Friday, January 23, 2026

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும் விட்டுவைக்காத இனவாதம்.....!

 "இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும் விட்டுவைக்காத இனவாதம்"

- ஜாவீத் - 

இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், தங்களது தாய் நாட்டை உண்மையாக நேசித்து பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை மிகச் சிறந்த முறையில் வழங்கி வருகிறார்கள். அறிவியல், பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், கலை, இசை என அனைத்துத் துறைகளிலும் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்புகள் இருந்து வருகின்றன. எனினும், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு துறைகளிலும் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டு வருகிறார்கள். நல்ல திறமைசாலியாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. 

இத்தகைய போக்கு அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம், முஸ்லிம்கள் மீது பாசிசச் சக்திகளுக்கு, அமைப்புகளுக்கு இருக்கும் வெறுப்பு என்றே கூற வேண்டும். நாட்டில் அமைதியாக வாழும் முஸ்லிம் மீது வெறுப்பு விதைத்து அதன்மூலம் அரசியல் லாபம் பெற சில சக்திகள் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றன.இதற்கு சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான தகவல்களை, செய்திகளை, காணொளிகளை தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நாட்டில் வாழும் 140 கோடிக்கும் அதிகமாக மக்களிடையே முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்களை பாசிசச் சக்திகள் தொடர்ந்து அள்ளி வீசிப் பரப்பிக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய சதி வலைகளில், சாதாரண முஸ்லிம்கள் முதல், பிரபலம் அடைந்த முஸ்லிம்கள் வரை சிக்கிக் கொள்ளும் ஒரு நிலை தற்போது நாட்டில் உருவாகியுள்ளது. இப்படி தான், உலக புகழ்பெற்ற ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாசிசச் சக்திகளின் கவனம் தற்போது திரும்பி, அவர் மீது வெறுப்புக் கக்கிக் கொண்டு இருக்கின்றன. 

பி.பி.சி.க்கு அளித்த நேர்காணல் :

உலகப் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான பி.பி.சி.க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த நேர்காணலில்,  "கடந்த எட்டு ஆண்டுகளாக பாலிவுட்டில் தனக்கு முன்புபோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை" என்று தெரிவித்து இருந்தார். மேலும், "இந்தி சினிமாவில் படைப்பாற்றல் இல்லாத சிலரிடம் அதிகாரம் குவிந்துள்ளதாகவும்" அவர் கூறியிருந்தார். அத்துடன், "தான் இசையமைத்து மராத்திய மன்னர் சிவாஜியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சாவா படம் பிரிவினை வாதத்தை பேசிய படம்" என்றும் ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார். 

இந்த கருத்துகள் வெளியானதும், சில தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இந்தி சினிமா குறித்து கூறிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ரஹ்மான் தெளிவான விளக்கத்தை வழங்கினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய நிலைப்பாட்டை அவர் விளக்கினார். 

ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் :

அந்த வீடியோவில் "நமது கலாச்சாரத்தை மதிப்பதும், அதனுடன் இணைந்து செயல்படுவதும், அதை கொண்டாடுவதும் எப்போதும் இசையின் மூலமாகவே நான் செய்துவந்தேன். இந்தியா தான் எனது உத்வேகம், எனது குரு, எனது வீடு” என்று ரஹ்மான் குறிப்பிட்டு இருந்தார். 

                                    =====================================

"உலகளவில் இந்திய இசைக்கு பெருமை சேர்த்தவர். ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். பல தசாப்தங்களாக இசையின் மூலம் மனிதநேயம், அமைதி, ஒற்றுமை ஆகிய மதிப்புகளை உலகம் முழுவதும் பரப்பி வரும் ஏ.ஆர். ரஹ்மானின் பங்களிப்பு அளவிட முடியாதது"

                                  =====================================

மேலும், “எங்களின் நோக்கம் சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் உணர்கிறேன். இந்த கலாச்சாரத்தை மதிப்பதும், அதற்கு சேவை செய்வதும் என் வாழ்நாள் முழுவதும் இசை வழியாகத்தான் நடந்து வந்திருக்கிறது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. என் நேர்மையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தியனாக பிறந்ததையே நான் ஒரு ஆசீர்வாதமாக நினைக்கிறேன். பல்வேறு கலாச்சாரங்களின் குரலை கொண்டாடக்கூடிய கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு இது. இசையுடன் பயணிக்கும் என் வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் என் இலக்கை நிறைவேற்றுகிறது. இந்த நாட்டிற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். கடந்த காலத்தை மதிக்கும், நிகழ்காலத்தை கொண்டாடும், எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கான அர்ப்பணிப்பாகவே என் வாழ்க்கை தொடரும்” என ரஹ்மான் கூறியிருந்தார். 

ரஹ்மானுக்கு ஆதரவு குரல் :

பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் எம்.பி கனிமொழி, ஜோதிமணி, மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா போன்ற பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஜாவீத் ஜாஃபிரி, பாரேஷ் ராவல் உள்ளிட்ட ஒருசில பாலிவுட் பிரபலங்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தனர். மேலும், தமிழகத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 

"உலகளவில் இந்திய இசைக்கு பெருமை சேர்த்தவர். ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். பல தசாப்தங்களாக இசையின் மூலம் மனிதநேயம், அமைதி, ஒற்றுமை ஆகிய மதிப்புகளை உலகம் முழுவதும் பரப்பி வரும் ஏ.ஆர். ரஹ்மானின் பங்களிப்பு அளவிட முடியாதது. கலைஞர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவர் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்துத் தாக்குதல் நடத்துவதும், அவமதிக்கும் வகையிலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்கும், கலாச்சார மரபுகளுக்கும் முற்றிலும் முரணானவை. கலைஞர்களை அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அவர்களின் சாதனைகளையும், சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளையும் புறக்கணித்து, இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை" என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் எழுப்பி, அவருக்கு எதிராக கருத்துகைள தெரிவித்தவர்களுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

சாதாரண மக்களின் நிலை கேள்விக்குறி :

உலக அளவில் பிரபலம் அடைந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீதே, வெறுப்பைச் சுமத்தி, இனவாதம் செய்யும் போக்கு அதிகரித்து இருப்பது நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், அரியானா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களாக இருந்து வருகின்றன. இந்த மாநிலங்களில் அடிக்கடி முஸ்லிம்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதனால் வட மாநிலங்களில் ஒருவித அச்சத்துடன் வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு அங்குள்ள முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்.  நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாகவே பணியாற்றும் முஸ்லிம்கள் மீது இந்தளவுக்கு ஏன் வெறுப்பு காட்டப்படுகிறது என்ற கேள்வி பொதுவாக இருந்து வருகிறது. எனினும் அதற்கு சரியான முறையில் தீர்வுகள் காணப்படவில்லை. இதனால், வெறுப்பு அரசியல் மீண்டும் மீண்டும் தலைத்தூக்கி உச்சத்தைத் தொட்டுக் கொண்டே இருக்கிறரு. 

===================================

No comments: