"பெருமை அடையும் தகைசால் தமிழர் விருது"
- மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது, இந்தாண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு விருதை வழங்கி, பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையையும் அளிக்க உள்ளார்.
கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் மட்டுல்ல, ஏன் இந்திய அளவில் கூட அனுபவம் வாய்ந்த மூத்த சமுதாய தலைவர் என்று கூட கூறலாம். எளிமையான வாழ்க்கை முறை, அதேநேரத்தில் எல்லா அரசியல் நுணுக்கங்கள் நன்கு அறிந்து, அனைத்து தரப்பு மக்களிடமும், மனிதநேயத்துடன் பழகும் ஒரு தலைவர் தான் பேராசிரியர் அவர்கள். தற்போது அரசியலில் அறிவுடன் கூடிய நல்ல தலைவர்களை பார்ப்பது மிகவும் அரிதாகவிட்ட நிலையில், ஒருசில அரசியல் தலைவர்கள், எளிமையுடன், மக்கள் நலனில் அக்கறை கொண்டும், இந்தியாவில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் சகோதரத்துவ நேயத்துடன் வாழ வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கவே செய்கிறார்கள். இப்படி விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இருக்கும் தலைவர்களில் ஒருவர் தான் பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் என கூறலாம்.
உயர்ந்த நோக்கங்கள், உயர்ந்த எண்ணங்கள், சிறந்த அறிவு நுட்பம், சமுதாய நலனின் அக்கறை, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் பெற்று, அமைதியின் இருப்பிடங்களாக திகழ வேண்டும் என நினைக்கும் இத்ததைகய சிறந்த அரசியல் தலைவர் ஒருவருக்கு, தகைசால் தமிழர் விருது வழங்கப்பட இருப்பதைக் கண்டு, தமிழர்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம் சமுதாயமும் பெருமை அடைந்துள்ளது. 'தகைசால் தமிழர் விருது' பேராசிரியர் அவர்களுக்கு வழங்குவதன் மூலம், பேராசிரியர் பெருமை அடையவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும் பெருமை அடையவில்லை. மாறாக, 'தகைசால் தமிழர் விருதே' பெருமை அடைகிறது என்றே கூறலாம்.
அரசியல் பயணம் :
பிரிட்டிஷ் ஆட்சியில், மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குக்கிராமமான திருநல்லூரில் பிறந்த பேராசிரியர் அவர்கள், மணலில் ஆனா, ஆவன்னாவை எழுதி படித்து கல்வி பயின்று, கல்லூரி பேராசிரியர், பத்திரிகையாளர் என வாழ்க்கையை தொடங்கி, பின்னர், இந்திய அரசியலில் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக உருவெடுத்தார். 'கவ்ம்' என்ற உர்தூ வார்த்தைக்கு அர்த்தம் தேடிய அவர், 'கவ்மின் காவலர்' என்ற புகழ்மொழிக்கு சமுதாய தலைவர் என்பது தான் உண்மையான அர்த்தம் என அறிந்து, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பணிகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், வாழ்க்கையில் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில், மாநில கல்வி கலாச்சார பிரிவு செயலாளர், மாநில இளைஞரணி பொறுப்பாளர், மாநில அமைப்புச் செயலாளர், மாநில பொதுச் செயலாளர், மாநில தலைவர், தேசிய துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர், தற்போது மாநில தலைவராகவும், தேசிய தலைவராகவும் திறம்பட பணியாற்றி, அனைவரின் உள்ளங்களையும் கொள்ளையடித்து வருகிறார். ஒரே ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், அந்த பொறுப்பில் இருந்தபோது, மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி, மாநில தலைவர்களை மட்டுமல்லாமல், தேசிய தலைவர்கள் மத்தியிலும் நல்ல மதிப்பை பெற்றார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தபோது, எப்போது வேண்டுமானாலும், தொகுதி மக்கள் அவரை சந்திக்கலாம் என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில், வேலூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு அலுவலகம் திறந்து, நாடாளுமன்ற கூட்டங்கள் இல்லாத நேரங்களில், அந்த அலுவலகத்திற்கு சென்று தங்கும் பழக்கம் கொண்டவராக இருந்த காரணத்தால், தொகுதியில் அவருக்கு இன்றும் நன்மதிப்பு இருந்து வருகிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா.சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேராசிரியர் அவர்கள் ஆற்றிய உரையை கேட்டு, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தார்கள் என்பது தான் வரலாற்று உண்மையாகும்.
பேராசிரியரும் நானும் :
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்ட அந்த ஆண்டு இன்னும் எனது மனதில் பசுமையாக இருக்கிறது. ஆம், 1996ஆம் ஆண்டு, பெரியகுளம் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தல் பணிகளை நிறைவு செய்தபிறகு, அவர் சென்னை திரும்பியபோது, சென்னை வாலஸ் கார்டன் 3வது தெருவில் இருந்த மணிச்சுடர் அலுவலகத்திற்கு பெட்டி, படுக்கையுடன் உதவியாளர் ஒருவருடன் வந்தார். அப்போது நான் அவரை வரவேற்றது தான், எங்கள் இருவருக்கான முதல் சந்திப்பு என்று கூறலாம். நான் 'ஸலாம்' சொன்னபோது, அதற்கு பதில் சொன்ன தலைவர், என்னை புன்முறுவலுடன் நோக்கி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில் நாங்கள் இருவரும் தங்கி இருந்தபோது, கடுமையான கொசுக்கடி இருந்தது. ஒரு மாநில பொதுச் செயலாளர் எப்படி கொசுக்கடியுடன் இந்த அலுவலகத்தில் தங்கி இருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், சமுதாய நலனுக்காக எந்தவித தியாகத்தையும் செய்யும் குணம் கொண்டவர் தான் பேராசிரியர் என்பது பின்னாளில் அவருடன் நெருங்கிப் பழகியபோது உணர முடிந்தது. சிராஜுல் மில்லத் அவர்கள் பேராசிரியர் கே.எம்.கே. மீது எப்போதும் மாறாத அன்பு கொண்டவர். எனவே, அவர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுகொள்வார். அப்படி தான் என்னுடைய விஷயத்தில் கூட, பேராசிரியர் அவர்கள் கூறிய ஆலோசனையை ஒன்றை ஏற்றுக் கொண்டு, ஓய்வுநேரத்தில் மற்றொரு அலுவலகத்தில் சென்று பணிபுரிய அனுமதி வாங்கிக் கொடுத்தார். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
மணிச்சுடரும் பேராசிரியரும் :
இந்தியாவில் இருந்து வரும் ஒரே தமிழ் முஸ்லிம் நாளிதழ் மணிச்சுடர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு நாளிதழ் நடத்துவது எவ்வளவு கடினமானது என்பதை ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். தற்போது சமூக வலைத்தளங்கள் நிறைய வந்துவிட்ட பிறகு, நாளிதழ்களைப் படிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட, மணிச்சுடர் நாளிதழ் தனது 41வது ஆண்டு பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த 41வது ஆண்டு பயணத்திற்கு முக்கிய தூணாக இருப்பவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தான். எப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட, நாளிதழை நிறுத்தவே கூடாது என்ற இலட்சியத்துடன், விளம்பரங்கள் இல்லாமல் கூட, அதனை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறார்.
மணிச்சுடர் நாளிதழில் வரும் செய்திகள் அனைத்தும் சமுதாய நலன் சார்ந்த செய்திகளாகவே இருக்கும். சகோதரத்துவத்தை பேணும் செய்திகளாகவே இருக்கும். கட்டுரைகள் அனைத்தும், தகவல் களஞ்சியங்களாக மட்டுமல்லாமல், சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்து இருக்கும். யாரையும் கடுமையாக விமர்சனம் செய்து செய்தி, அல்லது கட்டுரையை வெளியிடுவதை பேராசிரியர் அவர்கள் விரும்பவே மாட்டார்கள். பேராசிரியரின் இந்த விருப்பத்திற்கு ஏற்பவே, மணிச்சுடர் செய்திக்குழுவும் கவனத்துடன் செயல்படும். சிராஜுல் மில்லத் அவர்கள் காலத்தில் இருந்து நான் மணிச்சுடரில் பயணத்திற்குக் கொண்டு இருக்கிறேன். இடையில், தொலைக்காட்சி ஊடகங்களில் பயணம் செய்தாலும், மணிச்சுடருக்கு அவ்வப்போது என்னுடைய கட்டுரைகளை எழுதிகொண்டே இருந்தேன். அப்போதெல்லாம், சமுதாய நலன் சார்ந்த கட்டுரைகளை எழுத வேண்டும் என்றும், உலக முஸ்லிம்கள் குறித்தும், உலக முஸ்லிம் நாடுகள் குறித்தும், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் குறித்தும், பல மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் நிலை குறித்தும், உர்தூ மொழியின் மேன்மை குறித்தும் தகவல்களை திரட்டி எழுத வேண்டும் என என்னை ஊக்குவித்து, என்னுடைய எழுத்துப் பணிகளுக்கு மிகப்பெரிய தூணாக இருந்து வருகிறார்.
சமுதாய நலனே முக்கியம் :
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் அன்றாட வாழ்க்கையை நன்கு கவனித்தால், சமுதாய நலனே, தமது நலன் என்ற நோக்கியில் அவர் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ள முடியும். யாரிடமும் கோபம் கொள்ளவே மாட்டார். எத்தகைய சூழ்நிலையில் கூட, தவறான வார்த்தைகள் பேசவே மாட்டார். சிறிய மனிதர், பெரிய மனிதர் என்ற பாகுபாடு பார்க்காமல், அனைவரிடமும், சமமான அன்பு, செலுத்தி பழகுவார். உணவில் கூட, சாதாரண உணவை தான் எப்போதும் விரும்புவார். வீண் செலவு செய்வதை ஒருபோதும் விரும்பவே மாட்டார். பேராசிரியர் அவர்கள் ஒரு புத்தகப் பிரியர். ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தால், அதை முழுவதும் படித்துவிட்டு தான் மறுவேலையை பார்ப்பார். நூலைப் படிக்கும்போது, குறிப்புகளை எடுத்துக் கொண்டு, கவனத்தில் வைத்துக் கொள்வார். இந்த குறிப்புகள், அவருடைய அரசியல் மேடைகளில் மட்டுமல்லாமல், பொது மேடைகளிலும் பயன்படுத்திக் கொண்டு, மிகச் சிறந்த சொற்பொழிவை ஆற்றி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துவிடுவார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்டு வேதனை அடையும் அவர், அதற்கு எதிராக தனிப்பட்ட முறையிலும், பொதுவாழ்க்கையிலும் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார். எழுத்து வடிவத்திலும், பாஜகவின் சதித்திட்டங்களுக்கு எதிராக பேராசிரியர் அவர்கள் முழக்கங்களை கொட்டிக் கொண்டே இருக்கிறார். ஓர் இறைக் கொள்கை கொண்ட முஸ்லிம் சமுதாயம், அனைத்து சமுதாய மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற இஸ்லாமிய நெறியில் உறுதியாக இருக்கும் பேராசிரியர் அவர்கள், அதனை தம்முடைய வாழ்க்கையில் உறுதியாக கடைப்பிடித்து வருகிறார். இதன் காரணமாக தான், அனைத்து மத தலைவர்கள் கூட நேசிக்கும் தலைவராக பேராசிரியர் அவர்கள் இருந்து வருகிறார்கள். அனைத்து மொழிகளையும் நேசிக்கும் பண்பு கொண்ட பேராசிரியர் அவர்கள், உர்தூ மொழி மீது தனி காதல் கொண்டவர். அந்த மொழியில் இருக்கும் கவிதைகள் படித்து, கேட்டு ரசிக்கும் ஆர்வம் கொண்டவர். பேராசிரியரின் ஆங்கில மொழி புலமையை வியந்த பல அரசியல் தலைவர்களில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஒருவர் ஆவார். இதனை அவர் பலமுறை பொதுக்கூட்டங்களில் கூறியதை நான் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.
இப்படி சிறப்பான பண்புகள், குணங்கள், வியக்கத்தகுந்த பல ஆற்றல்கள் கொண்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு தமிழ்நாடு, 'தகைசால் தமிழர்' விருது, வழங்கி கவுரவிக்கிறது. இந்த கவுரவம், தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த கவுரவமாகும். தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமையாகும். இஸ்லாமிய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுக்கு 'தகைசால் தமிழர் விருது' வழங்கியது மூலம், அந்த விருதுக்கு பெருமை கிடைத்து இருக்கிறது என்ற கூறலாம். 'தகைசால் தமிழர் விருது' பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு உலக தமிழர்கள் சார்பாக மட்டுமல்லாமல், இஸ்லாமிய சமுதாயம் சார்பில் கூட வாழ்த்துகளை கூறி மகிழ்கிறோம்.
======================================
No comments:
Post a Comment