Thursday, November 2, 2023

சத்தியமாக....!

" காலத்தின் மீது சத்தியமாக ! "

புது டெல்லியில் பணிபுரிந்த ஒரு காலம் அது.

டெல்லியில் புகழ் பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில், மற்றொரு பிரபல இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. ஆம்... ஐ.ஓ.எஸ். (I.O.S.) என்று அழைக்கப்படும் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில், கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. 

அந்த நிறுவனத்தின் சேர்மன் (தலைவர்) டாக்டர் மன்சூர் ஆலம், பொருளாதாரத்துறையில் ஆய்வுகள் பல மேற்கொண்டு, முனைவர் பட்டங்களை குவித்தவர். இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து பன்னாட்டு அளவில் நடைபெறும் கருத்தரங்கங்களில் பங்கேற்று, இஸ்லாமிய வங்கி முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை, இஸ்லாமிய அடிப்படையில் விளக்கம் அளிப்பவர். நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மன்சூர் ஆலமுக்கு நல்ல மதிப்பு உண்டு.

சிந்தனையை சீராக்க:

சரி விஷயத்திற்கு வருகிறேன். ஐ.ஓ.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையை சீராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  வாரத்தின் முதல்நாள், திருக்குர்ஆனின் அத்தியாயங்களில் இருந்து சில வசனங்கள் ஓதி, அதற்கு விளக்கம் அளிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. 

ஐ.ஓ.எஸ். நிறுவனத்தில் உள்ள கருத்தரங்க அறையில், ஊழியர்கள் அனைவரும் கூடியதும், சேர்மன் மன்சூர் ஆலம், திருக்குர்ஆனை ஓதி, எளிய உர்தூவில் விளக்கம் அளிப்பார்.  அதை கேட்கும்போது, உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி பிறக்கும்....சிந்தனைகள் சீராகும்.

காலத்தின் மீது சத்தியமாக:

இப்படிதான் ஒருநாள், திருக்குர்ஆனின் 103வது அத்தியாயமான அல் அஸ்ர் அத்தியாயத்தின் மூன்று வசனங்கள் ஓதி, அதற்கு உர்தூ மொழியில் மிக எளிமையாக விளக்கம் அளித்தார் மன்சூர் ஆலம்.

"அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்." என கூறிவிட்டு, 

" காலத்தின் மீது சத்தியமாக !

  மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.

 ஆனால், 

 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும், 

 நற்செயல்கள் புரிந்து கொண்டும், 

 மேலும், 

 ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,

 பொறுமையை கடைப்பிடிக்குமாறு 

 அறிவுரை கூறிக் கொண்டும்

 இருந்தார்களோ அவர்களைத் தவிர ! "

என்று அல் அஸ்ர் அத்தியாயத்தை அரபி மொழியில் வாசித்து, அதற்கு உர்தூவில் விளக்கம் அளிக்க தொடங்கினார் மன்சூர் ஆலம்.

நண்பர்களே, இந்த அத்தியாயம் மனிதனின் மனங்களில் சுருக்கமாக, ஆழமாக பதிக்கும் வகையில் அமைந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம்.

சுருக்கமான வார்த்தைகளில் அதிக கருத்துகள் இந்த அத்தியாயத்தில் உண்டு...

வெற்றி, அழிவுக்கு செல்லும் பாதை எது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது.

இறை நம்பிக்கை - நற்செயல்:

அதாவது, மனிதன் முதலில் இறைநம்பிக்கை கொள்ள வேண்டும். உலகை படைத்து பரிபாலித்து வரும் ஓர் இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்... இறைநம்பிக்கை வைப்பது மட்டுமல்ல, நற்செயல்கள் புரிந்து வரவேண்டும்.

அது சின்ன சின்ன செயல்களாக இருந்தாலும் சரி... மகிழ்ச்சியுடன் அவற்றை செய்ய வேண்டும். அத்தோடு, ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்... நாம் மட்டும் நல்லவர்களாக வாழ்ந்தால் போதும் என நினைக்கக் கூடாது.

மற்றவர்களும், அதாவது, நமது உறவினர்கள், சொந்தங்கள், அண்டை வீட்டார்கள், ஊர் மக்கள், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்கள், உலகில் வாழும் மக்கள் என அனைத்து தரப்பினரும், நல்லவர்களாக, வல்லவர்கள், அமைதியாக வாழ வேண்டும் என விரும்ப வேண்டும்.

அதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும்.

பொறுமை மிகவும் அவசியம்:

அடுத்து, பொறுமையை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். முதலில்  பொறுமை என்ற உயர்ந்த குணத்தை நம்மிடையே வளர்த்து கொண்டால்தான் மற்றவர்களிடம் அதுகுறித்து சொல்ல முடியும். எனவே, எந்த நேரத்திலும் பொறுமையை நாம் கையாள வேண்டும். அதற்காக நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்...

முதலில் இறைநம்பிக்கை,  அடுத்து நற்செயல்கள் புரிந்து வருவது, பிறகு மற்றவர்களிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது,  இறுதியாக பொறுமையை கடைப்பிடிப்பது....

மேற்குறிப்பிட்ட இந்த பண்புகள் ஒரு மனிதனிடம் இருந்து விட்டால் பிறகு  மனிதர்களிடையே எங்கே வெடிக்கும் கலவரம்...வன்முறை...உலகம்  அமைதி பூங்காவனமாக மாறிவிடும் அல்லவா.

கற்பனை செய்து பாருங்கள்:

இறைநம்பிக்கை இல்லாமல், நற்செயல்கள் புரியாமல், சத்தியத்தை எடுத்துரைக்காமல், பொறுமையை கடைப்பிடிக்காமல் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள். நிச்சயம் அது, நரக வாழ்க்கையாகவே இருக்கும்...உலக வாழ்க்கையில் மட்டுமல்ல, மறுமை வாழ்க்கையிலும் நிம்மதி கிடைக்காது...

எனவே, தோழர்களே, அல் அஸ்ர் அத்தியாயத்தின் மூன்று வசனங்களை நன்கு படித்து அதனை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் ஒளிரச் செய்யுங்கள்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை கடைப்பிக்க முயற்சி செய்யுங்கள். பிறகு, வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். நிச்சயம், மனதில் அமைதி பிறந்து என்னென்றும் நிலைத்து இருக்கும்.

போட்டி, பொறாமை நிறைந்த உலகத்தில், மனம் தடுமாறினாலும், பின்னர் தனது இயல்பு நிலைக்கு வந்துவிடும்.பிறரை நேசிக்க தூண்டும். உதவிக்கரம் நீட்ட ஆசை பிறக்கும். எந்த துன்பம் ஏற்பட்டாலும், இறைவன் மீது கொள்ளும் உறுதியான நம்பிக்கையால் அவற்றை தாங்கிக் கொள்ளும் வலிமை உள்ளத்திற்கு கிடைக்கும்.

எந்த நேரத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பதால், துன்பங்களை கண்டு மனம் கலங்காது.அனைவரையும் நேசிப்பதால், பொறாமை, புறம் பேசுதல் போன்ற குணங்கள் நம்மை விட்டு அகலும்.

இவையெல்லாம்தான், இந்த அல் அஸ்ர் அத்தியாயம் நமக்கு சொல்லித்தருகிறது...

மீண்டும் ஒருமுறை:

எனவே, மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்....

" காலத்தின் மீது சத்தியமாக !

  மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.

 ஆனால், 

 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும், 

 நற்செயல்கள் புரிந்து கொண்டும், 

 மேலும், 

 ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,

 பொறுமையை கடைப்பிடிக்குமாறு 

 அறிவுரை கூறிக் கொண்டும்

 இருந்தார்களோ அவர்களைத் தவிர ! "

இந்த அத்தியாயத்தை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். வெற்றியாளர்களாக மாறுங்கள்.

இறைவன், குறிப்பிடும்படி நஷ்டத்தில் இருக்காதீர்கள்., என்றார் டாக்டர் மன்சூர் ஆலம்.

இன்னும் ரீங்காரம்:

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஓடோடி விட்டன. அவரது வார்த்தைகள் இன்னும் என்னுடைய காதில் ரீங்காரம் செய்துக்  கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பலமுறை அல் அஸ்ர் அத்தியாசத்தை ஓதி, அதன் மொழியாக்கத்தை மனதில் நான் உள்வாங்கிக் கொண்டே இருக்கிறேன். அதன்மூலம், உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது. வாழ்வில் அமைதி கிடைக்கிறது. பிறரை நேசிக்க தூண்டுகிறது... 

உள்ளம் தடுமாறும்போது, இறைநம்பிக்கை, அதனை தடுக்கிறது.. நீங்களும் இந்த அத்தியாயத்தின் கருத்தை உள்வாங்கி, உங்கள் வாழ்விலும் அமைதியை தேட வேண்டும் என்பது எனது விருப்பம். இறைவன் விரும்பினால் எல்லாமே நன்றாக நடக்கும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

No comments: