Wednesday, November 1, 2023

தன்னம்பிகை இழந்தால் ....!

 

தன்னம்பிகை இழந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்….!


வாழ்க்கையில் நாம் ஏதாவது சாதிக்க வேண்டுமானால், அதற்கு முதல்படியாக தன்னம்பிக்கை மிகவும் அவசியம். உலகில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை எடுத்து ஆய்வு செய்தால், அவர்களின் உழைப்பு மட்டுமே வெற்றியை ஈட்டித் தரவில்லை என்பது உறுதியாக தெரியவரும். தைரியமான தன்னம்பிக்கையுடன், தங்களது இலக்குகளை நோக்கி பயணம் செய்தவர்கள் மட்டுமே, வெற்றி கனியை பறித்து இருக்கிறார்கள். இதன்மூலம், தாங்களும் பயன் அடைந்து, உலகத்திற்கும் அவர்கள் சேவை செய்து இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கை இல்லாமல், ஏனோ தானோ என செயல்பட்டவர்கள், நல்ல வெற்றியை பெறவில்லை என்பது வரலாற்று உண்மை. தற்போதையை நவீன உலகில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்கள், தங்களது இலட்சியங்களை அடைய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களிடையே தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட அந்த இலட்சிய இலக்கை அவர்கள் அடைவதில்லை. அப்படியே வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி உயர்ந்த மற்றும் சிறப்பான வெற்றியாக அமைவதில்லை.

படிப்பும் தன்னம்பிக்கையும்:

ஒருவரிடம் துணிச்சலான தன்னம்பிக்கை இருக்க படிப்பு மிகமிக அவசியமாகும். குறைந்த கல்வி பெற்றவர்கள், அல்லது படிக்காதவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, வாழ்க்கையில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், படிப்புடன் கூடிய தன்னம்பிக்கை, இலட்சியங்களை குறிப்பிட்ட காலங்களில், நல்ல முறையில் அடைய வைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே உளவியல் அழுத்தத்தின் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கவலையடைந்துள்ளனர். இது அவர்களின் கல்வி செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது.பெரும்பாலான மாணவர்கள் கவலை, விரக்தி மற்றும் குறைந்த சுயமரியாதை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் படிப்பு மற்றும் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களின் பாதிப்பு:

மாணவர்களில் பெரும்பாலோர் சமூக ஊடகங்களில் மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். இதேபோன்று, போதைக்கு அடிமையாகும் மாணவர்களும் உள்ளனர். சகாக்களின் அழுத்தம், சலிப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக, மாணவர்கள் இன்று புகைபிடித்தல், மற்றும் போதைப்பொருட்களுக்கு மாறி வருகின்றனர். இதுபோன்ற பல தீமைகள், குறைபாடுகள், போட்டிகள் காரணமாக மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலையில் உள்ளனர். எனவே சமூக ஊடகங்களின் மீது அதிக அக்கறை கொண்டு, அதிலேயே மூழ்க்கி இருப்பதை நாம் முற்றிலும் கைவிட வேண்டும்.

உளவியல் அழுத்தம்:

சில இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உளவியல் அழுத்தத்தால் பல்வேறு வகையான தீமைகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக, பொழுதுபோக்காகத் தொடங்கும் போதை பழக்கமாகி, மாணவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கிறது. சில மாணவர்கள் தங்கள் சகாக்கள் முன்னிலையில் தனிமையாக உணர்கிறார்கள் என்று புகார் கூறுகின்றனர். கல்வி வாழ்க்கையில் கடுமையான போட்டியின் காரணமாக, மாணவர்கள் இப்போது தங்கள் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.  இதனால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படுவதுடன், நம்பிக்கையின்மையால் படிப்பில் கவனம் செலுத்துவதும் சிறப்பாகச் செயல்படுவதும் கடினமாகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உளவியல் அழுத்தத்திற்கு ஆளாகி சிரமம் அடைகிறார்கள்.

மனநலத்தை பேண வேண்டும்:

இன்றைய வேகமான உலகில், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் மனநலம் கவலையளிக்கிறது. இந்த இளைஞர்கள் கல்வி சார்ந்த அழுத்தங்களையும் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆலோசனையின் முக்கியத்துவம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என பிரபல மருத்துவர் அலி அக்பர் கப்ரானி கருத்து தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே மனநலக் கோளாறுகள் அதிகரித்து வருவதால், கல்வி நிறுவனங்கள் மனநலச் சேவைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். கல்வியின் கோரும் தன்மை மற்றும் மாணவர்கள் மீது வைக்கப்படும் எண்ணற்ற எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் போட்டி, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு கலந்தாய்வு அதாவது கவுன்சிலிங் மிகவும் அவசியம்.

மாணவர்களுக்கு மனரீதியான சிரமங்கள் மற்றும் அன்றாட சவால்களை சமாளிக்க ஆலோசனை உதவுகிறது. மனநல ஆலோசகர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் இனிமையான சூழலை உருவாக்குகிறார்கள். மாணவர்கள் தங்கள் சிரமங்கள், அச்சங்கள் மற்றும் கவலைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், ஆலோசகர்கள் மாணவர்கள் தங்கள் உணர்ச்சிகள் மற்றும் திறன்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறார்கள், மேலும், அவர்களின் அன்றாடப் போராட்டங்களை நிர்வகிக்கும் சமாளிக்கும் உத்திகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.

தோல்வியும் தன்னம்பிக்கையும்:

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உருவாகும் மன அழுத்தம் காரணமாக, ​​அவர்களின் கவனம் செலுத்தும் திறன், காலக்கெடுவை சந்திப்பது மற்றும் அவர்களின் முழுத் திறனைச் செயல்படுத்தும் திறன் பாதிக்கப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆலோசகர்கள் நேர மேலாண்மை, படிப்புத் திறன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்கள் குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறார்கள், இது மாணவர்களின் கல்வித் திறனை நேரடியாக உயர்த்துகிறது. இதன்மூலம் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து நீங்குகிறது. அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உயர்ந்து, வாழ்வில் ஒரு புதிய உற்சாகம் பிறக்கிறது. தோல்வி குறித்த சிந்தனைகள் மனதில் இருந்து விலகுகின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட இலட்சியத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ள வழிகள் பிறக்கின்றன.

சில தோல்விகள் வாழ்க்கையில் நல்ல பாடங்களை கற்று தருகின்றன என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தோல்விகள் மூலம் கற்ற பாடங்களை, இலட்சிய வெற்றியை நோக்கி பயணிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் புதிய உற்சாகத்துடன் கூடிய தன்னம்பிக்கை ஏற்பட்டு, உளவியல் அழுத்தங்கள் காணாமல் போகும். எனவே, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, துணிச்சலான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, வாழ்க்கை சாதிக்க மாணவர்கள், இளைஞர்கள் முடிவு செய்து தங்களது வாழ்க்கைப் பணிகளை மாற்றி வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இதன்மூலம் நிச்சயம், வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் என உறுதிப்பட கூறலாம்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: