Saturday, January 3, 2026

முஸ்லிம் மாணவியின் வகுப்பறை நோக்கிய பயணம்...!

ஹிஜாப் சர்ச்சை முதல் முதுகலை படிப்புக்கான முயற்சி வரை: 

மங்களூரு முஸ்லிம் மாணவியின் வகுப்பறை நோக்கிய பயணம்...!

வாழ்க்கையில் சாதிக்க ஹிஜாப் ஒருபோதும் தடையாக இருப்பது இல்லை என்பதை முஸ்லிம் பெண்கள் நிரூபித்து வருகிறார்கள். தங்களுடைய வாழ்வியல் பாதுகாப்பின் ஒரு அங்கமாக ஹிஜாப் அணிந்துகொண்டு அவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஹிஜாப்புடன் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கல்வியை கற்று மிகப்பெரிய அளவுக்கு சாதிக்கும் முஸ்லிம் பெண்கள், பின்னர், அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் உயர்ந்த நிலைக்கு சென்று சாதித்து வருகிறார்கள் என்பதை தற்போது உலகம் கண்டு வியப்பு அடைந்து வருகிறது. 

அந்த வகையில் ஹிஜாப் சர்ச்சை முதல் முதுகலை படிப்புக்கான முயற்சி வரை மங்களூரு முஸ்லிம் மாணவி ஒருவர் வகுப்பறை நோக்கிய பயணம் மேற்கொண்ட அழகிய கதையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் முஸ்லிம் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியவருவதுடன், வாழ்க்கையில் சாதிக்க ஹிஜாப் எப்போதும் தடையாக இருப்பது இல்லை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். 

கர்நாடகாவில் வெடித்த ஹிஜாப் சர்ச்சை :

கர்நாடகா மாநிலத்தில் 2022-ல், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் உடுப்பியில் வகுப்புகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டபோது ஒரு சர்ச்சை வெடித்தது. இது வகுப்புவாத பதட்டங்களுக்கு வழிவகுத்தது. அத்துடன் கல்வி நிறுவனங்களில் அனைத்து மத உடைகளுக்கும் தடை விதிக்க கர்நாடக அரசுக்குத் தூண்டியது. இந்த விவகாரம் பின்னர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அது பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியது. ஹிஜாப் சர்ச்சை காரணமாக. பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டதால், பல முஸ்லிம் மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தினார்கள். இஸ்லாமிய கலாச்சாரத்தை கைவிட முடியாது என்று உறுதியாக இருந்த பெற்றோர்கள், தங்களுடைய பெண் குழந்தைகளை பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். இதனால் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவிகளின் கல்வி தடைப்பட்டது. 

எனினும் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் கூட, பல முஸ்லிம் மாணவிகள், தங்களுடைய கல்வியை தொடர முயற்சிகளை மேற்கொண்டனர். தொலைத்தூரக் கல்வி மூலம் பயின்று பட்டங்களை பெற்றார்கள். பலர் தடைப்பட்ட கல்வியை மீண்டும் தொடர விரும்பி, ஹிஜாப் சர்ச்சை முடிவுக்கு வந்தபிறகு மீண்டும் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.  அப்படி தான், முஸ்லிம் பெண் கௌசியா நிறுத்தப்பட்ட தன்னுடைய கல்வியை மீண்டும் தொடங்கி, முஸ்லிம் சமுதாயம் முன்பு ஒரு அழகிய செய்தியை கொண்டு சேர்த்துள்ளார். 

சாதனை மாணவி கௌசியா :

கர்நாடகாவில் 2022-ல் ஹிஜாப் சர்ச்சை வெடித்தபோது ஹம்பன்கட்டாவில் உள்ள மங்களூரு  பல்கலைக்கழகக் கல்லூரியில் தனது இளங்கலைப் படிப்பை பாதியில் நிறுத்திய கௌசியா என்ற மாணவி, தற்போது சிஜிபிஏ  8-க்கும் மேற்பட்ட புள்ளி மதிப்பெண்களுடன் மருத்துவ இயற்பியலில் தனது முதுகலைப் படிப்பை முடித்துள்ளார்.

ஹிஜாப் சர்ச்சை காரணமாக தனது ஆறாவது செமஸ்டர் பிஎஸ்சி வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாததால் ஓராண்டு இடைவெளி எடுத்த 24 வயதான கௌசியா, இப்போது சுலேகா யெனெபோயா புற்றுநோய் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் கதிர்வீச்சு பாதுகாப்பு அதிகாரியாக வேண்டும் என்பதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். தனது படிப்பைத் தொடர்ந்த பிறகு, கொனாஜேயில் உள்ள மங்களூர் பல்கலைக்கழகத்தின் மங்களகங்கோத்ரி வளாகத்தில் மருத்துவ இயற்பியல் முதுகலைத் திட்டத்தில் சேர்ந்த அவர், வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தனது பட்டத்தைப் பெற உள்ளார்.

கல்வித்துறையில் சாதனை : 

ஹிஜாப் சர்ச்சைச் சம்பவத்தை நினைவு கூர்ந்த கௌசியா, தான் தனது பிஎஸ்சி ஐந்தாவது செமஸ்டரை முடித்துவிட்டதாகவும், பின்னர் கல்விக்குத் திரும்புவதற்கு முன்பு ஒரு வருடம் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்ததாகவும் கூறினார். "ஆரம்பத்திலிருந்தே, மருத்துவ இயற்பியலில் ஒரு தொழிலை உருவாக்குவதே எனது இலக்காக இருந்தது. இருப்பினும், நான் ஹிஜாப் சர்ச்சையின் மையத்தில் சிக்கிக்கொண்டேன். மற்றவர்களைத் தூண்டிவிட்டதாக என் மீது பழி சுமத்தப்பட்டது. இந்த முழு சம்பவமும் எனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அது இறுதியில் என்னை வலிமையாக்கியது. இன்று, நான் ஒருமுறை கற்பனை செய்ததை விட கல்வித்துறையில் நான் அதிகம் சாதித்துள்ளேன்" என்று கௌசியா கூறினார்.

கைகம்பாவைச் சேர்ந்த கௌசியா, தனது குழுவில் இருந்த ஆறு மாணவிகள் ஐந்தாவது செமஸ்டரின் போது கல்லூரியை விட்டு வெளியேறியதாகக் கூறினார். "நானும் உட்பட எங்களில் நான்கு பேர் பின்னர் பெசண்ட் மகளிர் கல்லூரியில் சேர்க்கை பெற்றோம். ஒரு மாணவி தனது படிப்பை நிறுத்திக்கொண்டார். ஏனெனில் அவரது பாடத் தேர்வு பல்கலைக்கழகக் கல்லூரியில் மட்டுமே கிடைத்தது. மற்றொருவர் பிஎஸ்சி படிப்பை விட்டுவிட்டு ஒரு தொழில்முறைப் படிப்பைத் தொடர்ந்தார்" என்று அவர் மேலும் கூறினார். "தங்கள் இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் இப்போது வேலை செய்கிறார்கள். சிலர் திருமணம் செய்துகொண்டனர்" என்றும் சாதனை மாணவி கௌசியா நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்.  

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: