Wednesday, August 13, 2025

தகைசால் தமிழர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்....!

 

"சமுதாய சேவகன், ஒளிவீசும் காவலன்

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாகிப்"

தன்னலம் மறந்து சமுதாய நலனுக்காக வாழ்பவர்

ஒளி வீசும் நெறிகாட்டி காவலனாகக் காப்பவர்

அவர் சேவை ஒரு ஒளிக் கோபுரம்

அவர் வாழ்வு ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் நிழல் !


(வாய்ஸ் ஓவர்)

பிரிட்டிஷ் ஆட்சியில், மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒரு குக்கிராம் அது. நாட்டின் மற்ற கிராமங்களை போலவே, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த  திருநல்லூர் என்ற சிறிய கிராமத்தில், பிறந்த ஒரு குழந்தை, பின்னர் மணலில் ஆனா, ஆவன்னாவை எழுதி படித்து, பிற்காலத்தில் இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தியது. அது மட்டுமல்லாமல், இந்திய முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவனாகவும் மாறியது.

இந்த ஆச்சரியமான விஷயம், நம்மில் பலருக்கு வியப்பை தரலாம். ஆனால், அதுதான் உண்மை வரலாறு. தன்னலம் மறந்து, சமுதாய நலனுக்காக வாழும், அந்த ஒப்பற்ற தலைவனின் வாழ்க்கைப் பயணம், இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் நிழலாக இருந்து வருகிறது. அந்த ஒப்பற்ற தலைவனின் வரலாற்றை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆம், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் என்ற அந்த சமுதாய சேவகன் ஆற்றிய, இன்னும் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கின்ற, சமுதாயப் பணிகள் அனைத்துமே, மக்கள் நலன்  சார்ந்த பணிகளாகவே இருந்து வருகின்றன.  

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூர் என்ற சிறிய கிராமத்தில், 1940ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி, முகம்மது ஹனிப் - காசிம் பீ தம்பதிக்கு மகனாக பிறந்த அவர், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, அங்கு இருந்த ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் 3வது வகுப்பு வரை படித்தார். 30 அல்லது 40 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த அந்த கிராமத்தில், முஸ்லிம் குடும்பங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு, சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தன. அதில், காதர் மொகிதீன் அவர்களின் குடும்பமும் ஒன்றாகும்.

சுதந்திரத்திற்கு முந்திய அந்த காலத்தில், சிலேட், சாக்பிஸ், பென்சில்  போன்ற வசதிகள் எதுவும் இல்லாததால், பள்ளிக்கூடத்தில் குவிந்து கிடக்கும்  மணலில், மாணவர்களுக்கு ஆனா, ஆவன்னா எழுத சொல்லிக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதன்படி, காதர் மொகிதீனும், மணலில் ஆனா, ஆவன்னாவை எழுதி பழகி, தனது ஆரம்ப கல்வியை கற்றார். நாடு விடுதலை அடைந்தபிறகு, அந்த சிறிய பள்ளிக்கூடமும் மூடப்பட்டது.

எனவே, ஊருக்கு வெளியே இருந்த திண்ணைப் பள்ளியில் படிக்க வேண்டிய கட்டாய சூழல் காதர் மொகிதீனுக்கு ஏற்பட்டது. இதனால், தினமும் 5 அல்லது 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று, திண்ணைப் பள்ளியில் படித்தபோது, அவருக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயதைச் சேர்ந்த நல்லான் என்ற பெரியவர் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். பெரியவர் நல்லான் சொல்லிக் கொடுத்த, தமிழ், கணக்கு, வரலாறு உள்ளிட்ட பாடங்கள் அனைத்தும், காதர் மொகிதீன் அவர்களின், இளமை கால, அறிவுக்கு விதைகளாக அமைந்தன.   

காதர் மொகிதீன் அவர்களின் தந்தை, ஒரு விவசாயியாக மட்டுமல்லாமல், தோல் வியாபாரியாகவும் இருந்தவர். ஆழமான மார்க்க பற்று மிக்கவர். கிராம மக்கள் இடையே அவ்வப்போது ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் பழக்கம் கொண்டவர். இதனால், அனைத்து சமுகத்தினரும் அவரை ஒரு குருவாகவே மதித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், திண்ணைப் பள்ளியில், தனது ஆரம்பக் கல்வியை பயின்று கொண்டிருந்தபோது, 1948 ஆம் ஆண்டில், காதர் மொகிதீனின் குடும்பம், பல்வேறு காரணங்களால், திருநல்லூர் கிராமத்தில் இருந்து, திருச்சிக்கு இடம்பெயர்ந்தது. திருச்சிக்கு வந்தபிறகு, ஸ்ரீராம் என்ற ஆரம்ப பள்ளிக்கூடத்தில் சேர்ந்த காதர் மொகிதீன், அங்கு ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர், செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து, 11வது வகுப்பு வரை படித்தபோது, படிப்பில் சிறந்த விளங்கிய அவர், அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று பரிசுகளை அள்ளினார்.

பள்ளிப்படிப்பை நிறைவு செய்தபிறகு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.யூ.சி. வகுப்பில் சேர்ந்து, நன்கு படித்து தேர்ச்சி பெற்ற அவர், பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடப்படிப்பில் சேர்ந்து படித்து தேர்ச்சி  பெற்றார். பிறகு, சட்டக் கல்லூரியில் ஓராண்டு படிப்பில் சேர்ந்து படித்த அவர், பின்னர், சென்னை மாநில கல்லூரியில் எம்.ஏ. வரலாறு பாடப்பிரிவில் சேர்ந்து படித்தபோது, அங்கு, மிகச் சிறந்த மாணவராக இருந்தால், அவருக்கு கார்ட்டன் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் கிடைத்தன.

கல்லூரி படிப்பை நிறைவு செய்தபின்னர், நாகூரின் வரலாறு என்ற தலைப்பில், ஓராண்டு காலம் ஆய்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வரலாற்று துறைக்கு யாரும் ஆசிரியர் இல்லாத நிலை இருந்ததால், கல்லூரி நிர்வாகம் அழைத்ததன் பேரில், ஜமால் முகமது கல்லூரியில், 1965ஆம் ஆண்டு வரலாற்றுத்துறை ஆசிரியராக அவர் பணியில் சேர்ந்தார். அங்கு, 1980 வரை. சுமார் 15 ஆண்டுகள்  பேராசிரியர் பணியில் மிகவும் சிறந்த முறையில் கல்வி சேவை ஆற்றினார்.

தனது கல்லூரி ஆசிரியர் பணியின்போது, ஏழை மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த பேராசிரியர் அவர்கள், அந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் தானே செலுத்தி, பலருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றினார். இதன் காரணமாக குடும்ப செலவுகளை குறைத்துக் கொண்டு, எளிய வாழ்க்கையை வாழ வேண்டிய சூழலுக்கு அவர் தள்ளப்பட்டபோது, மறைந்த அவரது துணைவியார் லத்திபா பேகம், அனைத்தையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார். துணைவியார் லத்திபா பேகம் மட்டுமல்ல, அவரது மூன்று மகனார்கள் கூட, தந்தைக்கு துணையாக இருந்து, அவரது சமுதாய சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தற்போதும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, பேராசிரியர் ஆற்றிவரும் பணிகளுக்கு மகனார்கள் துணையாக இருந்து வருகிறார்கள்.

தென்னகத்து அலிகர் என அழைக்கப்படும் ஜமால் முகமது  கல்லூரியின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் நலன்களுக்கும், தம்முடையப் பணிக் காலத்தில் எல்லா வகையிலும் முழு மனதுடன் ஈடுபட்டு, பாடுபட்ட அவர்,  'திருக்குர்ஆன் மஜ்லிஸ்' என்னும் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தார். அப்போது, கல்லூரி வளாகத்தில் இருக்கும் மஸ்ஜித்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குர்ஆன் விளக்கச் சொற்பொழிவுகள் நடத்தப்பட முக்கிய காரணமாக இருந்து வந்தார்.

காதர் மொகிதீனின் சுறுசுறுப்பான பணியால் கவரப்பட்ட கல்லூரி நிர்வாகம், கல்லூரி நூலகத்திற்குப் பொறுப்பாளராகவும், ஆண்டு மலர் பொறுப்பாசிரியராகவும் அவருக்கு பொறுப்பு அளித்தது. ஒருமுறை கவிஞர் கண்ணதாசன் கல்லூரிக்கு வந்தபோது, அவரிடம் கவிதை எழுதச் சொல்லி, மலரில் வெளியிட்ட அனுபவம் பேராசிரியருக்கு உண்டு. ஏழை, எளிய மாணவர்கள் தங்கிப் படிக்கும் 'மாஸ்க் ஹாஸ்டல்' என்னும் விடுதியை 15 ஆண்டுகள் நடத்தியபோது, ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் உயர்ந்து மேன்மையடைய அந்த ஹாஸ்டல் வழிவகுத்துக் கொடுத்தது.

இந்த ஹாஸ்டலில் தங்கி படித்த பல மாணவர்கள், தற்போது, உலக அளவில் புகழ்பெற்று இருப்பது, பேராசிரியருக்கு கிடைத்த பெருமையாகும். பல மாணவர்கள் ஆங்கில மொழி அச்சம் காரணமாக, கல்வியில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததை அறிந்த பேராசிரியர், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், பாடங்களை நடத்தி, சிறந்த வழிக்காட்டியாக விளங்கினார்.

பேராசிரியரின் சிறந்த வழிக்காட்டுதல் காரணமாக, கல்லூரியை விட்டு செல்ல முடிவு செய்த ஷாகுல் ஹமீது  என்ற மாணவர், தன்னுடைய முடிவை திரும்ப பெற்று, எம்.ஏ. பொருளாதார பாடத்தில், நன்கு படித்து தேர்ச்சி பெற்று, பின்னர், தம்முடைய சொந்த ஊர் புதுவயலில், டுடோரியல் கல்லூரி நடத்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுத்த வரலாறும் உண்டு.  

பேராசிரியர் அவர்கள், 8வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, திருச்சி நானா முனா தோல் மண்டியில், கணக்குப்பிள்ளையாக இருந்த அவரது மாமா ரசூல் என்பவர், உர்தூ மொழியில் மிகச் சிறந்த அறிஞராக இருந்தவர். அவரிடம் பழகிய நாட்களில், கவ்மை நாம் எப்போதும் மறக்க கூடாது என்று அவர் காதர் மொகிதீன் அவர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். கவ்மிற்காக நாம் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். அப்போது, கவ்ம் என்பதற்கு சரியான அர்த்தம் தெரியாத காரணத்தால், மாமா ரசூல் என்ன சொல்கிறார் என்ற குழப்பமும், சந்தேகமும் பேராசிரியருக்கு இருந்துகொண்டே இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருநாள் திருச்சியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, அங்குள்ள ஒரு சுவரில், கவ்மின் காவலர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களே வருக என்ற விளம்பரம் அவரது கண்ணில் பட்டது. அப்போது தான், கவ்ம் என்பதற்கு சமுதாயம் என்பது தான் உண்மையான அர்த்தம் என பேராசிரியருக்கு புரிய ஆரம்பித்தது. இந்த புரிதல் தான், அவரது அரசியல் பயணத்திறகு ஆரம்ப புள்ளியாக அமைந்து, சமுதாயத்திற்கு சேவை செய்யும் நோக்கில் பயணிக்கத் தொடங்கியது.   

கல்லூரியில் மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில், 1958ஆம் ஆண்டு திருச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு நடைபெற்றது. அன்றைய தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில், கேரளத்து சிங்கம் முகமது கோயா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, தனது அரசியல் ஆலோசகராகவும், உற்ற தோழராகவும் இருந்த மறுமலர்ச்சி ஆசிரியர் எம்.எம்.யூசுப் சாஹிப் அவர்களுடன் இணைந்து, ஊழியர் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை உபசரிக்கும் பணியில் காதர் மொகிதீன் அவர்கள் ஈடுபட்டார்.

இப்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகில், அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், 1980ஆம் ஆண்டு, பேராசிரியர் பணியில் இருந்து  முழுமையாக விலகி, முழு நேர அரசியல் சேவையில் ஈடுபட்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திருச்சி இரண்டாவது தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட அவர், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கல்லூரி பணியில் இருந்து விலகிய பிறகு, முபராக் என்ற கையெழுத்த பிரதி ஒன்றை நடத்திய பேராசிரியர், தாருல் குர்ஆன் என்று இதழை ஆரம்பித்து, பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதினார். இந்த இரண்டு இதழ்களும், மத நல்லிணக்கம், சகோதர சமுதாயத்தினருடன் இணைந்து அமைதியுடன் வாழ்தல், மத ஒப்பியல் போன்ற கருத்துக்களைக் கொண்டவையாக இருந்தன. மேலும்,  ஒரு மனிதன் எத்தனை நாட்கள் குளிக்காமல் இருக்கலாம் என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட அவர், 40 நாட்கள் வரை குளிக்காமல் இருக்கலாம் என்ற ஆய்வின் முடிவை தம்முடைய பத்திரிக்கையில் வெளியிட்டார்.

இப்படி தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கையாளராக திகழும் பேராசிரியர் அவர்கள், தற்போது இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரே முஸ்லிம் நாளிதழ் என்ற பெருமை பெற்ற மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராக இருந்து, 41வது ஆண்டில் அந்த நாளிதழை சிறப்புடன் கொண்டு செல்கிறார். மணிச்சுடர் நாளிதழுக்காக அவர் செய்துவரும் தியாகங்களை சொல்ல வார்த்தைகளை இல்லை.

மணிச்சுடர் ஊழியர்களின் நலனின் பெரிதும் அக்கறை கொண்ட அவர், கொரோனா பேரிடர் காலத்தில், பத்திரிகை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டபோது கூட, ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், சம்பள பணத்தை அனுப்பி வைத்து, அவர்களின் பொருளாதார நெருக்கடிகளை நீக்கி, அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியை உருவாக்கினார். மணிச்சுடர் முன்னாள் ஊழியர்களிடமும் தொடர்பு கொண்டு, ஏதாவது உதவி தேவையெனில், தாம் செய்த தயாராக இருப்பதாக கூறி, கொரோனாவின் துயரங்களால் யாரும் பாதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.  

முழு நேர அரசியலில் ஈடுபட்ட பின்னர் அவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் மாநில கல்வி கலாச்சார பிரிவு செயலாளர், மாநில இளைஞரணி பொறுப்பாளர், மாநில அமைப்புச் செயலாளர், மாநில பொதுச் செயலாளர், மாநில தலைவர், தேசிய துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர், தற்போது மாநில தலைவராகவும், தேசிய தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் இஸ்லாமிய நெறியை பலரும் ஏற்றுக் கொண்ட காலகட்டங்களில், நாட்டின் சில மாநிலங்களில் கலவரங்கள் வெடித்தன. ஆனால், தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. இது, வடமாநில தலைவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதற்கு விளக்கம் அளித்த பேராசிரியர் அவர்கள், இஸ்லாம் தமிழகத்திற்கு எங்கிருந்தோ வந்த மதம் கிடையாது. அது தமிழர்களின் நெறி. திருவிழாவில் காணாமல் போன குழந்தை ஒன்று, மீண்டும் கிடைத்தால், அந்த குழந்தையை எப்படி ஒரு தாய் கட்டியணைத்து கொள்வாளோ, அப்படி தான் தமிழர்கள், இஸ்லாமிய மார்க்கத்தை கட்டியணைத்து கொண்டார்கள் என்று அருமையான ஒரு விளக்கத்தை அளித்தார்கள். அத்துடன், ஒன்றே குலம்., ஒருவனே தேவன்., யாதும் ஊரே, யாவரும் கேளிர் போன்ற தத்துவங்கள் இஸ்லாத்தின் கொள்கையே என விளக்கம் அளித்தார்.

மேலும், இஸ்லாம் தமிழகத்திற்கு வந்த மதமா, சொந்த மதமா என்ற தலைப்பில் தொடர் கட்டுரையை, தொடர்ந்து 10 ஆண்டு காலம் எழுதி வெளியிட்டார்கள். தமிழர்களின் நெறியும், இஸ்லாமிய நெறியும் ஒன்று என்பதற்தான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன என்பதையும் ஆதாரப்பூர்வமாக, அருமையாக விளக்கம் அளித்தார்கள்.

தமிழ் மொழியில் இருந்து தான், பிற மொழிகள் பிறந்தன என்பதையும், தமிழ் மொழியில் உள்ள பல சொற்கள், பிற மொழிகளில் உள்ளன என்பதையும் 1984 ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டு காலம் ஆய்வு செய்து வெளியிட்டார்கள்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மீது எப்போதும் மிகுந்த அன்பு கொண்ட பேராசிரியர் அவர்கள், சென்னை மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு காயிதே மில்லத் மன்ஸில் என பெயர் சூட்டியவர். மேலும், தலைநகர் டெல்லியில் விரைவில் திறக்கப்பட இருக்கும் மத்திய தலைமை நிலையத்திற்கு, காயிதே மில்லத் சென்டர் என பெயர் சூட்டி அழகு பார்க்கும் தலைவராகவும் இருந்து வருகிறார்.

சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில், காயிதே மில்லத் மணிமண்டபம் உருவாக காரணமாக இருந்தவர். காயிதே மில்லத் நூற்றாண்டு விழாவை, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் மட்டுமல்லாமல் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் நடக்க துணை நின்றவர். இந்திய அரசின் சார்பில், காயிதே மில்லத் தபால் தலை வெளியிட மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் சிராஜுல் மில்லத், இ.அஹமத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.

சென்னையில் தங்கி இருக்கும் நாட்களில், வெள்ளிக்கிழமை வந்துவிட்டால், திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசலுக்கு சென்று, ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அங்குள்ள காயிதே மில்லத் அடக்கஸ்தலத்திற்கு சென்று, ஜியாரத் செய்வதை வழக்கமாக கொண்டவர். காயிதே மில்லத் அவர்களின் எளிமை, அனைவரையும் அரவணைத்து செல்லும் நற்பண்பு, மாற்றாரும் மதிக்கும் குணம் ஆகிய அனைத்தையும் தம்முடைய வாழ்விலும் அவர் உறுதியாக கடைப்பிடித்து வருகிறார். காயிதே மில்லத் மீது கொண்ட அன்பின் காரணமாக, திருச்சியில் தாம் வாழும் பகுதிக்கு காயிதே மில்லத் வீதி என்ற பெயர் சூட்ட காரணமாக இருந்தவர்.

இன்று உலகெங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய காயிதே மில்லத் பேரவை என்ற அயலக முஸ்லிம் லீகர்களின் அமைப்பை 1992ஆம் ஆண்டு முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியவர் பேராசிரியர் காதர் மொகிதீன் சாகிப்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப கொள்கை முரண்பாடு கொண்டவர்களிடமும் கூட, அன்பு செலுத்தும் தலைவராக பேராசிரியர் இருந்து வருகிறார். இதன் காரணமாக தான் முஸ்லிம் லீக் தொண்டர்கள் மட்டுமல்லாமல், மற்ற சமுதாய பெருமக்களும், காயிதே மில்லத்தாய் வாழும் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் என போற்றி மகிழ்கிறார்கள்.

காயிதே மில்லத் அவர்களிடம் மட்டுமல்லாமல், சிராஜுல் மில்லத் மற்றும் முஸ்லிம் லீக் மூத்த தலைவர்கள், வாணிம்பாடி அப்துல் லத்திப் சாஹிப், வந்தவாசி வஹாப் சாஹிப், மறுமலர்ச்சி யூசுப் சாஹிப் ஆகிய அனைத்து தலைவர்கள் மீதும் அன்பு கொண்ட பேராசிரியர் அவர்கள், அவர்களுடன் நெருங்கி பழகியபோது, சமுதாய நலன் குறித்து மட்டுமே எப்போதும் விவாதிக்கும் குணம் கொண்டவராக இருந்தார்.

முஸ்லிம் சமுதாயத்தின் மிக சிறந்த கட்டமைப்பு  மொஹல்லா ஜமாத் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் பேராசிரியர் காதர் மொகிதீன். எனவே தான், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மொஹல்லா ஜமாத்தும் முன்மாதிரி ஜாமத்தாக உருவாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். முன்மாதிரி மொஹல்லா ஜாமத்தை தேர்வு செய்து, முஸ்லிம் லீக் மாநாடுகளில் விருதுகளை வழங்கி கவுரவித்தும் வருகிறார். மார்க்க விஷயங்களில் உலமாக்களின் சொற்களை கேட்க வேண்டும். அவர்களின் ஆலோசனைபடி நடக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தும் தலைவராக, பேராசிரியர் இருந்து வருகிறார்.

2004ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் அவர்கள், அவை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்ற உறுப்பினராக இருந்து, அனைத்து உறுப்பினர்களிடம் இருந்து மிகுந்த பாராட்டைப் பெற்றவர். தனது பதவி காலத்தில், அனைத்து முஸ்லிம் எம்.பி.க்களையும் ஒன்று திரட்டி, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அழைத்துச் சென்று, இந்திய முஸ்லிம்களின் உண்மை நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக, ரங்கநாத் மிஸ்ரா, சச்சார் கமிட்டி ஆகியவை உருவாக மூலக் காரணமாக இருந்தவர் பேராசிரியர் என்றே கூறலாம்.  

ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கோரிக்கைகளை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு, திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான சூரத்துல் ஃபாத்தியாவை மேற்கோள் காட்டி, சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுப்பு எடுத்தவர் பேராசிரியர். முதலில் ஆட்சியாளர்கள் செய்யும் நன்மையான காரியங்களை அழகிய முறையில் சொல்ல வேண்டும். பின்னர் நம்முடைய பிரச்சினைகளை சிறந்த முறையில் எடுத்துக்கூறி, காரியங்களை சாதிக்க வேண்டும் என்று ஆலோசனை தந்து, அதன்படி சாதித்துவரும் தலைவர் தான் பேராசிரியர் அவர்கள் ஆவார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட வன்முறை மோதலில், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பல மஸ்ஜித்துகள், கோவில்கள் இடிக்கப்பட்டன. பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோவில்கள், பின்னர் புரனமைக்கப்பட்டு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அழைத்து திறக்கப்பட்டன. இதேபோன்று, இந்தியாவில் இடிக்கப்பட்ட மஸ்ஜித்துகளும் புரனமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே எல்.கே.அத்வானியிடம் நேரில் கூறிய தலைவர் தான், நம் பேராசிரியர் பெருந்தகை ஆவார்.

மகாராஷ்டிராவின் மலேகான், ஆந்திராவின் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள மஸ்ஜித்துகளில் வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறியபோது, அதற்கு முஸ்லிம்கள் காரணம் இல்லை என்றும், தொழுகை நடத்தும் இடங்களில் முஸ்லிம்கள் யாரும் வன்முறை சம்பவங்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என்றும் உறுதிப்பட கூறி, அன்றைய ஒன்றிய அமைச்சர் இ.அஹமத் சாஹிப் அவர்களோடு இணைந்து, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து, இஸ்லாமிய வாழிப்பாட்டு தலங்களில் தீவிரவாதிகள் செய்த வெடிகுண்டு தாக்குதல்களை, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற நோக்கத்தில் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சரியான முறையில் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்று, நடத்தப்பட்ட விசாரணையில், மலேகான் மற்றும் ஹைதராபாத் மஸ்ஜித்துகளில் தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பது உறுதியானது. மேலும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

முதல் இறைத்தூதர் ஆதம் நபி (அலை) அவர்களின் பிள்ளைகள், ஹாபில், காபில் அடக்கமாகியுள்ள ரமேஸ்வரத்தில் சமூக நல்லிணக்க யாத்திரையை தொடங்கிய பேராசிரியர் அவர்கள்,  அதில் சங்கராச்சாரியார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கிறிஸ்துவ பாதிரிமார்கள் ஆகியோரை அழைத்து சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்கள்.

வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக 1954-1995 ஆண்டுகளில் ஏற்பட்ட வக்பு சொத்துகள் பிரச்சினையை சீர் செய்து, 2005ஆம் ஆண்டு வக்பு திருத்தச் சட்டம் உருவாகுவதற்கு துணையாக நின்றவர். மேலும், ஒன்றிய அரசில் சிறுபான்மையின அமைச்சகம் உருவாகுவதற்கு துணையாக நின்று திறம்பட செயல்பட்டவர். தற்போது ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் வக்பு சட்டத்திற்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர், அந்த சட்டம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை, மக்கள் மத்தியில் தொடர்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் மாநாடு, கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்.

2004ஆம் ஆண்டு லிபியாவில் 600 அறிஞர்கள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு, புனித குர்ஆன் வழிகாட்டியபடி, பல சமூக மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் பழகி வாழ்வதை, அழகிய முறையில் எடுத்துக் கூறி, பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டை பெற்றவர்.

2008ஆம் ஆண்டு தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, பல்வேறு மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புகள் தனிப் பதிவுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளாக இருந்தன. அவற்றை சீரமைத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் இணைவதற்கு பெரும் முயற்சி எடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும், இயக்கத்தின் சின்னமாக ஏணி சின்னத்தை பெறுவதற்கு மறைந்த தலைவர்கள் இ.அஹமத் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.  

ஒரே ஒருமுறை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேராசிரியர் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், கலிலுர் ரஹ்மான் ஆகியோரை தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக்கி அழகு பார்த்தவர். மேலும், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி ஆகியோர், மக்களவை உறுப்பினராக மட்டுமல்லாமல், வக்பு வாரிய தலைவராகவும் பொறுப்பு ஏற்க முக்கிய காரணமாக இருந்தவர்.

அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பல நூறு பேர் தேர்வு செய்யப்பட மூலக் காரணமாக இருந்தவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பவள விழா மாநாட்டை, சென்னையில் மூன்று நாட்கள் பிரமாண்டமாக நடத்தி, அதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னணி தலைவர், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தலைவர்களை பங்குபெறச் செய்து, சிறப்பு செய்து, பாராட்டைப் பெற்றவர்.  இத்தகைய ஒரு சிறப்பு, மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் யாருக்கும் கிடைக்காது என்றே கூறலாம்.  

மக்களின் நலனுக்காக பல்வேறு கல்வி, அரசியல் சார்ந்த பதவிகளை பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் வகித்துள்ளார்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத்திட்ட நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்த அவர், நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களிலும் உறுப்பினராக செயல்பட்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், காயிதே மில்லத் பிறை விருது, இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் உமறுபுலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள பேராசிரியர் அவர்களை, 2024 ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 இந்திய முஸ்லிம்களில் ஒருவராக முஸ்லிம் மிரர் என்ற ஆங்கில பத்திரிகை தேர்வு செய்து கவுரவித்தது. சிறுபான்மை ஊடக அறக்கட்டளையுடன் இணைந்து மிகவும் செல்வாக்கு மிக்க நூறு இந்திய முஸ்லிம்கள் என்ற பட்டியலை தயாரித்த முஸ்லிம் மிரர் ஆங்கில இதழ், கொள்கை ரீதியான தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தனது நேர்மை மற்றும் பணிவுக்காக போற்றப்படுகிறார் என பாராட்டு தெரிவித்தது. நெறிமுறை நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புடன் அரசியலில் நுழைய விரும்பும் இளம் தலைவர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்றும் முஸ்லிம் மிரர் புகழாரம் சூட்டியது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் அவரது தெளிவான விவாதங்கள் மற்றும் பகுத்தறிவு வாதங்கள் அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அவருக்கு மரியாதையைப் பெற்று தந்தன என்றும், ஒரு கல்வியாளராக, சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளுக்கு சேவை செய்யும் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், மேம்படுத்துவதற்கும், அவர் குறிப்பிட்டத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார் என்றும் மிரர் இதழ் பாராட்டு மழையை பொழிந்துள்ளது.

யாரிடமும் அதிர்ந்து பேசாத, கோபம் கொள்ளாமல் எப்போதும் அமைதியான முறையில்அணுகும் பேராசிரியர் அவர்கள், இந்தியாவின் நூறு சிறந்த முஸ்லிம் ஆளுமைகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டது, சமுதாயத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

பேராசிரியர் அவர்கள், தேசிய ஒருமைப்பாட்டுச் சட்டம் என்ற தலைப்பில் பொது சிவில் சட்டம் என்ற நூலை தமிழில் எழுதினார். நபிமார்களும் நபித்துவமும் என்ற புத்தகத்தையும் பதிப்பித்தார். அவர்கள் எழுதிய நூல்களில் முஸ்லிம்கள் நேற்று, இன்று நாளை என்ற புத்தகமும், வாழும் நெறி என்ற புத்தகமும் முக்கியமானவை. இவற்றை தவிர மதங்களை ஒப்பிட்டு அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் செய்த பணிகள் இன்றும் தொகுதி மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றன. அங்குள்ள கோட்டையில் மூன்று மதங்களில் வழிப்பாட்டுதலங்கள் இருப்பதை எடுத்துக் கூறி, அவற்றை சிறந்த முறையில் பராமரிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தவர் பேராசிரியர். வேலூர் அண்ணா சாலையின் முக்கிய பகுதியில் இரும்பு நடை பாலம் ஒன்றை தனது தொகுதி நிதியில் கட்டி கொடுத்தது மட்டுமல்லாமல், அதையொட்டி இருந்த கோட்டை வெளிப்பகுதியில், அழகிய பூங்கா ஒன்றையும் உருவாக்கி தந்தார்.

வேலூர் - காட்பாடியை இணைக்கும் பிரிட்டிஷ் காலத்து பழைய பாலம், உடைந்து இருப்பதை அறிந்து, அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு, அதுகுறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு, அதில் வெற்றியும் பெற்றவர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அரசு காஜிகள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து, அதில் வெற்றியும் பெற்றவர் தான் பேராசிரியர்.

இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற பேராசிரியர் அவர்கள், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். மக்களவை உறுப்பினராக இருந்தபோது, அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே இருவரும் விவாதித்தனர்.

மறைந்த தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அன்பு தம்பியாக விளங்கியவர் தான் நமது பேராசிரியர். கலைஞர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் நேசம் கொண்டிருந்த அவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் அவ்வப்போது ஆலோசனை செய்யும் வாய்ப்பையும் பெற்றார். இதன் காரணமாக, கலைஞரின் பல பண்புகள், பேராசிரியரிமும் ஒட்டிக் கொண்டன. சலிக்காத கடும் உழைப்பு, ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தால், அதை முழுவதும் படித்து முடிக்கும் குணம், நூலை படிக்கும்போது, குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அதை பல இடங்களில் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம், ஒவ்வொரு நபரையும் நினைவில் வைத்துக் கொண்டு, அவர்களிடம் நேசத்துடன் பழகுவது போன்ற பல பண்புகள் பேராசிரியமும் இருந்து வருகின்றன.

கலைஞர் அவர்கள் குறித்து பேசும்போது, பல நேரங்களில் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிடும். கலைஞரை போன்ற ஒரு கடும் உழைப்பாளி, சிந்தனையாளர், சமூக ஆர்வலர் தமிழகத்திற்கு மீண்டும் கிடைப்பது அரிது என்று அடிக்கடி கூறி, கலைஞர் அவர்களை நினைவுகூர்ந்து பெருமை அடையும் பண்பாளர் தான் காதர் மொகிதீன் அவர்கள். 

தற்போதைய தமிழக முதலமைச்சர், திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இதயத்தில் எப்போதும் இடம் பிடித்த தலைவர் பேராசிரியர் என்றே கூற வேண்டும். அதன் காரணமாக தான், பேராசிரியர் அவர்களை, பெருமைக்குரிய அய்யா என்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் அழைப்பது வழக்கம். தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் நல்லாட்சி, நாடு முழுவதும் பரவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம், இலட்சியம் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் பல்வேறு துறைகளில் அடைந்த வளர்ச்சி, சமூக, மத நல்லிணக்கம் ஆகியவற்றை கூறலாம். இந்த முன்னேற்றம் நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பதாகும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் மட்டுமல்லாமல், தற்போதைய தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பொதுவுடமை சிந்தனையாளர்கள் நல்லக்கண்ணு, டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கூட, பேராசிரியர் அவர்களிடம் பாசம் கொண்டவர்கள்.

பேராசிரியர் அவர்களின் அயராத உழைப்பு, சமூக சிந்தனை, கல்வி சேவை ஆகியவற்றை, தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், சமூக சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், முன்னாள் நீதியரசர்கள், பத்திரிகையாளர்கள், தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி, அவருக்கு புகழாரம் சூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.  

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், ஒரு சிறந்த மனித நேய மாண்பாளர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அறிவார்ந்த சொற்பொழிவாளர். மனிதநேயத்திற்கும், மதநல்லிணக்கத்திறகும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். கோவையில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரையை வழங்கியவர்.

கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல், தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர். பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி, அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு கொண்டு சென்று உயர்த்திய ஆசானும் ஆவார்.  இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்து வருவதால் தான், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்தாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு தமிழக அரசு அவரை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் தகைசால் தமிழர் விருதும் பெருமை அடைகிறது.

குறிப்பு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில், எஸ்.ஏ.அப்துல் அஜீஸால் எழுத்தாக்கம் செய்யப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது அவர்களால் ஆவணப்படமாக எடுக்கப்பட்டது,

=============================

No comments: