" என்னைக் கவர்ந்த இனிய தலைவர் சிராஜுல் மில்லத் "
1990 ஆம் ஆண்டின் தொடக்க காலம் அது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெருந்தலைவராக திகழந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்கள் குறித்து "என்னைக் கவர்ந்த இனிய தலைவர் சிராஜுல் மில்லத்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டது. மறைந்த தலைவரின் பெருமைகளை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், பிற சமுதாய மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அந்த கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டு, தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து சமுதாய மக்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் சிராஜுல் மில்லத் அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட பழக்கம், அவருடைய இல்லத்தில் நானும் ஒரு குடும்ப உறுப்பினராக வாழ்ந்த நினைவுகள், அவர் என் மீது காட்டிய அன்பு, பரிவு ஆகியவற்றை சமுதாயமும் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என மனத்திற்குள் நினைத்துக் கொண்டு, "என்னைக் கவர்ந்த இனிய தலைவர் சிராஜுல் மில்லத்' கட்டுரை போட்டியில் நானும் கலந்துகொண்டு, என்னுடைய சிந்தனைக்கு எட்டிய வரிகளை, வார்த்தைகளாக வடித்து, எழுத்து வடிவத்தில் உருவாக்கி இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு கிளையின் தலைமை நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன்.
நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில், என்னுடைய அந்த கட்டுரை தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. டெல்லி வாழ்க்கையை நிறைவு செய்தபிறகு, சொந்த ஊருக்கு திரும்பியபோது, சிராஜுல் மில்லத் அவர்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சென்னைக்கு வந்த பரிசை வாங்கிச் செல்லுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார். தலைவரின் அன்பு கட்டளையை ஏற்று உடனே சென்னைக்கு சென்று வாலஸ் தோட்டத்தில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அப்போது எனக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி, நல்ல எழுத்து திறமை இருக்கிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள் என தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் என்னை வாழ்த்தி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படும் இந்த இனிய தருணத்தில், நான் எழுதி பரிசு பெற்ற அந்த கட்டுரையை மீண்டும் மணிச்சுடர் நாளிதழ் வாசகர்கள் படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தருகிறேன்.
என்னைக் கவர்ந்த இனிய தலைவர் :
புதுடெல்லி, குளிர்காலத்தின் ஒரு மாலைப்பொழுது. தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களைத் தமிழ்நாடு இல்லத்தில் முதன்முறையாக நேரிடையாக சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிராஜுல் மில்லத் அவர்களை நான் மீலாது மேடை, இலக்கிய மேடை, அரசியல் மேடை எனப் பல கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். அவருடைய இனிமையான குரலில் செந்தமிழைப் பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், அவரை நேரில் பார்த்துப் பேசி மகிழ்ந்தது அந்த பிப்ரவரி மாதத்தின் மாலை நேரத்தில் தான்.
தலைவர் அவர்களை நேரில் சந்திப்பதற்கு முன்பு, என்னுடைய உள்ளத்தில் ஒரு சிறிய சந்தேகம் இருக்கவே செய்தது. அதற்குக் காரணம், இன்றைய அரசியல்வாதிகளின் போக்கு! சாதாரண நகராட்சி உறுப்பினர் கூட பெரிய நடை, உடை, பாவனை என்ற ரீதியில் இருக்கிறார்கள். சந்திக்கச் சென்றால் மரியாதைக் குறைவாக பேசுவது, நடப்பது, எளியோர்களை எள்ளி நகையாடுவது என்ற போக்கு அவர்களிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிராஜுல் மில்லத் அவர்களைச் சந்தித்தேன். முதல் சந்திப்பே என்னை வெட்கப்பட வைத்தது. என் கண்களில் ஆனந்தக் கண்ணீர். என்னைத் தலைவர் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்த வேலூர் சகோதரர் ஷேக் மீரான் அவர்கட்கு இப்படி கடிதம் வரைந்தேன்.
"அன்பு சகோதரர் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைவக்கும் (வரஹ்). முதலில் இறைவனிடம் மன்னிப்பு கோருகிறேன். காரணம், தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்தேன். அவர் என் மீது பொழிந்து அன்பு, நடத்திய விதம் இவையாவும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இப்படிப்பட்ட தலைவரை மற்ற அரசியல்வாதிகள் போல் இருப்பார் என நினைத்து விட்டோமே என மனம் வருந்துகிறேன். இறைவன் என்னை மன்னிப்பானாக. சிராஜுல் மில்லத் சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, மனிதநேய பண்பாளர் கூட" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டேன்.
அழகிய பண்புகள் :
பின்னர் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள், புதுடெல்லியில் அவருடைய இல்லத்தில் இருந்திருக்கிறேன். அவருடைய எளிமை, விருந்தோம்பல், எல்லோரையும் அன்புடன், மரியாதையுடன் நடத்தும் அந்தப் பண்பு எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரைப் பார்க்க வரும் எளியோரையும், உட்கார வைத்துப் பேசுவார். வாங்க, உட்காருங்க என "ங்க" போட்டு மரியாதையுடன் அழைப்பார். என்னைக் கூட இது நாள் வரையில் வா, போ என்ற ரீதியில் தலைவர் அழைத்தது இல்லை.
ஒருமுறை ரயிலில் தலைவர் அவர்களோடு பயணம் செய்யக் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. இரவு நேரம், தலைவர் கூறினார். "தம்பி உங்களுக்கு களைப்பாக இருக்கும் படுத்துக் கொள்ளுங்கள். நான் சிறிதுநேரம் புத்தகம் படித்துவிட்டு உறங்குகிறேன்" என்றார். தலைவர் சொல்லியது போலவே நான் உறங்கச் சென்றேன். இரவு நேர நல்ல உறக்கம். திடீரென வண்டி விபத்துக்குள்ளாகியது. நான் மேலே 'பெர்த்'திலிருந்து கீழே விழுந்தேன். தலைவருக்கு பலமான காயம். எனக்கு லேசான காயம்தான். விபத்து காரணமாக ரயில் பெட்டியில் எங்கும் ஒரே பரபரப்பு. உதவி வேண்டிய அக்கம்பக்கத்தில் இருந்தோர் அலைந்தனர். நம்முடைய பெட்டிக்கு மருத்துவர் ஒருவர் வந்தபோது தலைவர் கூறினார்: "டாக்டர் எனக்கு லேசான காயம்தான். தம்பி அஜீஸுக்குதான் பலமான காயம். மேலிருந்து கீழே விழுந்துவிட்டார். அவருக்கு முதலில் முதலுதவி சிகிச்சை செய்யுங்கள்" என்றார். என் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. மனிதநேயத்திற்கு இந்த ஓர் உதாரணம் போதுமே! தன்னிடம் பழகிறவர்களிடமும் எப்படி அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும் என்ற பண்பை இன்றைய நாளில் தலைவர் அவர்களிடம் மட்டுமே காண முடியும்.
சமுதாயத்தின் மீது அக்கறை :
நம்முடைய சமுதாயத்தின் மீது தலைவர் அவர்கட்கு இருக்கும் அக்கறை, பண்பு, பாசத்திற்கு இதே ஓர் உதாரணம்: வேலூரைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் தி.அ.முகமது சகி அவர்கள், டெல்லிக்கு முதன் முதலாக வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும், தலைவர் அவர்கள் உடனே தொலைபேசியில் எண்களைச் சுழற்றினார். (அப்போது செல்பேசி எல்லாம் கிடையாது) இணைப்பு கிடைக்க சிறிது நேரம் ஆனது. அப்போது தலைவர் அவர்கள் என்னை பார்த்து கூறினார். "நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி வந்திருக்கிறார். அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. முதலில் நாம் தான் வாழ்த்துகள் கூற வேண்டும்" என சொல்லி இணைப்பு கிடைத்ததும், அந்த திமுக உறுப்பினரை உள்ளன்போடு வாழ்த்தினார். எனக்கு ஆச்சரியம். காரணம் அந்த திமுக உறுப்பினர் நடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சிராஜுல் மில்லத் அவர்கள் போட்டியிட்டபோது கூட்டணி காரணமாக அவருக்கு எதிராக வேலை செய்தவர். அப்படிப்பட்டவர்களையுமை வாழ்த்தும் குணம் தலைவர் அவர்களிடம் இருக்கிறது.
முடிந்தால் முன்னிறுத்தட்டும் :
தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம். தாள்கள் போதாது. பேனாவில் மை போட்டுக் கொண்டே இருக்க நேரிடும். கடைசியாக, அறிஞர் ஷுஜபு ஆலிம் அவர்கள் கூறிய வார்த்தைகளோடு என்னுடைய கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். 'தலைவர் சிராஜுல் மில்லத் மீது குறை கூறுபவர்கள், சந்தேகிப்பவர்கள், தங்களால் முடிந்தால் அவரைப் போன்ற ஒரு சிறந்த சமுதாய தலைவரைக் கொண்டு வந்து முன்னிறுத்தட்டும் பார்ப்போம்!
இப்படி சிராஜுல் மில்லத் அவர்கள் குறித்து நான் மேலே எழுதிய கட்டுரை தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு அந்த அழகிய வார்த்தை மொழிகளுக்கு தான் எனக்கு கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. அதுவும் சிராஜுல் மில்லத் அவர்களின் கைகளால் அந்த பரிசு கடிகாரம் வாங்கியது எனக்கு மிகவும் பெருமையாகும். அது என்றுமே மறக்க முடியாத அனுபவமாகும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment