காஸாவின் நிர்வாகத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவிடம் ஒப்படைக்கலாம்.....!
ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீனக் குழுக்கள் ஒப்புதல்.....!!
கெய்ரோ, அக்.25- இஸ்ரேல் உடனான போருக்குப் பிந்தைய காஸாவின் நிர்வாகத்தை நடத்துவதற்கு தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு தன்னாட்சி குழுவிடம் ஒப்படைக்க ஹமாஸ் உள்ளிட்ட முக்கிய பாலஸ்தீன அரசியல் பிரிவுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
கூட்டு அறிக்கை வெளியீடு :
கெய்ரோவில் வெள்ளிக்கிழமை (24.10.2025) அன்று நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ஹமாஸ் வலைத்தளத்தில் ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கூட்டு அறிக்கையின்படி, காஸா பகுதியின் நிர்வாகத்தை சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு தற்காலிக பாலஸ்தீனக் குழுவிடம் ஒப்படைக்க பாலஸ்தீன் குழுக்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு சகோதரர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வாழ்க்கை விவகாரங்கள் மற்றும் அடிப்படை சேவைகளை இந்தக் குழு நிர்வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலஸ்தீன நோக்கத்தை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஒரு பொதுவான நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பதில் பிரிவுகள் ஒப்புக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு தேசிய கொள்கையில் உடன்படவும், பாலஸ்தீன விடுதலை அமைப்பை (பி.எல்.ஓ.) பாலஸ்தீன மக்களின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதியாக புத்துயிர் பெறவும் அனைத்து சக்திகள் மற்றும் பிரிவுகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஆலோசனை :
இதனிடையே, ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிலிருந்து வந்த பிரதிநிதிகள் கெய்ரோவில் சந்தித்து, காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்து விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் வரவிருக்கும் காலகட்டத்தில் சந்திப்புகளைத் தொடரவும், இஸ்ரேலிய அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொண்டு பாலஸ்தீன உள் முன்னணியை ஒழுங்கமைப்பதில் பணியாற்றவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. மேலும் ஹமாஸ்-ஃபத்தா பேச்சுவார்த்தை குழுக்களுடன், எகிப்தின் உளவுத்துறைத் தலைவர் ஹசன் ரஷாத், முக்கிய பாலஸ்தீன பிரிவுகளின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார்.
டிசம்பர் 2024 இல், போருக்குப் பிந்தைய காஸாவை கூட்டாக நிர்வகிக்க ஒரு குழுவை உருவாக்க பாலஸ்தீன குழுக்கள் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம், குறிப்பாக ஃபத்தா உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு அந்தப் பிரதேசத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஹமாஸ், போருக்குப் பிந்தைய பிரதேசத்தை ஆள விரும்பவில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதன் போராளிகளை நிராயுதபாணியாக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுக்கு எதிராக பின்வாங்கிய குறிப்பிடத்தக்கது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment