"மவுனமாக மாறிவிட்ட மும்பை மஸ்ஜித்துக்கள்"
ஒன்றியத்தில் மட்டுமல்லாமல், வட மாநிலங்களின் சிலவற்றில், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்கள் மீது இந்துத்துவா அமைப்புகளுக்கு எப்போதும் ஒரு கண் இருந்து வருகிறது. இந்து பண்டிகை காலங்களில், ஒருசில இந்து அமைப்புகள், மஸ்ஜித்துகள் முன்வந்து நின்றுகொண்டு, செய்யும் அட்டகாசங்கள் அண்மை காலங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த போக்கை, ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக மறைமுகமாக ஊக்குவித்து வருகின்றன. இதன் காரணமாக, பண்டிகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் பிற மத வழிப்பாட்டுத் தலங்கள், ஒருசில இந்துத்துவா அமைப்புகளால், சேதப்படுத்தப்படுகின்றன.
இதுஒருபுறம் இருக்க, தற்போது மற்றொரு பிரச்சினைகளையும் இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, வட மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள், இந்த பிரச்சினையை நாள்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். வட மாநிலங்களில் தற்போது மஸ்ஜித்துக்களின் ஒலிபெருக்கிகளில் அஸான் (பாங்கு) அழைப்பு சொல்லப்படுவதில்லை. மஸ்ஜித்துக்களில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்படுகின்றன. மீறி அஸான் அழைப்பு விடுக்கப்பட்டால், மஸ்ஜித் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றன. இவை அனைத்து மறைமுகமாக இல்லாமல் வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன.
மவுனமாக மாறிவிட்ட மும்பை மஸ்ஜித்துக்கள் :
இந்தியாவின் வணிக நகரமான மும்பையில் இருக்கும் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 21 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறார்கள். மும்பை முழுவதும் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்துக்கள் பரவி இருந்து வருகின்றன. ஏக இறைவனின் இல்லங்களான இந்த மஸ்ஜித்துக்களில் இருந்து நாள்தோறும் ஐந்து வேளையும் அஸான் (பாங்கு) சொல்லப்பட்டு வந்தது. அதன்மூலம் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மும்பைக்கு வரும் முஸ்லிம்கள் கூட, மஸ்ஜித் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு, தங்களுடைய தொழுகையை நிறைவேற்ற மஸ்ஜித்துக்களுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். அஸான் தொழுகைக்கான அழைப்பாக மட்டுமல்லாமல், மஸ்ஜித் இருக்கும் இடத்தையும் அடையாளம் காணும் ஒரு அற்புதமான பணியை செய்துகொண்டிருக்கிறது.
ஆனால் தற்போது மும்பையில் உள்ள மஸ்ஜித்துக்கள் அனைத்தும், அமைதியாக, மவுனமாக இருந்து வருகின்றன. அஸான் மூலம் ஐந்து வேளையும் தொழுகைக்கு முஸ்லிம்களை அழைக்க தற்போது ஒலி எழுப்படுவதில்லை என்பதால், மும்பை மஸ்ஜித்துக்கள், மவுனமாக மாறிவிட்டன. மரணம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கூட ஒலிபெருக்கி மூலம் சொல்லப்படுவதில்லை. இதனால், மொஹல்லாவில் இருக்கும் ஒருவர் மரணம் அடைந்ததை கூட, அந்த மொஹல்லாவாசிகள் அறிந்துகொள்ள முடியாத ஒரு கொடுமையான சூழ்நிலை, மும்பை மொஹல்லாக்களில் உருவாகிவிட்டது. இதனால் மும்பை மொஹல்லாக்கள் கூட மவுனமாக மாறிவிட்டன.
மத்திய மும்பையின் மதன்புராவில் உள்ள சன்னி பாடி மஸ்ஜித்துக்கு நேர் எதிரே, அயாஸ் முகமது ஹுசைனின் குடும்பம், சோட்டா இசா என்ற பழைய கட்டடத்தில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறது. ஓய்வுபெற்ற ரயில்வே காவலரான 65 வயதான ஹுசைனும், மனைவி ஷாமாவும் தங்கள் சுவர் கடிகாரத்திலோ அல்லது மொபைலிலோ தொழுகை நேரத்தை சரிபார்க்க வேண்டியதில்லை. 127 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித்தின் ஒலிபெருக்கிகள் ஒரு நாளைக்கு ஐந்து முறை அஸானை ஒலிபெருக்கின. இதனால், தொழுகைக்கான நேரத்தை சரியாக அறிந்துகொண்டு அயாஸ் முகமது ஹுசைனின் குடும்பம், சரியான நேரத்தில் தொழுகையை நிறைவேற்றி வந்தது.
ஒலிபெருக்கிகள் அகற்றல்
ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த ஜூன் 24 இரவு, போலீசார் மஸ்ஜித்தில் இருந்த ஒலிபெருக்கியை அகற்றினர். மும்பையில் போலீசார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒலி வழிகாட்டுதல்களை அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, மதன்புரா மற்றும் நகரத்தின் பல பகுதிகளில் இருக்கும் மஸ்ஜித்துக்களில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.
இதன் காரணமாக அங்கு வசிப்பவர்கள் தற்போது எதிர்பாராத அமைதியை அனுபவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக ஒலிபெருக்கிகளில் அஸானை கேட்ட மும்பை முஸ்லிம்கள், தற்போது புதிய விதி காரணமாக, அஸானை கேட்க முடியாது நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். ஆனால் பல ஆண்டுகளாக, ஒலிபெருக்கிகளில் அஸானை கேட்பதற்கு நாங்கள் பழகிவிட்ட தாங்கள், தற்போது புதிய விதிமுறைக்கு இணங்கி வருவதாக ஹுசைன் கூறுகிறார். ஒவ்வொரு நாளும், வீட்டின் கேலரியில் நின்றுகொண்டு, ஒலிபெருக்கிகள் பொருத்தப்படாத மஸ்ஜித்தின் பச்சை மினாரெட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். "மொஹல்லாவில் மையத் (இறப்புகள்) பற்றிய அறிவிப்பு கூட ஒலிபெருக்கிகளில் தற்போது அறிவிப்பு செய்யப்படுவதில்லை. இதனால்,மொஹல்லாவில் மரணம் அடைந்தவர் குறித்த தகவல்கள் தங்களுக்கு தெரிய வருவதில்லை. அண்மையில் கூட, ஜனாஸா (இறுதி ஊர்வலம்) எனது பாதையில் சென்ற பிறகுதான் அப்பகுதியில் ஒரு மரணம் நிகழ்ந்ததாக எங்களுக்குத் தெரியும்" என்று ஹுசைன் வேதனையுடன் கூறுகிறார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு, மஸ்ஜித்துக்களில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிட்டது. இதன் காரணமாக மும்பை முஸ்லிம்கள் ஒலிபெருக்கிகளில் இருந்து வரும் தொழுகை செய்வதற்கான அழைப்பு (அஸான்) இல்லாமல் வாழத் தொடங்கிவிட்டனர். மேலும், மும்பை முஸ்லிம் பகுதிகள் படிப்படியாகக் கற்றுக் கொண்டிருக்கின்றன. மஸ்ஜித்துக்களுக்கு எதிராக வலதுசாரி அமைப்புகளால் கடந்த காலங்களில் ஆங்காங்கே நடந்த போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, இது அரசியல் பின்னணியைக் கொண்ட ஒரு முயற்சியாகும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும், முஸ்லிம் அமைப்புகள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், இருக்கும் அதே நேரத்தில், அவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தின் உதவியை நாட விரும்புகிறார்கள்.
ஜனவரி 2025 தீர்ப்பின் மூலம், பம்பாய் உயர் நீதிமன்றம், ஒலிக் கட்டுப்பாட்டை மீறுவதற்கான தண்டனையை மூன்று நிலைகளாகப் பிரித்தது. எச்சரிக்கை, அபராதம் (ஒரு நாளைக்கு ரூ. 5,000) மற்றும் ஒலிபெருக்கிகளைப் பறிமுதல் செய்தல். ஆனால் பாஜக தலைவர் கிரித் சோமையா அதை ஒரு தனிப்பட்ட போராட்டமாக மாற்றிய பின்னரே, காவல்துறையினர் சத்த வழிகாட்டுதல்களை பகலில் 55 டெசிபல் மற்றும் இரவில் 45 டெசிபல் என கண்டிப்பாக அமல்படுத்தத் தொடங்கினர்.
மஸ்ஜித்துக்களின் அருகே போராட்டங்களை நடத்துவதை போலீஸ் குழுக்கள் தடுத்தபோது, நீதிமன்ற உத்தரவைப் பற்றி நினைவூட்டுவதற்காக அவர் காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கொடுத்ததால், நிலைமை மோசமாகிவிட்டது.
அஸான் செயலி அறிமுகம் :
மும்பை மஸ்ஜித்துக்களில் போலீசார் ஒலிபெருக்கிகளை அகற்றிய உடனேயே, ஆன்லைன் அஸான் என்ற செயலி, முஸ்லிம்களின் அருகிலுள்ள வழிபாட்டுத் தலத்திலிருந்து நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கான முக்கிய கருவியாக மாறியுள்ளது. இந்த செயலியில் அஸானை ஒளிபரப்பத் தொடங்கியபோது ஆரம்பத்தில், பலர் அதை எதிர்த்தனர். ஏனெனில் இது பம்பாய் உயர் நீதிமன்றத்தில் ஒலிபெருக்கிகள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தகவல் நகரம் முழுவதும் பரவியதால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இலவச அஸான் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு, முஸ்லிம் சுற்றுப்புறங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. பல மஸ்ஜித்துகளில் இருந்து ஒரேநேரத்தில் அஸான் அழைப்பு வருவதாக பெரும்பாலும் புகார்களைப் பெற்றுவந்த நிலையில், தற்போது, முஸ்லிம்கள் செயலிகள் மூலம் அஸான் ஒலியைக் கேட்டு தொழுகைக்கு செல்ல தயாராகிவிட்டனர். உலகளவில், பல மஸ்ஜித்துக்கள் செயலிகள் மூலம் அஸானை ஒலிபரப்புகின்றன என்ற தகவலும் அவர்களுக்கு ஆறுதலாக இருந்து வருகீறது.
முஸ்லிம்களின் ஈமான் :
மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றிவிட்டால் முஸ்லிம்கள் தொழுகை நேரத்தை அறிந்துகொள்ள முடியாமல் போகும் என இந்துத்துவா அமைப்புகள் கருதின. ஆனால், தற்போது ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டாலும், அஸான் செயலி மூலம் தொழுகைக்கான நேரத்தை சரியான முறையில் அறிந்துகொள்ள மும்பை முஸ்லிம்கள், மஸ்ஜித்துக்களுக்கு சென்று தங்களது கடமையை சரியான நேரத்தில் நிறைவேற்றி வருகிறார்கள். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் கூட, மஸ்ஜித்துக்களில் ஒலிபெருக்கி மூலம் அஸான் சொல்லப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், அந்த மாநிலங்களில் கூட, அஸான் செயலி மூலம் தொழுகையின் நேரத்தை முஸ்லிம்கள் அறிந்துகொள்கிறார்கள்.
பல வழிகளில் முஸ்லிம்களின் ஈமானை உடைத்து விடாமல், அவர்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்துக் கொண்டே இருக்கலாம் என இந்துத்துவா அமைப்புகள் விரும்பி, அதன்படி, தங்களுடைய சதி திட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. ஆனால், காசா மக்களின் துயரங்களை விட, தாங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஒன்றும் இல்லை என உறுதியாக நினைக்கும் வடமாநில முஸ்லிம்கள், தங்களுடைய ஈமான் ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஈமானில் உறுதியாக நிலைத்து நிற்கிறார்கள். நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மதிக்கும் இந்திய முஸ்லிம்கள், அதனை செயல்படுத்தும் அதேநேரத்தில், ஈமானில் நிலைத்து நின்று, இஸ்லாமிய நெறிமுறையின் படி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றி வருகிறார்கள். தடைகள் பல வந்தாலும், அதை துணிச்சலுடன் எதிர்கொண்டு, அமைதியான வாழ்க்கையை, இஸ்லாமிய வாழ்க்கையை, அனைத்து மக்களிடம் அன்பு செலுத்தி, சகோதரத்துவத்துடன் வாழும் வாழ்க்கையை இந்திய முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். மஸ்ஜித்துக்களில் இருந்து அஸான் ஒலி கேட்காமல் போகலாம். ஆனால், தங்கள் உள்ளங்களில் ஒவ்வொரு நேர தொழுகைக்கான நேரம் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று மும்பை முஸ்லிம்கள் சொல்வதுடன், நவீன விஞ்ஞான முறையை, சரியான முறையில் பயன்படுத்தும் வகையில் அஸான் செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து அதனை சரியான முறையில் பயன்படுத்தி வருவது உண்மையில் பாராட்ட வேண்டிய அம்சமாகும்.
(குறிப்பு : தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் வெளிவந்த Why Mumbai's mosques are falling silent என்ற கட்டுரையை அடிப்படையாக வைத்து, இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.)
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment