். சிறுநீரக அறுவைக் சிகிச்சை செய்துகொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுத்து வரும் நிலையிலும், நாடு இனி பாசிச கொள்கை கொண்டவர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்ற ஒரே நல்ல எண்ணத்துடன், களம் இறங்கியுள்ள லாலு பிரசாத் யாதவ், தனது பேச்சுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார். இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை லாலு பிரசாத் யாதவ் உருவாக்கி வருகிறார். லாலு பிரசாத் யாதவின் இந்த பணிகள், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது என்றே கூறலாம்.
பாஜக-ஆர்.எஸ்.எஸ். அதிர்ச்சி:
இந்தியா கூட்டணி வலிமை இழந்து, செல்லாக் காசாக மாறிவிடும் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்து, அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், தாங்கள் எடுத்து முயற்சிகளுக்குப் பிறகும், இந்தியா கூட்டணி கட்சிகள் சிதறாமல் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளன. நாட்டில் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே பாணியில் இறங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா கூட்டணி மேலும்மேலும் வலிமையுடன் சக்தி பெற்று வருவதை கண்டு, பாஜக மிகவும் வேதனை அடைந்துள்ளது. எனவே, தனது பிரித்தாளும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த பத்து ஆண்டுகளில் செய்த வளர்ச்சிப் பணிகள் குறித்து பாஜக ஆட்சியாளர்கள் மக்களிடம் சொல்லி, வாக்குகளை கேட்கும் நிலையில் இல்லை. ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளில், பாஜக ஆட்சியில் மிகப்பெரிய அளவுக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பைதான் பாஜக விதைத்துள்ளது. அந்த வெறுப்பின் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டு, தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது. மேலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்யவும் பாஜக முடிவு செய்துள்ளது. வெறுப்பு மற்றும் ராமர் கோவில் ஆகிய இரண்டும் தங்களுக்கு தேர்தலில் வெற்றியை நிச்சயம் தரும் என பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள். எனவே, அதற்கு ஏற்ப தங்களது நடவடிக்கைகளையும், பிரச்சாரங்களையும் அவர்கள் அமைத்துள்ளார்கள்.
வலிமை அடைந்த இந்தியா கூட்டணி:
பாஜக தனது பாசிச திட்டங்கள் மூலம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்து இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டப் பிறகு, அந்த கூட்டணியில் சற்று சலசலப்பு இருந்தது. ஆனால் தற்போது அரசியல் களம் வேறு விதமாக மாறிவிட்டது. இந்தியா கூட்டணியை உடைக்க பல்வேறு சதிகள் அரங்கேற்றப்பட்டாலும், அவற்றை உடைத்துவிட்டு, தற்போது இந்தியா கூட்டணி, மிகவும் வலிமை அடைந்து நாட்டு மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அடைந்த வேதனைகளை, துன்பங்களை, இழப்புகளை நாட்டு மக்கள் தற்போது சீர்தூக்கிப் பார்க்க தொடங்கியுள்ளார்கள்.
பாஜகவிற்கு மாற்று எதுவும் இல்லை என்ற நிலை இருந்ததைக் கண்டு, வேதனை அடைந்த மக்கள், இந்தியா கூட்டணி உருவாகி, தற்போது அதிக வேகமாக செயல்பட்டு வருவதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலிமையுடன் அரசியல் பயணம் செய்யும் இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை அளிக்க நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர். அதை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செயல்படுத்தவும் வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே, இந்தியா கூட்டணி கட்சிகள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப தங்களது பணிகளை அவர்கள் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.
பீகாரில் தொடங்கிய சுனாமி அலை:
இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கு பீகார் மாநிலம் எப்போதும் முக்கிய மாநிலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின்போதும், பீகார் மாநிலத்தில் ஒரு அலை உருவாகி நாடு முழுவதும் வீசுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பீகாரில் சுனாமி அலை வீச தொடங்கி, நாடு முழுவதும் பரவி வருகிறது. மக்கள் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் அவலங்களை இந்த சுனாமி அலை எடுத்து வைக்கும் என்பது உறுதி.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற காந்தி மைதானத்தில் நேற்று (03.03.2024) ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி சார்பில் "மக்கள் நம்பிக்கை பேரணி" என்ற பெயரில் மிகப்பெரிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆலோசனையின்படி, மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து, பாஜகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். மாநாட்டிற்காக ஏற்பாடு செய்த காந்தி மைதானம், 12 லட்சத்திற்கும் அதிகமான மக்களால் நிரம்பி வழிந்தது.
பாஜக மீது கடும் குற்றச்சாட்டு:
இந்த மாபெரும் மாநாட்டில் பேசிய இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும், பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். வேலை வாய்ப்புகள், பொருளாதார மேம்பாடு, மோடியின் வாக்குறுதிகள் மற்றும் புதிய வெற்று முழக்கங்களால் நாடு ஏமாற்றம் அடைந்து இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மாநாட்டில் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடி ஒரு உண்மையான, நேர்மையான மனிதர் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். தங்களுடைய ஆட்சியில் "அனைவருக்கும் இஸ்ஸாத்தை (மதிப்பை) கொடுத்தோம்" என்றும், மண்டல் கமிஷன் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் எப்படி அதிகாரத்தை கைப்பற்றினார்கள் என்பதையும் அவர் வலியுறுத்தினார். அனைத்து ஏழைகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தலித்துகள் அதிகாரத்தின் வாசலில் நிற்பதற்கு தாங்கள் ஆற்றிய பணிகளையும் லாலு பிரசாத் யாதவ் எடுத்துக் கூறினார்.
வரும் தேர்தலில், இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்தும் என நம்பிக்கை தெரிவித்த அவர், "தில்லி பெ கப்ஸா கர்னா ஹை" (டெல்லியை நாம் கைப்பற்ற வேண்டும்) என்ற முழக்கத்தையும் எழுப்பினார். "யார் நரேந்திர மோடி?" " என்று கேள்வி எழுப்பிய லாலு பிரசாத் யாதவ், அவர் ஏன் பரிவாரவாதத்தைப் பற்றி பேசுகிறார், குடும்பத்துடன் இருப்பவர்களைக் கேலி செய்கிறார்?" என்றும் வினா எழுப்பினார். மேலும் பேசிய அவர், மோடி நாட்டில் வெறுப்பை பரப்பி வருகிறார். கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக, பெரும் தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்பவராகவும், நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு அவர்களின் பங்கை வழங்காமல், அவர்களை முற்றிலுமாக புறக்கணிப்பவராகவும், மோடி இருந்து வருகிறார். பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாட்டிற்காக இறக்கவும், இந்திய அரசை உருவாக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார். இதேபோன்று, மாநாட்டில் பேசிய இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மோடி ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பாஜக ஆட்சி வீழ்வது உறுதி:
பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பீகாரில் வீசத் தொடங்கியுள்ள இந்த சுனாமி அலை, இனி நாடு முழுவதும் பரவி, அதிக வேகம் எடுக்கும் என்பது உறுதி. "இந்தி பெல்ட்" என அழைக்கப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மக்களை குழப்பி, மக்களின் வாக்குகளை பிரித்து ஒவ்வொரு முறையும் ஆட்சியை கைப்பற்றும் பாஜக, தற்போது, இந்தி பெல்ட் பகுதியில் மிகப்பெரிய தோல்வியை நிச்சயம் சந்திக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்து உள்ளார்கள். பாஜக ஆதரவு ஊடகங்கள், போலியான, பொய்யான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வந்தாலும், மக்களை திசை திருப்பும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், இனி அவை நிச்சயம் பலன் அளிக்காது என்பது உறுதி.
தென் மாநிலங்களைப் போலவே, தற்போது வட மாநில மக்கள் மத்தியிலும் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் உண்மையான முகம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட மாநில மக்கள் மிகவும் கவனத்துடன் தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என்பது உறுதி. எனவே தான், பாஜக பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்ற முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் நேரம் நெருங்க, நெருங்க இதுபோன்ற சதித் திட்டங்கள் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும், நாட்டு மக்களும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பாஜகவின் சதிகளில் வீழ்ந்துவிடாமல், நாட்டு நலனில் அக்கறை கொண்டு, மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நாட்டு நலனுக்கு விரோதமான இந்த பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பினால் தான், நாடு உண்மையான வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அடையும் என நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக ஆட்சியை வீழ்த்த, பீகார் தலைநகர் பாட்னாவில் வீசத் தொடங்கிய, மோடிக்கு எதிரான இந்த சுனாமி அலை, இனி இந்தி பெல்ட் மாநிலங்களில் மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வீசும். அந்த சுனாமி அலையில், பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசிச அமைப்புகள் சிக்கி காணாமல் போவார்கள் என்பது நிச்சயம். கடைசியாக, இனி வரும் காலங்கள் மிகவும் சவால்கள் நிறைந்தவை என்பதால், இந்தியா கூட்டணி கட்சிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்







No comments:
Post a Comment