Thursday, October 23, 2025

இஸ்ரேலுக்கு ஐ.நா. வலியுறுத்தல்....!

காஸாவில் 15 ஆயிரம் பாலஸ்தீன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இஸ்ரேல் மறுப்பு....! 

மருத்துவச சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்....!!

காஸாவிற்கு அடிப்படைத் தேவைகளை அனுமதிப்பது இஸ்ரேலின்  கடமை என்று சர்வதேச நீதிமன்றமும் தீர்ப்பு....!!! 

காஸா, அக்.23- இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவச் சிகிச்சைக்காக காஸாவில் காத்திருக்கும் 15 ஆயிரம் பாலஸ்தீன நோயாளிகள் வெளிநாடுகளுக்சு சென்று சிகிச்சைப் பெற இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. 

இரண்டு ஆண்டுகள் தாக்குதல்கள்:

காஸா மீது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திய கடுமையாக தாக்குதல்கள் காரணமாக அக்டோபர் 2023 முதல் குறைந்தது 68 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்தனர்.  மற்றும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கடுமையான தாக்குதல்கள் காரணமாக 15 ஆயிரத்ற்கும் மேற்பட்ட பாலஸ்தீன நோயாளிகள் வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற காத்திருக்கிறார்கள். 

ரஃபா எல்லை மூடல் :

ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி ரஃபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் மூடியுள்ளது. அத்தியாவசிப் பொருட்கள், மருந்துகள் காஸாவிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், தாக்குதலில் படுகாயம் அடைந்த 15 ஆயிரம் பாலஸ்தீன நோயாளிகள் மருத்துவச் சிகிச்சைப் பெற முடியாமல் தவித்து வேதனை அடைந்து வருகிறார்கள். 

ஐ.நா. வலியுத்தல் :

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் ரஃபா எல்லைக் கடக்கும் பகுதி மூடப்பட்டிருப்பதால், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் 15 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் காஸாவிலிருந்து மருத்துவ வெளியேற்றத்திற்காகக் காத்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, காஸாவிலிருந்து மருத்துவச் சிகிச்சைப் பெற பாலஸ்தீன மக்கள்  வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு இஸ்ரேலை ஐ.நா வலியுறுத்துகிறது.

இதேபோன்று, ஆக்கிரமிப்பு சக்தியாக, போரினால் பாதிக்கப்பட்ட காஸாவிற்கு அடிப்படைத் தேவைகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு ஒரு கடமை உள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இஸ்ரேல்,  போர் முறையில் தனது தந்திர நடவடிக்கையாக காஸா மக்கள்  பட்டினி கிடப்பதை பயன்படுத்துகிறது என்று சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  

உடல்கள் அடக்கம் :

இதனிடையே, சித்திரவதை மற்றும் மரணதண்டனைக்கான அறிகுறிகளுடன் இஸ்ரேலால் காஸாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 54 அடையாளம் தெரியாத பாலஸ்தீனியர்களின் உடல்கள் மத்திய டெய்ர் எல்-பாலாவில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: