"ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரை - ஓர் பார்வை"
- ஜாவீத் -
நாடு முழுவதும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் பீகார் மாநிலத்தில் மேற்கொண்ட 'வாக்காளர் உரிமை யாத்திரை' பீகாரில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி தொடர்ந்து எய்துவரும் ‘வாக்குத் திருட்டு’ அம்புகள், ஆணையத்தை மட்டுமல்ல, ஆளும் பா.ஜ.க-வையும் ஆட்டிப் பார்த்துள்ளது.
அரசியல் கட்சிகள், மீடியா, செயற்பாட்டாளர்கள் என்று பல தரப்பில் இருந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத் தரப்பிலிருந்து இன்னமும் முறையான முழுமையான பதில் கிடைத்தபாடில்லை. ‘2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுடன் சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டு அக்கூட்டணியை வெற்றி பெறச் செய்துவிட்டது’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையம் இதை மறுக்க, ராகுல் காந்தி அடுத்தடுத்து ஆதாரங்களை அள்ளி வைத்தபடி இருக்கிறார்.
'வாக்குத் திருட்டுக்காக பீகாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்’ என்று தரவுகளை வெளியிட்ட ராகுல் காந்தி, `இறந்து போனவர்கள்’ என்று சொல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்து தேநீர் விருந்து கொடுத்து, திரும்பிப் பார்க்க வைத்தார். `இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பைக் கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி’ என்று பேசி, கலகலக்க வைத்தார்.
வாக்காளர் உரிமை யாத்திரை :
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில், அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை 'வாக்காளர் உரிமை யாத்திரை' என்ற பயணத்தை மேற்கொண்டார். ராகுல் காந்தியின் 'வாக்காளர் உரிமை யாத்திரை' மாநிலத்தில் 20 மாவட்டங்களைக் கடந்து ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரை தலைநகர் பாட்னாவில் நிறைவுபெற்றது. இந்த நடைப்பயணம் ஜனநாயகத்தின் முக்கிய கொள்கையான 'ஒரு நபர் ஒரு வாக்கு' என்பதற்கான போராட்டமாக ராகுல் காந்தி வடிவமைத்தார். இந்த பயணத்தின்போது, ராகுல் காந்தியுடன், ராஷ்டீரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்-வும் இணைந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் மக்கள் மத்தியில் பேசியபோது, 'அரசியலமைப்பைக் காப்பாற்ற 'வாக்காளர் உரிமை யாத்திரை' இயக்கத்தில் அனைவரும் சேர வேண்டும் என மக்களை வலியுறுத்தினார். ராகுல் காந்தி மேற்கொண்ட இந்த யாத்திரை, பீகாரில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் தற்போது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று பேசிய ராகுல் காந்தி, 'பீகாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது' என்று மீண்டும் குற்றம் சாட்டினார். அரரியாவில் பேசிய அவர், 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் ஏழைகளின் வாக்குகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் லட்சக்கணக்கான ஏழைகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. உயிரோடு இருப்பவர்கள், உயிரிழந்து விட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு உள்ளது. ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் மூலம் பீகாரில் வாக்கு திருட்டு நடைபெற்று இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் பாஜக மட்டும் மவுனம் காத்து வருகிறது. பாஜகவுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே ரகசிய கூட்டணி நீடிக்கிறது.
மகாராஷ்டிரா, அரியானா, கர்நாடகாவின் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றன. தற்போது பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. இதை அனுமதிக்க மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடி வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார்' என்று ராகுல் காந்தி பரப்பரப்பாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் பயணம் மேற்கொண்ட பீகாரின் 20 மாவட்டங்களிலும் மக்கள் அலை அலையாக திரண்டு தங்களது ஆதரவுகளை அளித்தனர். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றது உண்மை தான் என பல வாக்காளர்கள் ராகுல் காந்தியிடம் நேரில் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களில் சிறுபான்மையின மக்கள் மிக அதிகம் என தெரியவந்துள்ளது. ஒருசில நேர்மையான தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்கள், இதுதொடர்பாக ஆய்வுகளை நடத்தி, அதை செய்தியாக வெளியிட்டபோது, எப்படி சிறுபான்மையின மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை வெட்ட வெளிச்சம் ஆனது.
சமூக வலைத்தளங்களில் ஆதரவு :
பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட 'வாக்காளர் உரிமை யாத்திரை' அந்த மாநிலத்தையும் தாண்டி, இந்தியா முழுவதும் மக்களின் ஆதரவை பெற்றது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகளில், வாக்காளர் அதிகாரம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணரத் தொடங்கி, தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்த வாக்காளர் உரிமை யாத்திரைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக நாடளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி., உள்ளிட்ட பல தலைவர்கள் ராகுல் காந்திக்கு தங்களுடைய ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு, வாக்காளர் உரிமை யாத்திரையின் ஒரு அங்கமாக இருந்தனர்.
பீகாரில் ஒரு திருப்பம் :
பீகாரில் ஜெயபிரகாஷ் நாராயணன் மேற்கொண்ட ஒரு யாத்திரை இந்திய அரசியலில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று, பாட்னா மாவட்டத்தில் உள்ள பெல்ச்சி என்ற சிறிய கிராமத்திற்கு 1977ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி சென்றது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. இந்திரா காந்தியின் ‘பெல்ச்சி வருகை இந்திய அரசியலின் போக்கையும், காங்கிரஸ் கட்சியின் அதிர்ஷ்டத்தையும் மாற்றியது. ஒரு கலவரத்தில் எட்டு தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 11 பேர் உயர்சாதி நில உரிமையாளர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராகவும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடிவு செய்த இந்திரா காந்தி, அஞ்சாது சேற்றுப் பகுதி வழியாக நடந்து சென்றார். உள்ளூர் கிராமவாசி ஒருவர் அவரது உறுதியைக் கண்டு ஒரு யானையை அழைத்து வந்தார். அந்த யானை மீது ஏறி, கிட்டத்தட்ட நான்கு மணி நேர பயணத்திற்குப் பிறகு, கிராமத்தை அடைந்த இந்திரா காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்திரா காந்தியின் இந்த துணிச்சல் அவரது மங்கிய புகழை மீண்டும் எழுப்பி நிறுத்தி வைத்தது. காங்கிரஸ் உயிர் பிழைத்தது.
தற்போது 42 ஆண்டுகளுக்குப் பிறகு, பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட வாக்காளர் உரிமை யாத்திரை மக்களுடன் ஒரு மிகப்பெரிய தொடர்பை உருவாக்கியுள்ளது. இந்திய அரசியலில் பீகார் மாநிலம் எப்போது ஒரு திருப்புமுனை மாநிலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ராகுல் காந்தியுன் வாக்காளர் உரிமை யாத்திரை, பீகாரில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக 'வாக்கு திருட்டு' 'வாக்கு உரிமை' ஆகிய வார்த்தைகள், நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பிரிக்க முடியாத மொழியாக மாறிவிட்டன. மக்கள் தற்போது விழித்துக் கொண்டதால், மக்களின் சக்தியைக் கண்டு பாசிச சக்திகள் அச்சம் அடைந்துள்ளன.
முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் :
அதேநேரத்தில், பீகாரில் உள்ள சிறுபான்மையின மக்கள் ஒரு விஷயத்தை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சிறுபான்மையின மக்கள் எப்படி, ஒற்றுமையாக செயல்பட்டு, தங்களுடைய வாக்குரிமையை சரியாக பயன்படுத்தினார்களோ, அதேபோன்று, பீகார் மாநில மக்களும், ஒற்றுமையாக செயல்பட்டு தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் மட்டுமே, வாக்கு அதிகாரம் என்ற தத்துவம் உண்மையான தத்துவமாக மாறும். வாக்குரிமையை சரியாக பயன்படுத்தாமலும், வாக்குகள் சிதற காரணமாக இருந்துவிட்டாலும், பின்னர் மிகப்பெரிய அளவுக்கு வருத்தமும், வேதனையும் அடைய வேண்டிய சூழல் உருவாக்கும் என்பதை முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே, இந்திய ஜனநாயகம் வலுப்பெறும், உண்மையான ஜனநாயகமாக மீண்டும் மலரும்.
========================================
No comments:
Post a Comment