Friday, October 31, 2025

ஒரு கேரள முஸ்லிம் பெண்மணியின் கதை....!

 

" மருத்துவ கனவை மீண்டும் உயிர்ப்பித்த

ஒரு கேரள முஸ்லிம் பெண்மணி "

மருத்துவத்துறையில் உள்ள  கணவரும், தனது குழந்தைகளும் சிறந்த மருத்துவர்களாக சேவை ஆற்றிவரும் நிலையில், நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு முஸ்லிம் பெண்மணி, தனது 47வது வயதில் நீட்  நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, நீண்ட காலமாக கைவிடப்பட்ட தனது மருத்துவ கனவை  மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்.

என்ன உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதா! உண்மை தாங்க, இந்த தகவலை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கேரள மாநிலத்தில் தான் மிகவும் அதிசயமாகவும் மற்றும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜுவானா அப்துல்லாவின் கல்வி ஆர்வம் :

2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜுவானா அப்துல்லா என்ற பெண்மணி, தனது வீட்டை மட்டுமல்ல, மருத்துவ மருந்தியலில் முதுகலைப் பட்டத்தையும் விட்டுச் சென்றார். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 47 வயதான நான்கு குழந்தைகளின் தாயான இவர், தான் விட்ட இடத்திலிருந்து மீண்டும் முன்னேறி வருகிறார், இப்போது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்ற பிறகு, பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்து தனது கல்வி ஆர்வத்தை மீண்டும் புதுப்பித்துள்ளார்.  

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹங்காட்டைச் சேர்ந்த ஜுவானா, தனது முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற அவர், தனது வீட்டிலிருந்து அரை மணி நேரம் வரை நடந்துசெல்லும் வகையில், சற்று தொலைவில் உள்ள ஒரு பல் மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார். தனது இந்த முயற்சி குறித்து கருத்து கூறியுள்ள ஜுவானா,இப்போது நான் படிப்பையும் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த முயற்சிப்பேன்என்று கூறுகிறார்.

மருத்துவர்கள் குடும்பம் :

ஜுவானா நீட் தேர்வு எழுத முடிவு செய்தது தற்செயல் நிகழ்வு அல்ல. அவருடையது மருத்துவர்கள் குடும்பம். அவருடைய கணவர் கே.பி. அப்துல்லா கன்ஹங்காட்டில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்.  மூத்த மகள் மரியம் அஃப்ரின் அப்துல்லா எம்பிபிஎஸ் முடித்துவிட்டு இப்போது வீட்டு அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். மேலும் அவர்களது மகன்கள் சாலிஹ் அப்துர்ரசாக் மற்றும் சல்மான் அப்துல் காதிர் ஆகியோர் மருத்துவ மாணவர்கள். இளைய மகள் அஜீமா ஆசியா 12 ஆம் வகுப்பு படிக்கிறார்.

சவால்களுக்கு மத்தியில் சாதனை :

2022 ஆம் ஆண்டில், தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) நீட் தேர்வுக்கான 25 வயது தடையை நீக்கியது. இது ஜுவானாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. “தொற்றுநோய் காலத்தில், என் மகன் மருத்துவ நுழைவு பயிற்சி வகுப்புகளில் ஆன்லைனில் கலந்துகொள்வதைக் கண்டேன். வயது வரம்பு நீக்கப்பட்ட பிறகு, என் வயதுடைய பலர் தேர்வெழுதினர். எனவே கடந்த ஆண்டு, நான் அதற்குத் தயாராக முடிவு செய்தேன். என் கணவரும் குழந்தைகளும் எனக்கு ஆதரவாக நின்றனர்," என்று ஜுவானா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பயிற்சி வகுப்புகளில் சேருவதற்குப் பதிலாக, உதவிக்காக யூடியூப்பையும் தனது குழந்தைகளையும் அவர் நம்பியிருந்தார். அந்த முயற்சி பலனளித்தது. அவர் தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்த தகுதி பெற்றார். இதன்மூலம் தாம் ஒரு மருத்துவ நிபுணராக வேண்டும் என்ற தனது மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்கு ஜுவானா அப்துல்லா நெருங்கிச் சென்றுக் கொண்டிருக்கிறார்.

“12 ஆம் வகுப்புக்குப் பிறகு, நான் கேரள அரசின் மருத்துவ நுழைவுத் தேர்வில் மூன்று முறை தோல்வியடைந்தேன். பின்னர், நான் விலங்கியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று மங்களூரில் மருத்துவ மருந்தியலில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தேன். ஆனால் என் தந்தையின் மரணம் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு நான் திருமணம் செய்துகொண்டு படிப்பை நிறுத்திவிட்டேன்என்று அவர் தனது பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்து தனக்கு மருத்துவக் கல்வியின் மீது இருக்கும் ஆர்வம் குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

இப்போது அவருடைய குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், அவர் விட்டுச் சென்றதை நோக்கித் திரும்ப வேண்டிய நேரம் இது என்று ஜுவானா அப்துல்லா உணர்கிறார். “எனது நான்கு குழந்தைகளும் படிப்பில் சிறந்து விளங்கும்போது, ​​நான் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். கடினமாக உழைப்பதை விட, நீட் தேர்வில் எனது வெற்றிக்குக் காரணம் புத்திசாலித்தனமாக உழைப்பதே காரணம் என்று நான் கூறுவேன்.” என்று அவர் தனது உழைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இப்போது ஜுவானா அப்துல்லா கல்லூரிக்குச் செல்வது, கற்றுக்கொள்வது மற்றும் சக மாணவர்களுடன் பழகுவது போன்றவற்றை எதிர்நோக்குகிறார். "நான் என் குழந்தைகளின் வயது மாணவர்களுடன் அமர்ந்திருப்பேன். எனக்கு மகிழ்ச்சியான சமூக வாழ்க்கை இருக்கிறது. மற்றவர்களுடன் பழகுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. கல்விக்கு வயது ஒரு தடையல்ல" என்று ஜுவானா அப்துல்லா பெருமையுடன் கூறுகிறார்.

கல்விக்கு வயது ஒரு தடையல்ல :

உண்மை தான். கல்விக்கு வயது ஒரு தடையல்ல. மருத்துவப் படிப்பு கனவை மீண்டும் தொடங்கியுள்ள ஜுவானா அப்துல்லா கூறியிருப்பது முற்றிலும் உண்மையாகும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், நல்ல அறிவு பெற வேண்டும்., உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று உண்மையாக நினைத்து, அதற்காக உழைத்தால், நிச்சயம் சாதிக்க முடியும் என்பதை நான்கு  குழந்தைகளுக்கு தாயான கேரள முஸ்லிம் பெண்மணி ஜுவானா அப்துல்லா தனது 47வது வயதில் நிரூபித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் கூட 67 வயது பெண்மணி ஒருவர் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட நிலையில் கூட, தனது விருப்பத்தை நிறைவேற்றிய நல்ல செய்தியை மணிச்சுடர் நாளிதழில் நாம் ஏற்கனவே கட்டுரை வடிவில் எழுதி இருந்தோம். தற்போது இந்திய திருநாட்டில், அதுவும் நமது அண்டை மாநிலமான கேரளாவில், ஒரு முஸ்லிம் பெண்மணி, தனது 47வது வயதில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இதன்மூலம் இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்ற அனைத்து உரிமைகள் உள்ளன என்பதையும், அந்த உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு முழுமையாக வழங்கி இருக்கிறது என்பதையும் சமுதாய பெண்கள் நன்கு உணர்ந்துகொண்டு, கல்வித்துறையில் சாதிக்க முன்வர வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: