Saturday, January 17, 2026

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சாதனை.....!

மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் வரலாற்றுச் சாதனை.....! 

ஆர்.எஸ்.எஸ். கோட்டையான நாக்பூரில் 4 வார்டுகளில் வெற்றி....!! 

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து....!!!

நாக்பூர், ஜன.18- மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாக்பூர் மாநகராட்சியில் இ.யூ.முஸ்லிம் லீக் நான்கு இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை செய்துள்ளது. வெற்றி பெற்ற நான்கு பேரில் ஒருவர் சகோரத சமுதாயத்தை சேர்ந்த பெண்மணி ஆவார். இந்த வெற்றி, முஸ்லிம் லீகின் சமய நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த நற்சான்றாக உள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் :

பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் முதற்கட்டமாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ஆம் தேர்தல் நடைபெற்று, ஜனவரி 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

நாக்பூர் மாநகராட்சிக்கு 4 பேர் தேர்வு :

ஆர்.எஸ்.எஸின் கோட்டையாக கருதப்படும் நாக்பூர் மாநகாட்சிக்கு நடந்த தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மொத்தம் 16 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலி 16 பேரில் 4 பேர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். 

இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், அன்சாரி முஹம்மது முஜதாபா, ஷீமா குரேஷி, அஸ்லம் கான் முல்லாஹ் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ரேகா பாட்டீல் ஆகிய நான்கு பேரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 6ஏ வார்டில் 9 ஆயிரத்து 185 வாக்குகள் பெற்று ரேகா பாட்லும், 6பி வார்டில் 9 ஆயிரத்து 29 வாக்குகள் பெற்று அன்சாரி முஹம்மது முஜதாபாவும், 6சி வார்டில் 9 ஆயிரத்து 269 வாக்குகள் பெற்று ஷீமா குரேஷியும், 6டி வார்டில் 10 ஆயிரத்து 24 வாக்குகள் பெற்று  அஸ்லம் கான் முல்லாஹ்வும் அமோக வெற்றி பெற்று இருக்கிறார்கள். 

நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு குவியும் வாழ்த்துகள் :

நீண்ட காலத்திற்குப் பிறகு, மகாராஸ்டிரா மாநிலத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் பெற்றுள்ள இந்த வெற்றி, அங்குள்ள இயக்க தோழர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூர் மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்களுக்கும் இயக்க தோழர்கள் மட்டுமல்லாமல், நாக்பூரில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். வெற்றி வேட்பாளர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் அவர்கள் தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். 

புதிய வரலாறு படைக்கப்படும் :

இந்த வரலாற்று வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் மகிழ்ச்சி தெரிவித்த மகாராஷ்டிரா மாநில இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சி.எஸ்.அப்துர் ரஹ்மான் மாநில தலைவர் அஸ்லாம் சாஹிபின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்று இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,  நாக்பூர் மாநகராட்சியில் நான்கு வார்டுகளில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 16 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினார்கள். அதில் நான்கு பேர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது இ.யூ.முஸ்லிம் லீகை பொருத்தவரை மிகப்பெரிய வரலாற்று வெற்றியாகும். மகாராஷ்ராவில் முன்பு சட்டமன்ற, நகராட்சிகள் என அனைத்து அமைப்புகளில் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் இடம்பெற்று இருந்தார்கள். சில காரணங்களால் இயக்கம் சற்று பலவீனம் அடைந்து இருந்தது. 

இதற்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். தற்போது அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.சரியான முறையில் எந்தவித மத துவேஷங்களை பரப்பாமல், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். கடின உழைப்பு மூலம் இந்த வெற்றி கிடைத்து இருக்கிறது. நாங்கள் மொத்தம் 16 வேட்பாளர்களை நிறுத்தி இருந்தோம். இயக்கத்தின் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டோம். 16 தொகுகளில் 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்து இருக்கிறது. மற்ற இடங்களில் குறைந்த வாக்குகள் பெற்று வெற்றி பறி போய் உள்ளது. அதேநேரத்தில் நான்கு இடங்களிலும் மிகப்பெரிய அளவுக்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறோம். 

கேரளா, தமிழ்நாட்டை பின்பற்றி செயல்பாடு:

கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் இ.யூ.முஸ்லிம் லீக் பின்பற்றும் வழிமுறைகளை பின்பற்றி அன்சாரி, குரேஷி, தலித் சமுதாய மக்களை ஒருங்கிணைந்து நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த வெற்றி முஸ்லிம் லீகிற்கு ஒரு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. அதன் பயணம் மேலும் சிறப்பாக அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது. இனிவரும் காலங்களில் மகாராஷ்ராவில் இ.யூ.முஸ்லிம் லீக் சிறப்பான அரசியல் பயணத்தை மேற்கொள்ளும். இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து தவறாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு நாக்பூர் வெற்றி நல்ல பதிலை தந்துள்ளது. முஸ்லிம் லீக் எப்போதும் மதநல்லிணக்கத்தை பேணி மக்கள் சேவை ஆற்றும் இயக்கமாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இனியும் மகாராஷ்டிராவில் அந்த பணிகள் தொடரும். வாக்கு அரசியலில் முஸ்லிம் லீக் எப்போதும் ஈடுபடுவதில்லை. மக்கள் நலனே முக்கியம் என கருதி செயல்படுகிறது. நாங்கள் இளைஞர்கள் மத்தியில் இயக்கத்தை கொண்டு சென்று சேர்த்து அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றுவோம். இவ்வாறு  மாநில பொதுச் செயலாளர் சி.எஸ்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். 

தலைவர்கள் வாழ்த்து :


மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், மகாராஷ்டிரா மாநில தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறியுள்ள தேசிய தலைவர், இனி வரும் காலங்களில் மகாராஷ்ராவில் இ.யூ.முஸ்லிம் லீக் நிச்சயம் மகத்தான வெற்றிப் பயணத்தை தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கேரளா மாநில உள்ளாட்சித் தேர்தலில் வரலாற்றுச் சாதனை புரிந்து இயக்கம் தற்போது நாக்பூரில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வரலாற்றில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை சட்டம் ஏற்றும் அவைக்கு அனுப்பிய முஸ்லிம் லீக் , இன்று அவர் சார்ந்த சமூகத்திலிருந்து ஒரு பெண்ணை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும், மற்றொருவரை ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாநகராட்சிக்கு அனுப்பி புதிய வரலாறு படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: