"உலக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் அரபு மொழி"
உலக மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொள்ளும், உலகின் பல்வேறு நாட்டு மக்கள் மத்தியில், அனைத்து மொழிகளும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அந்த வரிசையில் தற்போது உலக மக்களின் கவனம் அரபு மொழி மீது திரும்பியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அரபு மொழியை கற்பிக்க தனி மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரபு மொழியை கற்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், உலகளவில் அரபு மொழியை ஆதரிப்பதிலும், மக்களிடையே கலாச்சார நல்லிணக்கத்திற்கான பாலமாக அதன் இருப்பை மேம்படுத்துவதிலும் சவுதி அரேபியா பல்வேறு திட்டங்களை மிகவும் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மிகவும் எளிமையான முறையில் அரபு மொழியை கற்றுக் கொள்ள உலக மக்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அஜர்பைஜானில் அரபு மொழி மாதம் :
அந்த வகையில், அஜர்பைஜானில் கிங் சல்மான் குளோபல் அரபு மொழி அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட "அரபு மொழி மாதம்" என்ற கலாச்சார மற்றும் கல்வித் திட்டம் ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது. உலகளவில் அரபு மொழியை ஆதரிப்பதிலும், மக்களிடையே கலாச்சார நல்லிணக்கத்திற்கான பாலமாக அதன் இருப்பை மேம்படுத்துவதிலும் சவுதி அரேபியாவின் இந்த முயற்சிகளை உலக முஸ்லிம் இளைஞர் பேரவை பாராட்டியுள்ளது.
இந்தத் திட்டம் அரபு மொழியைத் தாய்மொழி அல்லாதவர்களுக்குக் கற்பிப்பதையும் அதை உலகளாவிய மொழியாக ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. முஸ்லிம் இளைஞர்களின் உலக சபை இந்த நிகழ்ச்சியை அரபு மொழிக்கு விதிவிலக்கான கவனம் செலுத்துவதற்கான ஒரு தனித்துவமான மாதிரியாகவும், நாகரிக மையமாகவும், உலக மக்களிடையே நல்லிணக்கத்திற்கான வழிமுறையாகவும் அதன் நிலையை வலுப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் கருதியுள்ளது.
இது கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கலாச்சார இடங்களில் அரபு மொழியின் இருப்பை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், பல்கலைக்கழக மற்றும் நிறுவன மாணவர்கள் மற்றும் அரபு கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த திட்டம் வழங்கும் சேவையை இளைஞர் சபை எடுத்துரைத்தது. சர்வதேச மன்றங்களில் அரபு மொழியின் ஆதரவாளராக சவுதி இராச்சியத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்திய ஒரு சேவையாக இந்த முயற்சி இருந்து வருகிறது.
அரபு மொழி - சில சுவையான தகவல்கள் :
அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பழமையான மொழி. அறமைக் மொழி, எபிரேயம், அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 26 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. சுமார் 31 கோடி மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது. இஸ்லாமிய மார்க்கத்துடன் தொடர்புடையதால், உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் அரபு மொழி ஆர்வத்துடன் கற்கப்படுகிறது.
அரபி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்சீரியா, பகுரைன், எகிப்து, எரித்திரியா, ஈராக், சோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது. இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உர்தூ, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதேபோல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் எபிரேயம், கிரேக்கம், பாரசீகம், சிரியாக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.
பாரம்பரிய அரபு மொழி :
செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அரபி மொழியானது, அரபு தீபகற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றது. பாரம்பரிய அரபு மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ததில் அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது. 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான 'நபீதான்' என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 'நபீதான்' என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கணக்கு' என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான் நெடுங்கணக்'கினை ஆய்வு செய்ததில் அந்த எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்றும், அந்த ‘நபீதான நெடுங்கண'க்கே கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இஸ்லாத்தின் எழுச்சியுடன் பாரம்பரிய அரபு மொழியின் வரலாறே மாறியது. இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சு மொழி அரபியாக இருந்ததாலும், அரபு மொழியில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டதாலும் அரபு மொழிக்கான தேவை அதிகரித்தது. எனவே ரோம், பாரசீகம் போன்ற முந்தைய வல்லரசு நாடுகளும் சீனா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல், போர், வியாபாரம் போன்ற தேவைகளுக்காக வெளிநாட்டவர்கள் வரத் தலைப்பட்டனர். எனவே, பன்மை அரபு மொழியின் இலக்கண இலக்கிய மறபுகளை கற்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான தேவை உலக அளவில் ஏற்பட்டது.
செழுமை மிக்க மொழி :
அரபு மொழி ஒரு செழுமை மிக்க மொழியாகும். சொற் சுருக்கம், கருத்துச் செறிவு, உண்மை தன்மை, பிற மொழிகளிடம் இருந்து இரவல் வாங்காத தனித்துவம் போன்றன அரபு மொழியில் காணப்படுகின்ற சிறப்பு அம்சங்களாகும். அரபு மொழியில் 28 எழுத்துக்கள் காணப்படுகின்றன. அரபு மொழியானது உலகில் காணப்படுகின்ற ஏனைய மொழிகளைவிட பல வகையிலும் வித்தியாசமான இலக்கண முறையினை கொண்டுள்ளது. அரபு மொழியில் சொற்களில் கூட ஆண்பால், பெண்பால் மிக உன்னிப்பாக கையாளப்படுகின்றது. வாக்கியங்களில் கூட ஆண்பால், பெண்பால் வாக்கியங்கள் என்ற இரு முறைகள் காணப்படுகின்றது. மேலும் அரபு இலக்கனத்தில் ஒருமை, பன்மை போல் இருமையும் மிக முக்கியமாகும். இந்த ஒருமை,இருமை மற்றும் பன்மைகளில் கூட ஆண்பால், பெண்பால் அவதானிக்கப்படுகின்றன. அரபு மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘ஒட்டகம்’ என்ற சொல்லை குறிப்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன. பண்டைய காலங்களில் அறிவியலுக்கும், கணிதத்திற்கும், தத்துவத்திற்கும் அரபு மொழி ஒரு முக்கிய ஊடகமாக இருந்தது.
இத்தகைய சிறப்பு மிக்க அரபு மொழியை உலக முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், தற்போது அனைத்து சமூக மக்களும் ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். இதன் காரணமாக தான், சவூதி அரேபிய அரசு, அரபு மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி, அதை உலக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறது. எளிமையான சொற்களையும், வாக்கியங்களையும் கற்றுக்கொள்வதன் மூலம் அரபு மொழியில் நமது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். பல்வேறு அரபு பேச்சுவழக்குகள் உள்ளன. எனவே நீங்கள் கற்க விரும்பும் பேச்சுவழக்கைப் புரிந்து கொள்வது முக்கியம். அரபு மொழி பேசும் மக்களுடன் உரையாடுவதன் மூலம் உங்கள் மொழித் திறனை மேம்படுத்தலாம். அரபு மொழி கற்க உதவும் பல ஆன்லைன் ஆதாரங்கள், சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அரபு மொழியை எளிமையாக கற்றுக் கொள்ளலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment