2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று
மீண்டும் ஆட்சியை அமைக்கும்....!
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உறுதி.....!!
சிறப்பு நேர்காணல்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது இந்தாண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடந்த 79வது சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகைசால் தமிழர் விருதை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கி, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் அளித்து பெருமைப்படுத்தினார்.
இத்தகைய சூழ்நிலையில், தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை இனிய திசைகள் மாத இதழுக்காக மூத்த ஊடகவிலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேரில் சந்தித்து சிறப்பு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகளை இனிய திசைகள் வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தகைசால் தமிழர் விருது :
தகைசால் தமிழர் விருது இந்தாண்டு (2025) எனக்கு வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், என்னைவிட தகுதியான தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நிறைய பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதை நான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரில் தெரிவித்தேன். அப்போது அவர் என்னை பார்த்து, "இல்லை, இல்லை. இந்த தகைசால் தமிழர் விருதுக்கு நீங்கள் மிகவும் முழுவதும் தகுதி பெற்றவர்கள். சரியான தமிழர் ஒருவரை தான் தமிழ்நாடு அரசு விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறது. உங்களை கவுரவப்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் தமிழ் மொழிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் ஆற்றிய, ஆற்றிவரும் பணிகளுக்கு விருதை வழங்கி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்"என்று என்னிடம் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தைகள் உண்மையில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
தமிழ் மொழியின் பெருமை :
தமிழ் மொழி எல்லா மொழிகளின் தாய் மொழியாகும். தமிழ் மொழி குறித்தும், அரபு மொழி குறித்தும் மேற்கொண்ட ஆய்வுகள், இரண்டு மொழிகளுக்கும் இடையே நீடித்த உறவுகள் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி ஒரு சிறப்பு மிக்க மொழியாகும். ஓர் இறைக்கொள்கையை மிகவும் சிறப்பாக எடுத்து கூறும் மொழியாகும். 'ஒன்றே குலம். ஒருவனே தேவன்', 'யாதும் ஊரே. யாவரும் கேளிர்', 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்', 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' இவையெல்லாம் தமிழ் மொழியில் இருக்கும் உன்னமான கொள்கை மொழிகளாகும்.
இலக்கியம், கவிதைகள்,என அனைத்திலும் இந்த அற்புதமான கொள்கை மொழிகள், தத்துவங்கள் உள்ளன. இதே கொள்கை தான், இஸ்லாமிய கொள்கையாகவும் இருந்து வருகிறது. திராவிடர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எப்போதும் ஒரு இணைந்த உறவுகள் நீடித்து வருகின்றன. தமிழ் மொழிக்கு எப்போதும் ஒரு சிறப்பு இருந்து வருகிறது. இஸ்லாம் தமிழகத்தில் இருந்து தான் அரபு நாட்டிற்கு சென்று, மீண்டும், இந்தியாவிற்கு வந்தது. இதற்கான ஆய்வுகள் நிறைய உள்ளன. எனவே தமிழர்களுக்கு இஸ்லாம் அன்னிய மார்க்கம் இல்லை. அது அவர்களின் சொந்த மார்க்கமாகும். எனவே தான் தமிழகத்தில் எப்போதும் ஒரு அற்புதமான மதநல்லிணக்கம் நீடித்து இருக்கிறது. ஒருசில பிரச்சினைகள் இருந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், சகோதர பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியை திணிக்க முடியாது :
தமிழ் மொழி மீது மிகவும் பாசம் கொண்ட தமிழர்கள் எந்த மொழியையும் திணிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே தான் இந்தி மொழியை தமிழ்நாட்டில் எப்போதும் திணிக்க முடியாது என்று கூறுகிறோம். தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் இந்தி மொழியை திணிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு மொழியை தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் திணிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது வேறு விஷயம். ஆனால் அதை திணிக்கப்படுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் நிறைய மொழிகளை பேசும் மக்கள் இருந்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் அதைக் கற்றுக் கொண்டார்கள். எனவே தான் திணிப்பதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை.
திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் :
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி இருக்கிறார். அது அவருடைய ஜனநாயக உரிமை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என சொல்ல முடியாது. ஆனால், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது போன்று, நடிகர் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் தற்போது ஏற்படுத்த முடியாது. தமிழக முஸ்லிம்கள் நடிகர் விஜய்க்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஒருசிலர் ஆதரவாக இருக்கலாம். ஆனால், முழு சமுதாயமும் அவருக்கு ஆதரவாக இல்லை.
இந்திய முஸ்லிம்கள் எப்போதும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்காளிக்க மாட்டார்கள். அந்த வகையில் தமிழக முஸ்லிம்கள் எப்போதும் திமுகவிற்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூட முஸ்லிம்கள் மீது எப்போதும் நெருக்கமாக இருக்கிறார். ஆனால், அவருக்கும், பாஜக.விற்கு முஸ்லிம்கள் வாக்காளிக்க மாட்டார்கள் 1999ஆம் ஆண்டு மும்பையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்பைடயில் முஸ்லிம்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழக முஸ்லிம்கள், மொஹல்லா ஜமாஆத் அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள். தமிழகத்தில் உள்ள மொஹல்லா ஜமாஆத் நிர்வாகிகள் எப்போதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஆதரவான நிலையில் இருந்து வருகிறார்கள். எனவே தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்போதும் மொஹல்லா ஜமாஆத்தை வலிமைப்படுத்துவதில் அக்கறை செலுத்தி வருகிறது. அதன்மூலம் தமிழகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி, சகோதரத்துவ நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. மதநல்லிணக்கம் தமிழகத்தில் தழைத்தோங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக், தமிழகத்தில் நடைபெறும் திராவிடர் மாடல் ஆட்சி, இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என விரும்புகிறது. அந்த நல்லாட்சி மீண்டும் தமிழகத்தில் தொடர வேண்டும் என ஆசை கொள்கிறது. நிச்சயம் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். மீண்டும் ஆட்சியை அமைக்கும். அதன்மூலம் தமிழகத்தில் திராவிடர் மாடல் ஆட்சி மிகச் சிறந்த சேவையை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
இப்படி ஒரு மொபைல் பல்கலைக்கழகமாக விளங்கும், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் கூறியபோது, அவருக்கு இனிய திசைகள் இதழ் சார்பாக மீண்டும் வாழ்த்துகளை கூறி விடைப்பெற்றோம்.
==================================
No comments:
Post a Comment