Thursday, October 30, 2025

பீகார் சட்டமன்ற தேர்தல் - மெகா கூட்டணி நம்பிக்கை...!

சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை வீழ்த்த பீகார் மக்கள் தயாராகி விட்டார்கள்.....!

மெகா கூட்டணி கட்சி தலைவர்கள் நம்பிக்கை....!

பீகாரை மக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமரியாதை செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு....!

பாட்னா, அக்.30- பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பாடம் கற்பிக்க மக்கள் தயாராகிவிட்டதாக காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட மெகா கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. 

தேஜஸ்வி யாதவ் பேட்டி :

இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடந்த 20 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி ஆட்சியில் பீகார் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படவில்லை என குற்றம்சாட்டினார். பீகாரில் நிலம் இல்லை என்பதால் குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், இதன்மூலம் பீகாரின் முன்னேற்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு விருப்பம் இல்லை என்பது உறுதியாக தெரிவித்துவிட்டதாக கூறினார். 

மக்கள் முடிவு :

பீகார் மாநில இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று பணி செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்த யாதவ், மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் வீட்டிற்கு ஒருவருக்கு கட்டாயம் அரசு பணி வழங்கப்படும் என்றார். பாஜக கூட்டணியில் பீகாரில் எந்த பணிகளும் நடைபெறாமல் இருப்பதால், இந்த முறை அந்த கூட்டணியை வீழ்த்த பீகார் மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும், சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு நிச்சயம் பாடம் கற்பிக்கப்படும் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். 

காங்கிரஸ் கருத்து:

இதேபோன்று மெகா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், ஒன்றிய மற்றும் மாநில பாஜக கூட்டணி ஆட்சியில் பீகார் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனம் செய்தனர். வரும் தேர்தலில் மக்களின் விருப்பத்தின்படி, பீகாரில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் உறுதியாக நம்பிக்கை தெரிவித்தனர். இந்த தேர்தலில் மெகா கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

===========================

No comments: