Saturday, January 24, 2026

ஹஜ் ஆய்வாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்.....!

மும்பை ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற  மாநில ஹஜ் ஆய்வாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்.....!

ஒன்றிய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்பாடு....!!

மும்பை, ஜன.25- இந்தியாவில் இருந்து இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறந்த வழிக்காட்டுதல்களை வழங்கும் நோக்கில் அனைத்து மாநில ஹஜ் ஆய்வாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் ஜனவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. அப்போது, செயல்பாட்டு நெறிமுறைகள், ஒருங்கிணைப்பு வழிமுறைகள், நலத்திட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில ஹஜ் ஆய்வாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இரண்டு நாள் பயிற்சி :

மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் நடந்த இந்த இரண்டு நாள் பயிற்சியில், சவூதி அரேபிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஹஜ் கடமையின்போது, ​​மாநில ஹஜ் ஆய்வாளர்களை அவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகளுக்கு முழுமையாகத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

இந்திய ஹஜ் யாத்திரீகர்களுக்குத் தடையற்ற வசதிகளையும், பயனுள்ள ஆதரவையும் உறுதி செய்வதற்காக, செயல்பாட்டு நெறிமுறைகள், ஒருங்கிணைப்பு வழிமுறைகள், நலத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் களத்தில் உள்ள சவால்கள் குறித்து மாநில ஹஜ் ஆய்வாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

ஆலோசனைகள் :

முதல் நாளின் தொடக்க அமர்வில் உரையாற்றிய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார், யாத்திரீகர்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற மற்றும் கண்ணியமான ஹஜ் அனுபவத்தை உறுதி செய்வதில் மாநில ஹஜ் ஆய்வாளர்கள் ஆற்றிவரும் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் போது ஹாஜிகளுக்கு உதவும் வேளையில், மாநில ஹஜ் ஆய்வாளர்கள் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் இயல்பான, இரக்கமுள்ள மற்றும் சேவை மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாநில ஹஜ் ஆய்வாளர்களின் நடத்தையும், அவர்களின் உடனடிப் பதிலும் யாத்திரீகர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் நல்வாழ்வையும் நேரடியாகப் பாதிக்கின்றன என்று செயலாளர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்தப் பயிற்சி அமர்வில் உரையாற்றிய இந்திய ஹஜ் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி  சஹ்னவாஸ், ஹஜ்ஜின் போது பல்வேறு பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்பது மற்றும் செயல்பாட்டு அம்சங்களை எடுத்துரைத்தார். சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் இயக்குநர்  நசீம் அகமது, நிர்வாக நடைமுறைகள், நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் மற்றும் சரியான நேரத்தில் குறைகளைத் தீர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.

                                        ==========================

"ஹஜ் யாத்திரீகர்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற மற்றும் கண்ணியமான ஹஜ் அனுபவத்தை உறுதி செய்வதில் மாநில ஹஜ் ஆய்வாளர்கள் முக்கிய பங்கு ஆற்றிவருகிறார்கள். சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் போது ஹாஜிகளுக்கு உதவும் வேளையில், மாநில ஹஜ் ஆய்வாளர்கள் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் இயல்பான, இரக்கமுள்ள மற்றும் சேவை மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்" 

                                                ==========================

ஹஜ்ஜின் போது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் எல். சுவாஸ்திச்சரன் விளக்கினார். அவர் பொது சுகாதாரத் தயார்நிலை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் யாத்திரீகர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக மருத்துவக் குழுக்களுடன் ஒருங்கிணைப்பது குறித்து மாநில ஹஜ் ஆய்வாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஹஜ் பயணிகளுக்கு வசதிகள் :

இந்தப் பயிற்சித் திட்டத்தில் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்தல், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள், அவசரகாலப் பதில் நடவடிக்கைகள், சவூதி அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள கண்காணிப்பு மற்றும் குறை தீர்ப்பதற்காக டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்த விரிவான அமர்வுகள் நடைபெற்றன. இந்த இரண்டு நாள் முகாமில் மாநில ஹஜ் ஆய்வாளர்களின் வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்கான தயார்நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஊடாடும் அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் நிறைவடைந்தது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: