Thursday, January 1, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலும் முஸ்லிம் இயக்கங்களும்....!

 

" தமிழக சட்டமன்றத் தேர்தலும் முஸ்லிம் இயக்கங்களும் "

- ஜாவீத் -

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காலம் மிக அருகில் வந்துவிட்டது. இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள முஸ்லிம் இயக்கங்கள் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தங்களை தயார்படுத்தி வருகின்றனவா என்ற கேள்வி நம்மிடம் எழுந்தது. தேர்தல் காலங்களில் மட்டுமே இயங்கும் ஒருசில இயக்கங்களை தவிர்த்து, தமிழக முஸ்லிம் நலன்களில், சமூக நலனில் உண்மையாக அக்கறை கொண்ட  இயக்கங்கள் எப்படி தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளன.? தங்களை எப்படி தயார்படுத்தி வருகின்றன ?என்பதை அறிய முயற்சி செய்தோம். அந்த முயற்சியின் பலனமாக நாம் திரட்டிய பல தகவல்களையின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் முஸ்லிம் லீக் :

இந்திய முஸ்லிம்களின் ஒரே இயக்கமான தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் .யூ.முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த இயக்கத்தின் சார்பில் 52 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, பொதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 52 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள் கூட்டப்பட்டு, தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் நிலவரங்கள், .யூ.முஸ்லிம் லீக் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை என்பது போன்ற அம்சங்கள் இந்த கூட்டங்களில் உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் கேட்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் .யூ.முஸ்லிம் லீக் இறுதியாக எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னணி தலைவர்கள் பங்கேற்பு :

.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் மட்டுமல்லாமல், அந்த இயக்கத்தில் உள்ள சார்பு அணிகளின் பொதுக்குழு கூட்டங்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றன. குறிப்பாக .யூ.முஸ்லிம் லீக் மாநில மகளிரணி பொதுக்ழு கூட்டம், .யூ.முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம், வர்த்தகர் அணி, முஸ்லிம் யூத் லீக், சுதந்திர கிஸான் சங்கம், சுதந்திர தொழிலாளர் யூனியன், பிரவாஸி லீக் அயலக தமிழர் நல அணி, முஸ்லிம் மாணவர் பேரவை, வழக்கறிஞர் அணி என பல்வேறு அணிகளின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று, தேர்தல் தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு, தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த கூட்டங்களில், .யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே..எம்.முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்..ஷாஜஹான், துணைத் தலைவர்கள் எம்.அப்துர் ரஹ்மான், எஸ்.எம்.கோதர் மொகிதீன், பி.எஸ்.ஹம்சா, கே.நவாஸ் கனி எம்.பி, பேராசிரியர் சே.மு.மு. முஹம்மது அலி, தாவுத் பாஷா, கே.டி.கிஸர் முஹம்மது, மாநில செயலாளர்கள்,  காயல் மஹபூப், எச்.அப்துல் பாஸித், ஆடுதுறை .எம்.ஷாஜஹான், கே.எம்.நிஜாமுத்தீன், முஹம்மது இஸ்மாயில், அவுதா காதர், மாநில துணைச் செயலாளர்கள் எஸ்..இப்ராஹிம் மக்கீ, வி.எம்.பாரூக், பி.எம்.அப்துல் ஜப்பார், அப்துர் ரஹ்மான் ரப்பானி, வி.முஹம்மது தைய்யூப் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு, சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த முக்கிய அம்சங்களையும் கருத்துகளையும் பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் எடுத்து வைத்தனர்.

.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமல்லாமல், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கும் தாய்ச்சபை துணையாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றும் முன்னணி தலைவர்கள் தங்களது உரையின்போது எடுத்துக் கூறினார்கள்.

உலமாக்கள், உம்ராக்கள் சந்திப்பு :

இப்படி, மாநிலம் முழுவதும் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்திய .யூ.முஸ்லிம் லீக், அத்துடன் நின்றுவிடாமல், உலமாக்கள், உம்ராக்கள் சந்திப்புகளையும் மிகச் சிறப்பாக நடத்தியது. குறிப்பாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில், வேலூர், வாணியம்பாடி, குடியாத்தம் ஆகிய நகரங்களில் இந்த சந்திப்புகள் நடைபெற்றன. இதில் மாநில பொருளாளர் ஷாஜஹான், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சட்டமன்றத் தேர்தலில் சமுதாயம் எப்படி செயல்பட வேண்டும்.?, தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும்.?, முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணிக்கு கிடைக்க எப்படி களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்? என்பன போன்ற அம்சங்களை மிகமிக தெளிவாக எடுத்து வைத்தார்கள்.

இத்தோடு நின்றுவிடாமல், சமுதாய இளைஞர்கள் மத்தியிலும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதங்களை, ஆலோசனைகளை .யூ.முஸ்லிம் லீக் நடத்தியுள்ளது. தோழமைக் கட்சிகள் நடத்தும் சமுதாயம் சார்ந்த பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் முஸ்லிம் லீக் பங்கேற்று, தனது கூட்டணி தர்மத்தை நிலைநாட்டியது. தற்போதும் நிலைநாட்டி வருகிறது.

இதன்மூலம், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர தனது அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க .யூ.முஸ்லிம் லீக் தயாராக இருக்கிறது என்பது தெளிவாக தெரியவருகிறது. மேலும் ஊடகங்கள் சந்திப்பு, முக்கிய இதழ்களில் நேர்காணல் என அனைத்திலும் .யூ.முஸ்லிம் லீக் தனது கவனத்தை செலுத்தியது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

பிற இயக்கங்களின் நிலை :

சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அதற்கு முன்பே, தேர்தல் பணிகளில் .யூ.முஸ்லிம் லீக் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது என்பதை மேலே நாம் கண்ட விவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. .யூ.முஸ்லிம் லீகை தவிர பிற இயக்கங்கள் எப்படி தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள என்ற விவரங்கள் முழுமையாக தெரிய வரவில்லை. மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.. உள்ளிட்ட ஒருசில இயக்கங்கள் மட்டுமே, சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருவதை ஊடகங்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்த இயக்கங்களும், தமிழகத்தில் பாசிச சக்திகள் வலிமைப்பெறக் கூடாது என்ற நோக்கத்தில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. தேர்தல் நெருங்க, நெருங்க மாநிலத்தில் உள்ள பிற முஸ்லிம் இயக்கங்களில் செயல்பாடுகளும் வேகம் எடுக்கும் என உறுதியாக நம்பலாம்.

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம். தமிழகத்தின் நலன், முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒருகிணைந்து செயல்பட வேண்டும். அதுதான் தற்போதைய காலத்தின் தேவை என்பதை முஸ்லிம் இயக்கங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடாமல், சுயநலனின் கவனம் செலுத்தாமல், சமுதாய நலனை மட்டுமே முக்கியம் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, செயல்பட்டால் மட்டுமே, முஸ்லிம் வாக்குகள் சிதறாமல் ஒரே அணிக்கு சென்று சேரும். தேர்தல் நெருங்க நெருங்க நல்லது நடக்கும் என்று நம்புவோம். தமிழகத்தில் முஸ்லிம் இயக்கங்கள் மிகவும் வலிமையானவை என்பதை நிரூபிப்போம்.

=====================================

No comments: