Wednesday, October 29, 2025

உர்தூ மொழிக்கு புகழாரம்....!

 உர்தூ மிக அழகான மொழி.....!

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு புகழாரம்.....!!

புதுடெல்லி, அக்.30- உலகிலேயே மிகவும் அழகான மொழி உர்தூ என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு புகழாரம் சூட்டியுள்ளார். 

உலகப் புகழ்பெற்ற ஜாமிஆ மில்லியா பல்கலைகழகத்தின் 105வது நிறுவன நாள் விழா டெல்லியில் 29.10.2025 புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டது. மிகவும் சிறப்புடன் நடைபெற்ற இந்த விழாவில், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

உர்தூ மொழிக்கு புகழாரம் :

விழாவில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, உலகிலேயே மிகவும் அழகான மொழி உர்தூ என புகழாரம் சூட்டினார். அழகிய உர்தூ மொழி மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது என குறிப்பிட்ட அவர், இதன்மூலம் இந்து முஸ்லிம் மக்களிடையே எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த அமைதி நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் மிகவும் பலன் அளிக்கும் என்றும் ரிஜிஜு தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், உர்தூ மொழி குறித்து மற்ற அறிஞர்களை போன்று எனக்கு மிகவும் பெரிதாக தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன். உலகிலேயே மிகவும் அழகிய மொழிகளில் உர்தூவும் ஒன்றாகும். உர்தூ மொழியில் ஏராளமான அழகிய கவிதைகள், பாடல் உருவாக்கப்பட்டு, மக்களின் மனங்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்தியாவில் வாழும் 6 சிறுபான்மையின மக்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்கள் என்பது பெருமை அளிக்கும்  விஷயமாகும். நாடு உண்மையான வளர்ச்சி பெற வேண்டுமானால், இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் அது சாத்தியமாகாது. 

இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது உரையில் குறிப்பிட்டார். 

ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தின் 105வது நிறுவன நாளையொட்டில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கருத்தரங்கம், கலை, கண்காட்சி என நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: