தமிழ்நாடு அரசின் செம்மொழி இலக்கிய விருதுகளில் உர்தூ மொழியை சேர்க்க வேண்டும்....!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு உர்தூ அகாடமி துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மான் கடிதம்.....!!
சென்னை, ஜன.21- அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான செம்மொழி இலக்கிய விருதுகளை வழங்கும்போது, உர்தூ மொழியையும் சேர்ந்து அந்த மொழி இலக்கியப் படைப்புகளுக்கும் செம்மொழி இலக்கிய விருது வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு உர்தூ அகாடமி கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளது.
முதலமைச்சருக்கு கடிதம் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு உர்தூ அகாடமி துணைத் தலைவர் டாக்டர் முஹம்மது நயீமுர் ரஹ்மான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் விவரம் வருமாறு: தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்ற தமிழக அரசிற்கு, தமிழ்நாடு மாநில உர்தூ அகாடமி சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்பிற்கு தேசிய அளவிலான விருதுகளை அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பல கோடி மக்களால் பேசப்படும் மொழியும், மிகச் சிறந்த இலக்கியங்களையும், காப்பியங்களையும், அறிவுக் கருவூலங்களையும் தாங்கி நிற்கும் செம்மை மிக்க உர்தூ மொழியை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
உர்தூ மொழியின் பெருமை :
உர்தூ மொழியின் வளமான இலக்கணம் மற்றும் இலக்சியச் செறிவினை நன்கு உணர்ந்த நவீன தமிழகத்தின் சிற்பியும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில உர்தூ அகாடமி உருவாக்கப்பட்டு, கால் நூற்றாண்டைக் கடந்த தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கலைஞர் அவர்கள் உர்தூ மொழிக்கு அளித்த அங்கீகாரம் போன்று, தமிழக அரசின் செம்மொழி இலக்கிய விருதுகளில் உர்தூ மொழியை இணைக்க வேண்டும். தமிழகத்தில் வாழும் உர்தூ மொழி மக்கள், உர்தூ கவிஞர்கள், எழுத்தாளர்கள் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். நாட்டின் முதல் தேசிய கீதம் தந்த மகாகவி அல்லாமா இக்பால், மகாகாவி மிர்சா காலிப் போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்ளை இந்த உலகிற்கு தந்து அறிமும் செய்த அழகிய மொழி உர்தூவாகும்.
கஜல், நாவல், சிறுகதை, நாடகம், ஆன்மீக இலக்கியம், திரைப்பட பாடல்கள் என்று இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்தி மக்கள் மொழியாக உர்தூ மொழி உயிர்ப்புடன திகழ்ந்து வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தேசிய அளவிலான இலக்கிய விருதுகளுக்கு உர்தூ மொழியையும் சேர்த்து விருதுகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உர்தூ அகாடமி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டலாலினக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை 20.01.2026 அன்று நேரில் சந்தித்த அவர், முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை வழங்கி, பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment