"ஒரு ஏழை முஸ்லிம் தையல் கலைஞரின் மகன் பட்டயக் கணக்காளர் ஆன சாதனை கதை"
இந்திய முஸ்லிம்கள் ஒன்றிய பா.ஜ.க.வின் ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாள்தோறும் சந்திக்கும் நெருக்கடிகள், பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்திய முஸ்லிம்கள் எப்போதும் ஒருவித பதற்றத்துடன் வாழ வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்தாலும் கூட, முஸ்லிம் இளைஞர்கள், தங்களது கவனத்தை கல்வியில் செலுத்தி, சாதித்து வருகிறார்கள். நெருக்கடிகள் ஒருபக்கம் தொடர்ந்தாலும், கல்வி தான் வாழ்க்கையை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை நன்கு உணர்ந்த அவர்கள், தங்களுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு, கல்வியில் முழு கவனம் செலுத்தி, சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலைமை மிகவும் பின்தங்கி இருப்பது உண்மையாகும். இது ஒருபுறம் இருந்தாலும், மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், அதையும் தாண்டி, ஒருசில முஸ்லிம் இளைஞர்கள் கல்வியில் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். உயர்கல்வியில் உச்சத்தை எட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இந்திய குடிமைப் பணிகளில் கூட முஸ்லிம் இளைஞர்கள் தற்போது சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் கூட, கல்வி மீது தங்களுடைய கவனத்தை திருப்பி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக சாதித்து வருகிறார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் அண்மை காலங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஒரு ஏழை முஸ்லிம் தையல் கலைஞரின் மகன் பட்டயக் கணக்காளர் தேர்வில் வெற்றிபெற்று, தனது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அந்த இளைஞரின் சாதனை கதையை நாமும் கொஞ்சம் அறிந்துகொள்வோம். வாருங்கள்.
ஏழ்மையான குடும்பப் பின்னணி :
மகாராஷ்டிரா மாநிலம் துலே நகரில், ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஒரு இளைஞர், முதல் முஸ்லிம் பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) ஆனதன் மூலம், தனது நகரத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஒரு தையல்காரரின் மகனான முகமது காஷிஃப் குலாம் ரப்பானி, நாட்டின் மிகக் கடினமான தொழில்முறை தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் சி.ஏ. இறுதி தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
காஷிஃபின் வெற்றிப் பயணம் எளிதானது அல்ல. நிதி ரீதியாகச் சிரமப்பட்ட குடும்பத்தில் வளர்க்கப்பட்ட காஷிஃப்பின் தந்தை குலாம் ரப்பானி, வறுமை தனது மகனின் கனவுகளைத் தடம் புரள விடவில்லை. தனது மகனின் கல்வி தடையின்றித் தொடர தையல்காரராக அயராது உழைத்தார். கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், காஷிஃபின் தந்தை குலாம் ரப்பானி வறுமை தனது மகனின் கனவுகளைத் துரத்துவதைத் தடுக்க விடவில்லை. அவர் காஷிஃப்பை எல்லா வகையிலும் ஆதரித்தார். அவரது அயராத ஆதரவு இப்போது பலனளித்துள்ளது. அதன் பலன் இன்று நம் கண் முன் உள்ளது. காஷிஃப் தனது முதல் முயற்சியிலேயே கடுமையான சி.ஏ. தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார்.
உர்தூ மொழியில் ஆரம்பக் கல்வி :
முகமது காஷிஃப் குலாம் ரப்பானி தனது ஆரம்பக் கல்வியை துலேவில் உள்ள முஹம்மதியா ஆண்கள் உர்தூ பள்ளியில் தொடங்கினார். பின்னர் எஸ்.எஸ்.வி.பி.எஸ்., கல்லூரியில் 12வது அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் ஜெய் ஹிந்த் கல்லூரியில் ஒரு வருடம் பி.காம். படித்த அவர், பின்னர் பாரம்பரிய படிப்பை விட்டுவிட்டு, சி.ஏ. தேர்வுக்குத் தயாராவதில் தனது கவனத்தை முழுவதுமாக மாற்றினார்.
புனேவில் உள்ள அனாம் & அசோசியேட்ஸில் சி.ஏ., நிறுவனத்தில் சேர்ந்து, பட்டயக் கணக்காளர் இஜாஸ் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ், காஷிஃப் தனது அடுத்த பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் 'இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவன சங்கத்தில்' தனது பயிற்சிப் படிப்பை முடித்தார். பின்னர் துலேவில் உள்ள அசிம் கான் படிப்பு மையத்தில் சேர்ந்து இறுதித் தேர்வுக்குப் படித்தார்.
பட்டயக் கணக்காளர் துறையில் கவனம் :
தனது பட்டயக் கணக்காளர் ஆர்வம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாதனை இளைஞர் காஷிஃப், "பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் பொறியியல், கற்பித்தல் அல்லது சட்டம் போன்ற துறைகளைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் நான் நம் சமூகத்தில் சுற்றிப் பார்த்தபோது, பட்டயக் கணக்காளர்கள் பற்றாக்குறையைக் கண்டேன். அந்த இடைவெளியை நிரப்ப இந்தத் துறையில் அடியெடுத்து வைக்க முடிவு செய்தேன்" என்று பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார்.
மேலும், "நான் கடினமாக உழைத்து முழு கவனம் செலுத்தினேன். எனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. அது, எப்படியாவது பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) ஆக வேண்டும் என்பதாக இருந்தது. எனது ஆர்வம் மற்றும் கடின முயற்சியால், முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று காஷிஃப் தெரிவித்து, மற்ற இளைஞர்களுக்கும் ஒரு நல்ல வழியை காண்பிக்கிறார்.
காஷிஃபின் சாதனை ஒரு தனிப்பட்ட ஒருவரின் வெற்றி மட்டுமல்ல. மகாராஷ்டிரா மாநிலம், துலே முழு நகரத்திற்கும் பெருமையான தருணமாகும். அவரது வெற்றியை சமூகத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பரவலாகக் கொண்டாடியுள்ளனர். அவர்கள் பல பின்தங்கிய மாணவர்களுக்கு நம்பிக்கையின் செய்தியாக இதைப் பார்க்கிறார்கள்.
குவியும் பாராட்டுகள் :
"இது ஒரு தனிப்பட்ட வெற்றிக் கதை மட்டுமல்ல," என்று பிரபல வழக்கறிஞர் சுபைர் கூறி, தனது அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். "வலுவான மன உறுதியுடன் இருந்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமில்லை என்பது அனைத்து இளைஞர்களுக்கும், குறிப்பாக நிதிப் பிரச்சினைகளால் படிப்பைக் கைவிடுபவர்களுக்கு ஒரு செய்தியாக காஷிஃப்பின் வெற்றி இருந்து வருகிறது " என்றும் அவர் பாராட்டு தெரிவிக்கிறார்.
முகமது காஷிஃபின் வெற்றி அவரது குடும்பம், பள்ளி மற்றும் நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பெரிய கனவுகளை அடைய விரும்பும் மற்றவர்களுக்கு அவர் இப்போது ஒரு முன்மாதிரியாக நிற்கிறார். இந்த சாதனையின் மூலம், ஆர்வம், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு அனைத்து தடைகளையும் உடைக்கும் என்பதை காஷிஃப் நிரூபித்துள்ளார். ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அவரது சாதனை துலே நகரம் முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. சமூக சேவையில் தனது கண்களை பதித்துள்ள காஷிஃப், பொருளாதாரக் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களை தொழில்முறை சிறப்பைத் தொடர வழிகாட்டவும் ஊக்குவிக்கவும் இப்போது இலக்கு வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் துலேவில் ஒரு ஏழை தையல்காரரின் மகனான முகமது காஷிஃப் குலாம் ரப்பானி, அந்த நகரத்தின் முதல் முஸ்லிம் பட்டய கணக்காளர் (சி.ஏ.) ஆகி சாதனை புரிந்து இருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு பெருமையாகும். நிதி சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவரது தந்தை குலாம் ரப்பானி தனது மகனின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்தார். காஷிஃபின் இந்த சாதனை இப்பகுதியில் உள்ள நலிந்த மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கருதப்படுகிறது. காஷிஃபின் வெற்றி அவரது விடாமுயற்சிக்கும் அவரது தந்தையின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் சான்றாகக் கொண்டாடப்படுகிறது. இது தனிப்பட்ட ஒரு இளைஞரின் வெற்றியை விட அதிகமாகும். இது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தன்னம்பிக்கை செய்தியாகும். முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள் என்று உரக்கச் செல்லும் தன்னம்பிக்கையாகும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment