போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல்....!
காஸா மீது தொடர்ந்து கொடிய தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலிய ராணுவம்.....!!
ரஃபா எல்லைப் பகுதியை மூடிய கொடூரம்....!!!
காஸா, அக்.19-போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இஸ்ரேல் இதுவரை 47 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் படி முதல் கட்டமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து பணயக்கைதிகள் விடுக்கப்பட்டனர். 20 அம்ச திட்டத்தின்படி அடுத்த கட்ட நகர்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இஸ்ரேல் அத்துமீறல் :
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அக்டோபர் தொடக்கத்தில் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் 47 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ரஃபா எல்லை மூடல் :
இதுஒருபுறம் இருக்க, காஸாவிற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை கடக்கும் பகுதி "மறு அறிவிப்பு வரும் வரை" மூடப்பட்டிருக்கும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் சிறைபிடிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்டெடுக்க போதுமான அளவு முயற்சிகளை செய்யவில்லை என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, காஸாவிலிருந்து அனைத்து உடல்களையும் திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்தை கோருவதற்காக டெல் அவிவில் போராட்டக்காரர்கள் திரண்டதால், ஹமாஸ் மேலும் இரண்டு கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
ஹமாஸ் குற்றச்சாட்டு :
போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்க நெதன்யாகு மெலிந்த சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துகிறார் என்று ஹமாஸ் போராளிகள் குழு குற்றம்சாட்டியுள்ளது. இதனால் காஸாவில் மீண்டும் பதற்றம் உருவாகி, மக்கள் நெருக்கடியான சூழ்நிலையை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 2023 முதல் காஸா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 68 ஆயிரத்து 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 200 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment