" சவூதியில் நடைபெற்ற கிளிஜா திருவிழா "
- தொழில்முனைவோர் கொண்டாட்டம் -
சவூதி அரேபியாவின் புரைதாவில் நடைபெற்ற 17வது கிளிஜா திருவிழா, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ஆண்டு 2026 ஜனவரி மாதம் 15 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா, ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. அத்துடன், பிராந்தியத்தின் பாரம்பரியத்தையும் தொழில்முனைவோர் உணர்வையும் கொண்டாடியது.
காசிம் வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருவிழா, சிறு வணிகங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததுடன், தொழில்முனைவோர் உள்ளூர் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த ஒரு தளத்தையும் வழங்கியது.
நூற்றுக்கணக்கான விற்பனை நிலையங்கள் :
இந்த திருவிழாவில் 340-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், சந்தைப்படுத்தல் மையங்கள் மற்றும் விற்பனைப் புள்ளிகள் அமைக்கப்பட்டு பங்கேற்பாளர்களை வரவேற்றன. அதேநேரத்தில் இந்தத் திருவிழா ஆயிரத்து 500 பருவகால வேலை வாய்ப்புகளை வழங்கியது.
சிறு வணிகக் கூடாரங்களில், குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள், கைவினைஞர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், பிராந்தியத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியப் பொருட்களைக் காட்சிப்படுத்தின.
=====================
"கிளிஜா திருவிழா குடும்பங்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து, வணிக நடவடிக்கைகளைத் தூண்டியது. நேரடி சந்தைப்படுத்தல் வழிகளைத் திறந்தது மற்றும் பொருளாதார வருவாயை மேம்படுத்தியது"
=====================
இந்தத் திருவிழா ஒரு முக்கிய சந்தைப்படுத்தல் தளமாக இருந்தது என்றும், இது விற்பனையை அதிகரித்தது, பிராண்ட் விழிப்புணர்வை மேம்படுத்தியது. அறிவுப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களுடன் தொடர்புகளை வளர்க்க உதவியது என்றும் பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். திருவிழாவில் பங்கேற்றதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்ததாகவும் அவர்கள் கூறினர்.
நேரடி சந்தைப்படுத்தல் :
திருவிழா குறித்து கருத்து தெரிவித்த காசிம் வர்த்தக சபையின் பொதுச் செயலாளரும் திருவிழாவின் மேற்பார்வையாளருமான முகமது அல்-ஹனாயா, "இந்த நிகழ்வு குடும்பங்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து, வணிக நடவடிக்கைகளைத் தூண்டியது. நேரடி சந்தைப்படுத்தல் வழிகளைத் திறந்தது மற்றும் பொருளாதார வருவாயை மேம்படுத்தியது" என்றார்.
இந்தத் திருவிழா, செயல்பாடுகள், சந்தைப்படுத்தல் மற்றும் சேவைகள் முழுவதும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பருவகால வேலைகளை வழங்கியது என்றும், இது தொழிலாளர் சந்தையை ஆதரித்து, தேசிய திறமைகளுக்கு வலுவூட்டி, இளைஞர்களை நிகழ்வுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்துடன் இணைத்தது என்றும் முகமது அல்-ஹனாயா மேலும் கூறினார்.
பாரம்பரிய குக்கீயான கிளிஜா :
கோதுமை மாவு, பேரீச்சம்பழம் அல்லது சர்க்கரை, பேரீச்சம்பழச் சாறு மற்றும் ஏலக்காய், எலுமிச்சை போன்ற இயற்கை மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய குக்கீயான கிளிஜா, ஆற்றல், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் இயற்கை புரதங்களின் செறிவான மூலமாகும்.
காசிமின் பாரம்பரியங்களில் வேரூன்றிய ஒரு கலாச்சார அடையாளமான இந்தக் குக்கீ, இந்தத் திருவிழா மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், பொதி செய்யப்பட்ட தயாரிப்புகளின் கிடைப்புத்தன்மையையும் விரிவுபடுத்தியுள்ளது.
சர்வதேச கிளிஜா திருவிழா :
அடுத்த ஆண்டு முதல், இந்தத் திருவிழா சர்வதேச கிளிஜா திருவிழா எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். இந்த மறுபெயரிடலுக்கு காசிம் ஆளுநர் இளவரசர் ஃபைசல் பின் மிஷால் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் இதை "உள்ளூர் முயற்சிகளை உலகளாவிய பொருளாதார இயந்திரங்களாக மாற்றுவதற்கான ஒரு வெற்றிகரமான மாதிரி" என்று விவரித்தார்.
கிங் காலித் கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த ஆண்டுத் திருவிழாவில் எகிப்து, துருக்கி மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேசப் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்,. இது ஒரு பன்முக கலாச்சார தளமாக அதன் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்







No comments:
Post a Comment