தமிழக
சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்திற்கு
16
தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறுமா...!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
வரும் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாகும். தமிழகத்தில் எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற நினைப்போடு, பா.ஜ.க. பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் நிலவும் சமூக, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை சூழ்நிலைத்து, அதன்மூலம் அரசியல் லாபம் அறுவடை செய்யலாம் என பா.ஜ.க. நினைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரியார் மண் மற்றும் திராவிட சிந்தனைகள் கொண்ட மக்கள் தமிழகத்தில் பா.ஜ.க.வின் சதித் திட்டங்கள் பயன் அடையவில்லை. இதன் காரணமாக மாநில கட்சிகளை பிளந்து அதன்மூலம் திமுகக்கு எதிரான ஒரு நிலையை உருவாக்க பா.ஜ.க. திட்டமிட்டு, தீவிர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் வாழும் 50 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்களுக்கு இந்த சட்டமன்ற தேர்தல் வாழ்வா, சாவா தேர்தல் என்று கூட கூறலாம். அதற்கு முக்கிய காரணம், வட மாநிலங்களில் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் முஸ்லிம் மக்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைத்துக் கொண்டே இருக்கும் பா.ஜ.க., அதனை தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது. எனவே தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அனைத்து சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கும் மிகவும் முக்கியமான தேர்தல் என்று கூறுகிறோம்.
முஸ்லிம்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் :
சரி, திமுக ஆட்சியில் இருந்தபோதும், கடந்த 5 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்து வரும் நிலையிலும் முஸ்லிம்களுக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது ? என்ற கேள்வி பொதுவாக சாதாரண மற்றும் நடுத்தர முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துகொண்டே இருக்கிறது. முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்த ஒருசிலர் கூட இத்தகைய கேள்விகளை எழுப்பிக் திமுக கூட்டணியை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
திமுகவிற்கும், இஸ்லாமியர்களுக்குமான உறவு என்பது ஒரு வரலாற்றுக்குரிய உறவு, மகத்தான உறவாகும். திமுக என்பது ஒடுக்கப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் என்றைக்கும் துணை நிற்கக்கூடிய இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய காலகட்டங்களில், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால், கலைஞர் ஆட்சியில் இருந்த நேரத்தில்தான் அதாவது, 1969-ல், மீலாது நபிக்கு, முதன்முதலில் அரசு விடுமுறையை அறிவித்தார். அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சி அதனை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, ரத்து செய்ததை ரத்து செய்து மீண்டும் மீலாதுநபிக்கு அரசு விடுமுறையை ஏற்படுத்தித் தந்தார்.
உர்தூ பேசக்கூடிய முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது; ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதிலிருந்து 2400 வரை உயர்த்தியது; வக்ஃபு வாரிய சொத்துகளைப் பராமரிப்பதற்காக முதன்முறையாக 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது; ஹஜ் பயணத்திற்குக் குலுக்கல் முறையில் ஆண்டிற்கு ஆயிரத்து 800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையைக் கைவிட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கக்கூடிய அனைவருக்கும் அந்த ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கியது; பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து தனியே பிரித்து, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அமைத்தது; இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, “உர்தூ த அகாடமி” தொடங்கியது; 2001-இல் சென்னையில் “காயிதே மில்லத் மணிமண்டபம்” அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டி பின்னர் கட்டிமுடித்திட ஆவன செய்து கொடுத்தது; 2007ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது என சொல்லிக் கொண்டே போகலாம்.
பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில், 2 சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு 6 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் எனப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் சென்று படிக்க தேர்வு செய்யப்படும் முஸ்லிம் மாணவர்களுக்கு ஆண்டு தலா 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் உயர்கல்வி பெறும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் 10 பேர் ஒவ்வொரு ஆண்டும் பயன் அடைய வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் திராவிட மாடல் ஆட்சியில் சென்னை விமான நிலையம் அருகில் கட்டப்படும், ‘ஹஜ் இல்லம்’ உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுப்புகளை திமுக அரசு செய்து கொண்டு இருக்கிறது. இப்படி, இஸ்லாமிய மக்களின் நலனுக்காக திமுக அரசு செய்த திட்டங்களையெல்லாம் பட்டியலிட தொடங்கினால் அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மேலும் முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி அடையும் வகையில், மேலும் ஒரு சிறந்த பணியை திமுக அரசு செய்துள்ளது. ஆம்., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது வழங்கி மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்து தன்னை பெருமைப்படுத்திக் கொண்டது.
திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும் :
இப்படி, முஸ்லிம் மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட திமுக கூட்டணியை வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் சமுதாயம் ஆதரிக்க வேண்டும். மேலும் தமிழகம் அமைதி பூங்கா மாநிலமாக இருந்து வருவதும்முக்கிய காரணம் என்றும் கூறலாம். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, தமிழகத்தில் எந்தவித மத மோதல்களும் ஏற்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை திமுக அரசு, ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட்டது. தமிழகத்தில் வாழும் 6 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள், இந்த மண்ணின் சொந்த மக்கள் என்று திமுக அரசு உறுதியாக நினைத்து அவர்களின் பாதுகாப்பில் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பாலும் சென்னை, வேலூர், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் ராமநாதபுரம் போன்ற நகரங்களில் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள், தங்களுடைய மக்களின் நல்வாழ்விற்காக தங்களது சொந்த நிதியில் இருந்து கல்வி நிறுவனங்களை உருவாக்கி அவற்றை மிகவும் சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். இந்த கல்வி நிறுவனங்களின் உரிமமத்தை புதுப்பிக்கும் விஷயத்தில் திமுக அரசு அதிரடியாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இப்படி முஸ்லிம் மக்களின் நல்வாழ்விற்காக செயல்படும் அரசாக திமுக அரசு இருந்து வருகிறது.
முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாடு :
திமுக தலைமையிலான கூட்டணி எப்போதும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போரை நிறுத்த வேண்டும் என திமுக கூட்டணி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தியது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு, பாலஸ்தீன விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மவுனமாக இருப்பது சரியல்ல என்று குரல் எழுப்பியது. போரை நிறுத்த வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதேபோன்று, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி நடத்திய மாபெரும் பேரணியில் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர் கலந்துகொண்டு, பேரணி தொடங்கிய இடத்தில் இருந்து அது முடிவடைந்த எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை நடந்தே சென்றார்கள். பின்னர், அங்கு நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய கூட்டணி கட்சித் தலைவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டம் மட்டுமல்ல, அது இந்து மக்களுக்கும் எதிரானது என புள்ளிவிவரங்களுடன் எடுத்துக் கூறினார்கள். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொதுச் சிவில் சட்டம் என அனைத்து விவகாரங்களிலும் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி இருந்து வருகிறது. வக்பு திருத்தச் சட்டம் விவகாரத்தில் கூட, முஸ்லிம்களுக்கு ஆதரவாக திமுக மட்டுமல்லாமல், கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பின.
தமிழகத்தை ஆளும் திமுக மட்டுமல்லாமல், அதன் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழகம் எப்போதும் அமைதி மாநிலமாக இருக்க வேண்டும். மாநிலத்தில வாழும் அனைத்துச் சமுதாய மக்களும், ஒற்றுமையுடன், அண்ணன் தம்பி, மாமா மச்சான் என்ற உறவோடு அமைதியாக வாழ வேண்டும். அதன்மூலம் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றன. இப்படி முஸ்லிம் மக்களுக்காக மட்டுமல்லாமல், மாநிலத்தில் வாழும் பெரும்பான்மை இந்து சமூக மக்களின் நலனில் பெரிதும் அக்கறையுடன் இருக்கும் திமுக கூட்டணி கட்சிகள், தமிழகம் எப்போதும் மத நல்லிணக்க மாநிலமாக திகழ வேண்டும் என்று உறுதியாக விரும்புகின்றன. இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்ட கூட்டணிக்கு தான் முஸ்லிம்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய முழு ஆதரவை வழங்க வேண்டும்.. அதன்மூலம் பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்தி, தமிழக அரசியலில் இருந்தே ஓரம் கட்ட வேண்டும்.
முஸ்லிம் சமுதாயத்திற்கு 16 தொகுதிகள் :
இதுஒருபுறம்
இருக்க, திருச்சியில் கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய
தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தமிழகத்தில் வாழும் 50 லட்சத்திற்கும்
அதிகமான முஸ்லிம் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் வரும் சட்டமன்ற
தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகள் உட்பட மொத்தம் 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்
என்று கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறுமா என்பதை காலம்
தான் பதில் சொல்ல வேண்டும்.
================================







No comments:
Post a Comment