Saturday, August 2, 2025

உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழத் திருவிழா.....!

  "உலக மக்களை கவரும் பேரீச்சம்பழத் திருவிழா" 

ஏக இறைவனின் அற்புத படைப்புகளில் ஒன்றான பேரீச்சம்பழத்தின் சுவையில் மயங்காத மக்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நல்ல சுவையுடன் இருக்கும் பேரீச்சம்பழம், அதன் சுவைக்கு மட்டுமல்லாமல், அது உடலுக்கும் தரும் கூடுதல் சக்திக்காகவும் மக்களால் விரும்பப்படுகிறது. இப்படி உலக மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் பேரீச்சம்பழம், அரபு நாடுகளில் அதிகளவு விளைச்சல் செய்யப்படுகிறது. 

குறிப்பாக, சவூதி அரேபியாவில் பேரீச்சம்பழகத்திற்கு எப்போதும் தனி மவுசு, கிராக்கி இருந்து வருகிறது.  இதன் காரணமாக தான், தங்களுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக பேரீச்சம்பழத்தை அந்நாட்டு மக்கள் கருதி வருகிறார்கள். திருமணம், விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் விருந்தின்போது, பேரீச்சம்பழம், இல்லாமல், இந்த விருந்து நிறைவு பெறாது. இப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட பேரீச்சம்பழம் குறித்த பல விழாக்களும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பேரீச்சம்பழம் திருவிழாக்கள், உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல், வெளிநாட்டு மக்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது.  

உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழத் திருவிழா :

அந்த வகையில், சவூதி அரேபியாவின் காசிம் மாகாணத்தில் உள்ள புரைதாவில் ஆண்டுதோறும் உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பேரீச்சம்பழம் திருவிழா, புரைதாவில் உள்ள பாம் மையத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கியது. வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழா, சவூதி அரேபியாவில் உள்ள பேரீச்சம்பழத் தொழிலுக்கு ஒரு முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட சுவையான பேரீச்சம்பழங்களைக் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் வணிகங்கள் இணைவதற்கான வாய்ப்புகளை இந்த திருவிழா வழங்குகிறது. இந்த திருவிழா, அரபு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த நுகர்வோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டு மாத கால நிகழ்வாக இருக்கும் இந்த விழா, காசிம் பிராந்தியத்தில் பேரீச்சம்பழத் தொழிலை மேம்படுத்துவதற்கான பரந்த அளவிலான செயல்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் திட்டங்களைக் கொண்டுள்ளது. விழாவில்  நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பேரீச்சம்பழங்கள் விற்கப்படுவதால், இந்த விழா, தங்கள் வருமானத்திற்காக பேரீச்சம்பழ விவசாயத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு உயிர்நாடியாகவும் உள்ளது.

விவசாய பொருளாதார நிகழ்வு  :

சவூதி அரேபியா பேரீச்சம்பழத்தின் உற்பத்தியில் காசிம் பிராந்தியம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பனை மரங்களைக் கொண்டுள்ளது. விவசாயிகள் சமீபத்திய விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் பரிமாற்ற நிபுணத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள இந்த விழா ஒரு தளத்தையும் வழங்குகிறது. புரைதா பேரீச்சம்பழத் திருவிழா, காசிம் பிராந்திய ஆளுநரகம் மற்றும் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகத்தால், தேசிய பனை மற்றும் பேரீச்சம்பழ மையத்தின் மேற்பார்வையின் கீழ், காசிம் நகராட்சி மற்றும் பிராந்திய காவல் துறையின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருவிழா உலகின் மிக முக்கியமான விவசாய பொருளாதார நிகழ்வாகும். மேலும் காலை மற்றும் மாலை இரண்டு ஷிப்டுகளில் இரண்டு மாதம் இந்த திருவிழா தொடர்ந்து நடைபெறும்.  புரைதாவில் தினமும் நூற்றுக்கணக்கான டன்கள் ஏற்றப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பேரீச்சம்பழங்களை பெறத் தயாராக இருக்கின்றன. திருவிழாவில், 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பல்வேறு துறைகளில் பங்கேற்பார்கள்.

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் "சுக்காரி, பர்ஹி மற்றும் சகீ" உட்பட 100க்கும் மேற்பட்ட வகையான காசிம் பேரீச்சம்பழங்களை பொருளாதார திருவிழாவில் காட்சிப்படுத்துவார்கள். புரைதா பேரீச்சம்பழத் திருவிழா அதன் வாங்கும் சக்திக்கும் பிராந்தியத்தின் மிகவும் வலுவான வருவாயைப் பதிவு செய்வதற்கும் பெயர் பெற்றது. இந்த ஆண்டு, கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை விஞ்சவும், அனைத்து துறைகளிலும் இராச்சியத்தின் முன்னேற்றத்துடன் வேகத்தை தக்கவைக்கவும் இலக்கு வைத்துள்ளது. கடந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பேரீச்சம்பழம் திருவிழாவை கண்டு ரசித்தனர். கடந்த ஆண்டு திருவிழாவின்போது,   கிட்டத்தட்ட 85 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு  பேரீச்சம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என விழா ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

சிறப்பு அம்சங்கள் :

காசிமின் பேரீச்சம்பழத் தொழிலை மேம்படுத்துவதற்காக ஏராளமான செயல்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் திட்டங்களும் இந்த விழாவில் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பங்கள் தங்கள் கையால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய விழாவில் அரங்குகளை அமைப்பார்கள். புரைதா பேரீச்சம்பழ விழா அரபு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த நுகர்வோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திருவிழாவில் உற்பத்தித் தொழில்களின் காட்சிகள், உற்பத்தி செய்யும் குடும்பங்களின் பங்களிப்புகள், பனை கருப்பொருள் கைவினைப்பொருட்கள், பாரம்பரியம் மற்றும் கவிதை மாலைகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறக் குழுக்களின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் உள்ளன. வரைதல் செயல்பாடுகளுடன் கூடிய பிரத்யேக குழந்தைகள் பகுதியும் இடம்பெற்றுள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஈடுபடுத்தவும் மகிழ்விக்கவும் வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான திட்டங்களும் உள்ளன.  

மதீனாவில், ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களின் வருகை காரணமாக, பழங்களுக்கான தேவை, குறிப்பாக அஜ்வா பேரீச்சம்பழம், கணிசமாக அதிகரித்துள்ளது. மதீனா, அஜ்வா, சஃபாவி, மெஜ்தூல், அன்பரா, சகாய், பர்னி மற்றும் மப்ரூம் உள்ளிட்ட பல்வேறு வகையான பேரீச்சம்பழங்களை உற்பத்தி செய்வதற்கு பிரபலமானது. யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் நகரத்தில் தங்கியிருக்கும் போது பழங்களை சுவைத்து வாங்குகிறார்கள். தற்போது, அஜ்வா, மெஜ்தூல் மற்றும் சஃபாவி பேரீச்சம்பழங்களின் அறுவடை காலமும் தொடங்கிவிட்டது. மதீனாவில் உள்ள சரக்கு பேரீச்சம்பழ சந்தைகளுக்கு சுமார் 40 லட்சம் மரங்கள் மூலம்  பேரீச்சம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. பேரீச்சம்பழத்தின் மொத்த விலை ஒரு கிலோவிற்கு ரியால் 12 முதல் ரியால் 20 வரை இருக்கும். இந்த ரூபாய் மதிப்பில், ஒரு கிலோ சுமார் 300 ரூபாயாக இருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

சவூதி அரேபியாவில் உள்ள பேரீச்சம்பழ மரங்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. காசிம் பகுதியில் மட்டும் ஒரு கோடியே 12 லட்சம்  பனை மரங்கள் உள்ளன. காசிமில் பேரீச்சம்பழ உற்பத்தி 5 லட்சத்து 28 ஆயிரம் டன்களுக்கும் அதிகமாகும். இது நாட்டின் பேரீச்சம்பழ உற்பத்தியான 1 புள்ளி 6 மில்லியன் டன்களில் சுமார் 35 சதவீதமாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: