Friday, October 24, 2025

கடலில் ஒரு கிராமம்....!

 " கடலில் ஒரு அழகிய இஸ்லாமிய கிராமம் "

கடலில் ஒரு அழகிய இஸ்லாமிய கிராம் இருக்கிறதா! இப்படிப்பட்ட இந்த தகவலை கேட்கும் நம் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்படும். ஆனால், அதை நாம் உண்மை என நம்பித்தான்  ஆக வேண்டும். உண்மையில்  மலேசியாவில் கடலில் ஒரு அழகிய இஸ்லாமிய கிராமம்  உள்ளது.  கடல் தண்ணீரின் மேல் இந்த இஸ்லாமிய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.  இங்கு உள்ள ஒவ்வொரு வீடும், மஸ்ஜித், சந்தை என ஆகிய அனைத்தும் கடலின் மேல் உருவாக்கப்பட்டுள்ளன.

இங்கு கடலின் அலைகளுக்கு மத்தியில் அழகிய பாங்கு சொல்லப்படுகிறது. அதன் ஒலி மக்களை நாள்தோறும் உற்சாகம் செய்ய வைக்கிறது. இங்கு வசிக்கும் குழந்தைகள் அனைவரும் படகுகள் மூலம் பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறார்கள். பெண்கள் தண்ணீரின் உருவாக்கப்பட்ட வீடுகளில் சமையல் செய்கிறார்கள். இங்கு வசிக்கும் ஆண்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் மீன்களை பிடிக்க கடலுக்குச் செல்கிறார்கள். 

கம்போவ் பங்காவ் பங்காவ் கிராமம் :

இந்த அழகிய இஸ்லாமிய கிராமம் மலேசியாவின் சுபசபாவில் உள்ளது. இதன் பெயர் கம்போவ் பங்காவ், பங்காவ் என்று உள்ளது. இந்த கிராமத்தில் குறைந்தபட்சம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள வீடுகள் அனைத்தும் வலிமையான மூங்கில் மரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் தண்ணீரில் எப்போதும் வலிமையுடன் இருக்கும் வகையில் அழகிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த  கிராமம் முழுவதும் மரப் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்கள் மூலம் மக்கள் மஸ்ஜித் மற்றும் பிறருடைய வீடுகளுக்கு எளிமையாக செல்ல முடியும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மரத்தால் கட்டப்பட்ட இவை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் போக்குவரத்திற்கு ஏற்றவையாக உள்ளன. உலகின் சில பழமையான மற்றும் மிகவும் தனித்துவமான மரப் பாலங்களுக்கு, சுவிட்சர்லாந்தின் கபெல்ப்ரூக் பாலம், இலங்கையின் போகொட மரப் பாலம் மற்றும் இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உயிருள்ள வேர் பாலங்கள் ஆகியவை உதாரணங்கள். உலகின் பல பகுதிகளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரப் பாலங்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. அதேபோன்று இந்த கிராமமும் மரப் பாலத்திற்கு பெயர்பெற்று இருக்கிறது.  

அழகிய வரலாறு :

இந்த இஸ்லாமிய கிராமம் 15ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இருந்து, இங்கு இருந்து வருவதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்த பகுதி புருனை ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த சமயத்தில் வணிகம் செய்ய வந்த அரபுகள் மூலம் இப்பகுதியில் இஸ்லாமிய மார்க்கம் பரவியது. காலம் மெல்ல மெல்ல செல்ல தற்போது இங்கு பல வீடுகள் உருவாக்கப்பட்டு விட்டன. கடலின் மேல், வசிக்கும் ஒரு இஸ்லாமிய சமூகம் வந்துவிட்டது. 

இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை அனைத்தும் மிகவும் எளிமையானது. இங்கு வாழும் மக்கள் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து தங்களுடைய வாழ்க்கையைப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த கிராமத்தில் வாழும் அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் மற்றவர்களுடன் இணைந்தும் பிணைந்தும் ஒற்றுமையுடன்  இருக்கிறார்கள். கிராமத்தில்  வாழும் ஒரு மனிதருக்கு துன்பம் ஏற்பட்டு விட்டால், உதவி தேவைப்பட்டால், முழு கிராமமே உதவிச் செய்த முன்வந்து விடுகிறது. இதுவே இந்த கிராமத்தின் மிகப்பெரிய வலிமையாகும். மிகப்பெரிய ஒற்றுமையாகும். இங்கு வாழும் மக்கள் மின்சார தேவைக்காக சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சோலார் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையான தண்ணீர், மழை நீர் மூலம் பெற்றுவிடுகிறார்கள். 

கிராமத்தின் நடுவில் மஸ்ஜித் :

இந்த கிராமத்தின் நடுவில் ஒரு அழகிய மஸ்ஜித் உள்ளது. இங்கு ஐந்து வேளையும் பாங்கு சொல்லப்படுகிறது. பாங்கு ஒலி கேட்ட உடனே கிராமமே, தொழுகைக்கு கிளம்பி விடுகிறது. ரமளான் மாத காலத்தில், கிராமத்தில் ஒரு அழகிய ஒளி பிறந்து விடுகிறது. ஒவ்வொரு மக்களும் அன்பை பொழிந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இஸ்லாமிய கல்வியும் கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அழகிய முறையில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை அமைதியாக இருந்தாலும் கடினமாக சூழ்நிலைகளுடன் வாழ வேண்டிய நிலையும் இருந்து வருகிறது. சூறாவளி, கனமழை, புயல் போன்ற காலங்களில் பல கடும் நெருக்கடிகள் மற்றும் துன்பங்களை கிராம மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.  மரப்பலகைகள் மூலம் உருவாக்கப்பட்ட வீடுகள் சேதம் அடைகின்றன. அப்படி பல்வேறு சவால்கள் இருந்தும், இங்கு வாழும் மக்கள் உறுதியான ஈமானுடன் தங்களுடைய இஸ்லாமிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

சுவையான பிற தகவல்கள் :

இந்த இஸ்லாமிய கிராமம் குறித்து கூடுதல்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். கம்போவ் பங்காவ் பங்காவ் கிராமம் என்பது  மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள டெமர்லோவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.  இது, செமந்தன் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த கிராமத்தை பஹாங்கின் பழைய நகரமான டெமர்லோவிலிருந்து பிரிக்கிறது. கம்போவ் பங்காவ், பங்காவ் பரிட் கிராமத்துடன் பகாங் நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமவாசிகளும் மிக நெருக்கமான குடும்ப உறவைக் கொண்டுள்ளனர். ஒரு காலத்தில், பங்காவ் தஞ்சோங் கெராமட் கிராமம் பங்காவ் பரிட் கிராமத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது

செம்போர்னா நகரத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஒரு சதுப்புநிலக் காடுகளுக்கு அருகில் மற்றொரு கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள குடியேறிகளில் பெரும்பாலோர் சுலுக் மற்றும் பஜாவ் பழங்குடியினரைக் கொண்டுள்ளனர்.  கம்போவ் பங்காவ் பங்காவ் போலவே, இந்த கிராமத்தில் கடலில் உள்ள வீடுகள் சிதறிக்கிடக்கின்றன. அவை நெருக்கமாக கட்டப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சிறிய நடைபாதைகளைப் பயன்படுத்தி மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் கிடைக்கும் வசதிகளில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், கிராமத்தின் நிலப்பரப்பில் சாலை உள்கட்டமைப்பு, மஸ்ஜித்,  தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு கடல் காவல் நிலையம் ஆகியவை அடங்கும். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: