"
வரலாற்று, பாரம்பரிய நகரங்களின் பெயர்களை
மாற்றும்
போக்கு அதிகரிப்பு "
- ஜாவீத் -
இந்தியாவில் உள்ள வரலாற்று மற்றும் பாரம்பரிய இடங்கள் மற்றும் நகரங்களின் பெயர்களை மாற்றும் கொள்கை பல விமர்சனங்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டாலும், சிலர் மீண்டும் பெயர் மாற்றக் கூச்சலைத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் வாக்கு வங்கியை நிலைநிறுத்துவதில் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது. வட மாநிலங்களில் பல இடங்கள், தெருக்கள், மற்றும் நகரங்களில் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற தொடர்ந்து கூச்சல் எழுப்பட்டு வருகிறது. இத்தகைய போக்கு தற்போது மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இஸ்லாம்பூர் கிராமத்தின் பெயர் மாற்றம் :
அந்த வகையில் மகாராஷ்டிராவில் இதேபோன்ற பெயர் மாற்றம் செய்யும் ஒரு சம்பவம், அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு சாங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தின் பெயர் இப்போது அதிகாரப்பூர்வமாக 'ஈஸ்வர்பூர்' என்று மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறிக்கையின்படி, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளது. ஆகஸ்ட் 13, 2025 தேதியிட்ட இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம்பூர் நகராட்சி மன்றம் ஜூன் 4, 2025 அன்று நகரத்தின் பெயரை 'ஈஸ்வர்பூர்' என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் மேற்பார்வை ஆய்வாளரான துஷார் வைஷ்யா, விரைவில் ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடக் கோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். இதனுடன், அதன் தகவல்கள் உள்துறை அமைச்சகம், இந்திய சர்வேயர் ஜெனரல் அலுவலகம், மேற்கு மண்டலம், ஜெய்ப்பூர் மற்றும் புனே இயக்குநரகங்களுக்கும் அனுப்பப்பட்டன. முன்னதாக, ஈஸ்வர்பூரின் பெயரை மாற்றுவதற்காக உள்ளூர் மட்டத்தில் பெரிய அளவிலான பொதுமக்கள் பேரணி நடத்தினர்.
மேலும்
அவுரங்காபாத் ரயில் நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி நகர் ரயில் நிலையம் என அதிகாரப்பூர்வமாக
மாற்றப்பட்டது.
டெல்லியின் பெயரை மாற்ற கோரிக்கை :
இதேபோன்று
தற்போது, நாட்டின் தலைநகரான
டெல்லியின் பெயரை மாற்றி
"இந்திரபிரஸ்தா"
என்று மறுபெயரிட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத்
முன்மொழிந்துள்ளது. இந்த கோரிக்கைக்கு அரசியல்வாதிகள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில்
பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் இந்த
மறுபெயரிடுதல் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நகரத்தின் பண்டைய வரலாற்றை மதிக்கும்
என்று இந்துத்துவ குழு கூறுகிறது.
டெல்லி சுமார் 2 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இந்திரபிரஸ்தா நமது இந்து மரபுகளுடன் தொடர்புடைய 5 ஆயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று விஎச்பியின் டெல்லி பிரிவின் செயலாளர் சுரேந்திர குமார் கூறியுள்ளார்.
மேலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்திரபிரஸ்தா சர்வதேச விமான நிலையம் என்றும் டெல்லி ரயில் நிலையம் இந்திரபிரஸ்தா ரயில் நிலையம் என்றும் டெல்லிக்குள் உள்ள இடங்களின் பெயரை மாற்றவும் இந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், டெல்லியின் பாரம்பரிய இடங்கள், பண்டைய கோட்டைகள், கோயில்கள் மற்றும் முகலாய மற்றும் காலனித்துவ சோதனைகள் போன்ற இந்து ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய இடங்களை பொதுமக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்றும், இந்து மூதாதையர் பாரம்பரியத்தை ஊக்குவிக்க மன்னர் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா கதை மற்றும் இந்திரபிரஸ்தாவைச் சேர்க்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரியுள்ளது.
பள்ளி பாடத்திட்டத்தில் இந்து ஆட்சியாளர்களின் வரலாற்றை இணைக்கவும் இந்துத்துவ குழுக்கள் முன்மொழிந்துள்ளன. இதுதொடர்பாக டெல்லி கலாச்சார அமைச்சர் சுரேந்திர குமார் குப்தாவுக்கு, மறுபெயரிட வேண்டும் என்று விஹெச்பி ஒரு கடிதம் எழுதியுள்ளது.
கடுமையாக எதிர்ப்பு :
தலைநகர் டெல்லியின் பெயரை மாற்ற வேண்டும் என்ற விஹெச்பியின் இந்த கோரிக்கைகளுக்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளளனர். இதன்மூலம் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மதக் குழுக்களின் கலவையான டெல்லி நகரத்தின் வளமான வரலாற்றை அழிக்க இந்துத்துவ அமைப்பு முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கோரிக்கைகள் அனைத்தும், நாடு முழுவதும் உள்ள இந்துத்துவ குழுக்களிடையே நகரங்கள் மற்றும் இடங்களின் பெயரை மாற்றுவதற்கான வளர்ந்து வரும் போக்கைப் பின்பற்றுகின்றன. இந்தியாவின் வரலாற்றில் பொதிந்துள்ள முஸ்லிம் மரபை குறிவைக்கும் ஒரு நடவடிக்கை என்றும் பல்வேறு தரப்பு விமர்சகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக நல்லிணக்கத்தை குலைக்க சதி :
இப்படி முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை தொடர்ந்து மாற்றம் செய்யும் போக்கு மூலம், மதசார்பற்ற இந்தியாவில் தற்போது இருக்கும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க மிகப்பெரிய சதிகளை இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் ஒற்றுமையுடன் அமைதியாக தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் எப்போதும் ஒருவித பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, அதன்மூலம், அமைதியை குலைத்து, அரசியல் லாபம் அடைய பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து முயற்சிகளை செய்துக் கொண்டே இருக்கின்றன.
உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில், மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தால் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் பெரிதும் பாதிப்பு அடையும் என்பதை ஏனோ, இந்துத்துவ அமைப்புகள் கவனத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை. முரட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
====================================








No comments:
Post a Comment