Tuesday, August 19, 2025

இந்தியாவின் தேர்வு நீதியரசர் சுதர்சன் ரெட்டி..!

" குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: சில சுவையான குறிப்புகள் "

மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் திடீரென பதவி விலகி, மாயமான  நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்ட அட்டவணையின் படி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் களம் விறுப்பு அடைந்துள்ளது.

வேட்பாளர்கள் அறிவிப்பு :

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)  சார்பில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

இரு அணிகளும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துவிட்ட நிலையில், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க உரிமை உள்ளது. எனவே மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை அளித்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

குடியரசுத் துணைத் தலைவர் பதவி என்பது அரசியலமைப்பின் படி மாநிலங்களவை தலைவராக அவரது செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகும். இது இந்திய அரசியலமைப்பில் 2வது உயரிய பதவியாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் குடியரசுத் துணைத் தலைவர் என்பவர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருக்க மாட்டார். மேலும் குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் பட்சத்தில் குடியரசுத் துணைத் தலைவரே தற்காலிகமாக குடியரசுத் தலைவராக பதவி வகிக்க முடியும். இப்படி குடியரசுத் துணைத் தலைவர் குறித்தும் அவரது பொறுப்புகள் குறித்தும் அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி 15வது குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.

யார் சிறந்த வேட்பாளர்:

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களில் அந்த பொறுப்புக்கு தகுதியான வேட்பாளர் என்ற கேள்வி நம்முன் இருந்து வருகிறது. 

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநில முன்னாள் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராக இருந்து பாஜக எம்.பி.யாக கூட்டணி கட்சிகளில் தயவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரால் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் எந்தவொரு குறிப்பிட்ட நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் உரிமைக்காக அவர் ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை. பாஜகவின் விசுவாசியான அவர், போட்டியில் வெற்றி பெற்றால் தங்கரை போல, மற்றொரு அடிமை குடியரசுத் துணைத் தலைவராகவே செயல்படுவார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் வெளியிட்ட சமூக வலைத்தளத்தில் அவரது அடிமைத்தனம் வெளிச்சமானது.

மாறாக, இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மேனாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டி, நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்தி பிடித்த பண்பாளர். தனது பதவிக்காலத்தில் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகளை முழுமையாக பின்பற்றி செயல்பட்டவர். 

ஆந்திர மாநிலத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, சட்டம் படித்து வழக்கறிஞர், நீதிபதி என வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தவர். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 42 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தவர். எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத உயர்ந்த மனிதர். இப்படிப்பட்ட ஒரு மனித நேயரை தான் இந்தியா கூட்டணி வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. நம்மை பொருத்த வரை, குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பு மிகவும் தகுதியான நபர் நீதியரசர் சுதர்சன் ரெட்டி என்றே கூறலாம்.

காரணம், தற்போது மத்திய பாஜக ஆட்சியில் அனைத்து அமைப்புகளும் சீர்குலைந்து விட்டன. சுதந்திரமாக செயல்பட வேண்டிய அனைத்து அமைப்புகளையும் பாஜக தனது துணை அமைப்புகளாக மாற்றிக் கொண்டு செயல்படுகிறது. இதனால் அரசியலமைப்பு சட்டமே தற்போது ஆபத்தில் உள்ளது. இந்தியாவின் அடிப்படை கொள்கைகளான மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் ஆகியவை கேள்விக்குறியாகி உள்ளன.

அரசியலமைப்பு, பன்முகத்தன்மை, சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவர் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்று, நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்னாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டியின் தேர்வு மூலம் மட்டுமே கிடைக்கும் என்பது உறுதி.

பாகுபாடுகளை மறந்து :

நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து நாடாளுமன்ற  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சி பாகுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒரு சிறந்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். நாடும் நாட்டு மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நாடு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்தியா கூட்டணி மிகச்சிறந்த வேட்பாளராக நீதியரசர் சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்து இருக்கிறது என்றே கூற வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் நீதியரசுர் சுதர்சன் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களை அண்மையில் சென்னையில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து உத்தரப் பிரதேசம் செய்ய அவர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்து ஆதரவு கோரினார். குடியசுத் துணைத் தலைவர் தேர்தல் நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அளவுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்கவில்லை என்றாலும், வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்தலில் சிறந்த வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

கடைசியாக,"நாடு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மேனாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்து இந்தியா கூட்டணி ஒரு நல்ல முடிவு செய்துள்ளது. கட்சிப் பாகுப்பாடுகளை மறந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீதியரசர் சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்வதே நாட்டுக்கு நலன் பயக்கும்".

No comments: