Thursday, January 8, 2026

ஜம்முவில் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து....!

ஜம்முவில் மருத்துவப் படிப்பில் 42 முஸ்லிம் மாணவர்களை அனுமதித்த 

மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து....!

தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை -  எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்....!!

ஜம்மு, ஜன.09-ஜம்மு காஷ்மீரில் உள்ள  ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவச் சிறப்பு நிறுவனத்தில் முஸ்லிம் மாணவர்கள் 42 அனுமதிக்கப்பட்டதால், அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்களில்  42 பேர் எம்பிபிஎஸ் படிப்பில் ஜம்முவில் உள்ள அந்த கல்லூரி சேர்ந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்போது அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

42 முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி :

காஷ்மீரின் ஜம்முவில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவச் சிறப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான முதல் தொகுப்பில் உள்ள 50 இடங்களில் 42 முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஒருவர் சீக்கிய மாணவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த மாணவர் சேர்க்கை விகிதம் ஜம்முவில் உள்ள இந்துத்துவா குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி போராட்டங்களைத் தூண்டியது.

கடந்த இரண்டு மாதங்களாக, ஜம்முவில் உள்ள பாஜக தலைவர்கள், வலதுசாரி அமைப்புகள் மற்றும் உள்ளூர் வர்த்தக அமைப்புகள் மாணவர் சேர்க்கைப் பட்டியலை கடுமையாக எதிர்த்து, அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரின. இந்தக் கல்லூரி ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தால் நடத்தப்படுவதால், இது முதன்மையாக இந்து மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அந்தக் குழுக்கள் வாதிட்டன.

60 சமூக மற்றும் வலதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி, ஆரம்பத்தில் தகுதிப் பட்டியலை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்தது. அது சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது என்று தெரிந்ததும், கல்லூரியை முழுவதுமாக மூடுவதை நோக்கி கவனம் திரும்பியது.

பாஜக, ஆலய வாரியத்தின் தலைவராக இருக்கும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்து, மாணவர் சேர்க்கையை ரத்து செய்யுமாறு கோரியிருந்தது. தேசிய தகுதி மற்றும் நீட் நுழைவுத் தேர்வு  பட்டியலின்படி, தேசிய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்திய போதிலும், அந்தக் கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன.

அங்கீகாரம் ரத்து :

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் (NMC), அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை, பேராசிரியர் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட அம்சங்களை காரணம் காட்டியும், குறைந்தபட்ச தரநிலைகளில் கடுமையான குறைபாடுகளைக் காரணம் காட்டியும், ஜம்முவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவச் சிறப்பு நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. அத்தியாவசியத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், இந்த கல்லூரியில் உள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான அனுமதியை என்எம்சி.  ரத்து செய்துள்ளது. 

பாஜக வரவேற்பு :

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கையை பாஜ.க வரவேற்றுள்ளது. இது தரத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவரும் யூனியன் பிரதேசத்தின் பிற கல்லூரிகளில் உள்ள கூடுதல் இடங்களுக்கு எவ்விதத் தடையுமின்றி மாற்றப்படுவார்கள் என்றும் பாஜக எம்எல்ஏ ஆர்.எஸ். பதானியா கூறினார்.

உமர் அப்துல்லா வலியுறுத்தல் :

கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 08.01.2026 வியாழன் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா  வளாகத்தில் அதிகரித்து வரும் அரசியல்மயமாக்கல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்திருந்தார். அவர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் இந்தக் கல்லூரி காஷ்மீர் மக்களுக்கு தேவையில்லை. இது ஒரு மருத்துவக் கல்லூரியாக இருப்பதற்குத் தகுதியற்றது. இந்த நிறுவனத்தை மூடுங்கள். இந்த மாணவர்களுக்கு மற்ற கல்லூரிகளில் நாங்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்வோம் என்றும் அப்துல்லா கூறினார்.

கூடுதல் தகவல்கள் :

வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு நிறுவனம் ஒரு சிறுபான்மை நிறுவனமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும், எனவே, மாணவர் சேர்க்கை செயல்முறை வழிகாட்டுதல்களின்படியே நடத்தப்பட்டது என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் 13 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு தனது முதல் மாணவர் குழுவைத் தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை நீட் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் நடத்தப்பட்டாலும், 85 சதவீத இடங்கள் உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஜம்முவைச் சேர்ந்த எட்டு இந்து மாணவர்கள் மட்டுமே அந்தக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதனால் சர்ச்சை வெடித்து, கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: