தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் இனி ஒருங்கிணைந்து செயல்படும்....!
சென்னையில் நடைபெற்ற சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழாவில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உறுதி....!!
சென்னை, அக்.27-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் இனி ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உறுதி அளித்துள்ளார்.
மணிச்சுடர் நிறுவனர், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மாநிலத் தலைவராக இருந்த மறைந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 26.10.2025 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இறுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுயாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பேராசிரியர் நிறைவுரை :
சிந்தனைச் செல்வர் சமுதாயத்தின் ஒளிவிளக்கு சிராஜூல் மில்லத் அவர்களின் நூற்றாண்டு விழாவை இந்த பெரியார் திடலில் ஊரும் உலமுகம் போற்றக் கூடிய வகையில் மிகச் சிறப்பாக நடத்திய அனைத்து முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் முதலில் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். விழாவிற்காக உழைத்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மன நிறைவான வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். சிராஜுல் மில்லத் அவர்களின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றி அனைவரும் மிகச் சிறந்த கருத்துகளை அவையின் முன்பு வைத்தார்கள். சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழாவில் உரையாற்றுகிறோம் என்று நினைத்து அவர்கள் இங்கு உரையாற்றவில்லை. மாறாக, தமிழர் தலைவர் கி.வீரமணி, வைகோ மாமா, திருச்சி சிவா, பீட்டர் அல்போன்ஸ் ஆகிய அனைவரும் ஆற்றிய உரைகள் அனைத்தும், மேடை அலங்காரத்திற்கான உரைகள் அல்ல. மாறாக அவர்கள் உள்ளத்தில் இருந்து வெளியான உணர்வுகள் ஆகும்.
மனங்கள் ஒன்றிணையும் கருத்துகள் :
திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் மூன்று முறை, நான்கு முறை சொல்லிய வார்த்தைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இன்று மனங்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தின. அவர்கள் ஆற்றிய உரை, ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசப்பட்டவை உரை அல்ல. முஸ்லிம் சமுதாயமும், திராவிடர் இயக்கமும், தமிழகமும், மனங்களால் ஒன்றிணைந்து இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் அந்த வார்த்தைகள் இருந்தன. அதை மீண்டும் நினைவுப்படுத்தும் வகையில் இருந்தன. அதனை தான், இங்கு உரையாற்றி பெருமக்கள் அத்துனை பேரும், நமக்கு எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.
வைகோ மாமா அவர்கள் வரலாற்றையெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறினார்கள். பீட்டர் அல்போன்ஸ் இந்திய வரலாற்றையை மிக அழகாக எடுத்துக்கூறி நம்மை ஆனந்தம் அடையச் செய்துள்ளார். சகோதரர் சிவா அவர்கள் திராவிட மாடல் ஆட்சிக்கும் தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கும், உறவுகளைப் பற்றி மிகமிக சிறப்பித்தும், கருத்துகளை கூறியும் தனது உரையை ஆற்றி இருக்கிறார்.
முஸ்லிம் சமுதாயம் ஒன்றாக செயல்பட வேண்டும் :
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைப்பது போன்று, நமது பெருந்தலைவர் வாழும் பெரியாராக திகழக் கூடிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அய்யா அவர்கள், முஸ்லிம் சமுதாயம் மத்தியில் நிலவும் பல்வேறு கருத்துகள், மோதல்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயம், ஒன்றாக இருப்பதை உலகத்திற்கு உணர்ந்துங்கள் என்று மிக அழகாக சொன்னார்கள். இந்த விழாவில் அவர்கள் சொல்ல வேண்டியதும், நாம் ஏற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டியதையும், வருங்காலத்தில் அய்யா அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டியதும் இவை தான் என்பது மிக தெளிவாக சொன்னார்கள். அதை தான் நாம் செய்தாக வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள். சிராஜுல் மில்லத் அவர்கள் குடும்பத்தை சார்ந்தகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், மனம் திறந்து எதையும் மறைத்து விடாமல், உள்ளத்தில் இருந்த வார்த்தைகளை உள்ளப்படி நமக்கு சொன்ன அந்த பெருமக்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் சொன்னதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் சொன்னப்படி, நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நடப்போம். செயல்படுவோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த விழாவில் பல நினைவுகள் வந்து சொல்கின்றன. சிராஜுல் மில்லத் அவர்கள் நம்மை எப்படியெல்லாம் வழிகாட்டியாக இருந்து செயல்பட்டார் என்பதை நினைக்க தோன்றுகிறது. அந்த வழிகாட்டுதலை அய்யா வீரமணி அவர்களும் அருமை மாமா வைகோ அவர்களும், மற்றும் திருச்சி சிவா, பீட்டர் அல்போன்ஸ் ஆகிய அனைவருக்கும் நம் அனைவரின் சார்பாக மனம் நிறைந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி ஒருங்கிணைந்து செயல்பட முடிவு :
நீங்கள் பேசிய பேச்சுகள், ஏதோ வார்த்தை அலங்காரத்திற்காக பேசிய பேச்சுகள் என நாங்கள் நினைக்கவில்லை. உள்ளத்தில் உள்ளதை இங்கே நீங்கள் பேசி இருக்கிறீர்கள். உள்ளங்கள் எப்போதும் ஒன்று போல் இருக்க வேண்டும் என நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். மனங்களால் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வருகிறோம். நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று ஆயிரம் முறை குறிப்பிடுறேன்.
உங்களோடு முஸ்லிம் சமுதாயம் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கும். வருங்காலங்களில் பல சாதனைகளை சாதிக்கக் கூடிய வகையில் நீங்கள் சொன்ன அந்த கருத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டு, அதன்படி இனி நடக்க நாங்கள் முடிவு எடுத்து இருக்கிறோம். அதை காணிக்கையாக உங்களுக்கு செலுத்துகிறோம். தமிழக முஸ்லிம் சமுதாயம் இனி இந்தியாவிற்கும், ஏன் உலகிற்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி, வணக்கம் சலாம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================================



No comments:
Post a Comment