இந்திய ஹஜ் பயணிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்ய முடிவு...!
மதீனாவில் உள்ள இந்திய ஹஜ் பயணிகள் இல்லத்தில் ஒன்றிய சிறுபான்மையின அமைச்சகச் செயலாளர் நேரில் ஆய்வு...!!
மதீனா, ஜன.07-இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹஜ் பயணிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்வது குறித்து மதீனாவில் ஒன்றிய சிறுபான்மையின அமைச்சகத் துறைச் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் நேரில் சென்று முக்கிய ஆய்வு மேற்கொண்டார்.
2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் செய்யும் இந்திய ஹஜ் பயணிகள் அனைவருக்கும் சிறப்பான ஏற்பாடு செய்ய ஒன்றிய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதீனாவில் நேரில் ஆய்வு :
இந்நிலையில், சவூதி அரேபியாவின் புனித மதீனாவில் உள்ள இந்திய ஹஜ் பயணிகளுக்கான இல்லத்தில் ஒன்றிய சிறுபான்மையின அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் செவ்வாய்கிழமையன்று (06.01.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை அவர் கேட்டறிந்தார். இந்திய ஹஜ் பயணிகளுக்கு செய்யப்பட்ட வேண்டிய தங்கும் வசதிகள், மருத்து வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் முறையாக செய்யப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும், மதீனாவில் உள்ள இந்திய ஹஜ் பயணிகளுக்கான இல்லத்தில் சந்திர சேகர் குமார் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
செயலாளர் உறுதி :
மதீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து பின்னர் கருத்து கூறியுள்ள ஒன்றிய சிறுபான்மையின அமைச்சகத்தின் செயலாளர் சந்திர சேகர் குமார், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் ஒன்றிய அரசு தேவையான உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். சவூதி அரேபிய அரசின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்திய பயணிகளுக்கு வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது செய்யப்பட்டு வரும் அம்சங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பப்பட்டு வருவதாகவும், மேலும் தேவையான வசதிகள் செய்வது குறித்தும் ஆராயப்படும் என சந்திர சேகர் குமார் தெரிவித்தார்.
ஹஜ் சுவிதா ஆப் என்ற செயலி மேலும் நவீனப்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் டிஜிட்டல் முறையில் இந்திய ஹஜ் பயணிகளுக்கு முழுமையாக விவரங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் ஜித்தா சென்ற செயலாளர் சந்திர சேகர் குமார், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி சதாஃப் சௌதரியை நேரில் சந்தித்து தம்முடைய ஆய்வு குறித்து முழுமையாக எடுத்துரைத்தார். அத்துடன், சவூதி அரேபியா அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த விவரங்களையும் அவர் விளக்கி கூறினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment