Saturday, November 25, 2023

காங்கிரஸ் சுனாமி....!

 தெலங்கானாவில் காங்கிரஸ் சுனாமி....!


தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுவதால், காங்கிரஸ், பி.ஆர்.எஸ்., பாஜக உள்ளிட்ட கட்சிகள், தெலங்கானா மாநிலத்தை முற்றுகையிட்டு, தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. 

தெலங்கானா மாநிலம் மலர்ந்த பிறகு, கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரதிய ராஷ்டீரிய சமிதி கட்சி, தொடர்ந்து இரண்டு முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த  பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் தேர்தலில் மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்று,  ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த கே.சி.ஆர். என செல்லமாக அழைக்கப்படும் சந்திரசேகர ராவ் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  ஆனால் இந்த முறை போட்டி மிகக் கடுமையாக உள்ளதால், அவரது இலக்கு வெற்றி பெறாது என கள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்த அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறி வருகிறார்கள். 

காங்கிரஸ் சுனாமி:

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை, அங்கு காங்கிரஸ் மிகப்பெரிய அளவுக்கு மக்களிடையே வரவேற்பு பெற்று இருக்கவில்லை. தெலங்கானா மாநில உருவானதற்கு அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எடுத்து முடிவே முக்கிய காரணம் என காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. எனினும், பி.ஆர்.எஸ். மற்றும் பாஜக இடையே தான் பலமான போட்டி நிலவி வந்தது. உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என பல்வேறு தேர்தல்களில் கூட கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியை வெற்றி பெற்று வந்தது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மிகமிக குறைவு என்றே பல்வேறு தரப்பினரும் நம்பிக் கொண்டிருந்தனர். 

ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சி, தெலங்கானா தேர்தல் களத்தில் இறங்கி, பல்வேறு அதிரடி திட்டங்கள் மூலம் தனது தேர்தல் பயணத்தை தொடங்கியது. இது மக்களிடையே ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம். ஆனால், போக போக நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறுவதை கண்டு, அரசியல் நோக்கர்கள் வியப்பு அடைந்தனர். 

இந்திய ஒற்றுமை பயணம்:


தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவு திரும்ப முக்கிய காரணமாக அமைந்தது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் என்றே கூறலாம். கடந்த ஆண்டு அவர் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம், தெலங்கானாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, ஹைதராபாத் நகரில் இந்த பயணம் நுழைந்தபோது, சார்மினார் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர். நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், சாதி, மதம், போன்ற வேற்றுமைகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அதன்மூலம், நாட்டில் அமைதி நிலவி, அனைத்து துறைகளிலும் நாடு, வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய வேண்டும் என்ற ராகுல் காந்தியின் நோக்கத்திற்கு தெலங்கனா மக்கள் முழு ஆதரவு அளித்தனர். 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், தெலங்கானா மாநில மக்களை சிந்திக்க வைத்து, தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திரும்பியுள்ளது என்று உறுதியாக கூறலாம். 

காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள்:

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. குறிப்பாக, மகளிர், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என நடுத்தர மக்களை குறிவைத்து, இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் தெலங்கானா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது வாக்குறுதி மட்டுமல்ல, தங்களது வாழ்க்கையை மாற்றப் போகும் திட்டங்கள் என காங்கிரஸ் கட்சி தெலங்கானா மக்களுக்கு உறுதிப்பட கூறி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. 

ராகுல், பிரியங்கா பிரச்சாரம்:


தெலங்கானா மாநிலத்தில், தற்போது நிலைமை காங்கிரசுக்கு சாதகமாக மாற முக்கிய காரணம், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காநிதி, பிரியங்கா காந்தி ஆகியோரின் தீவிர பிரச்சாரம் என உறுதியாக கூறலாம். இவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம் போல் திரண்டு விடுகிறார்கள். குறிப்பாக, பெண்கள் மத்தியில் பிரியங்கா காந்தி செய்யும் பிரச்சாரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பிரியங்கா காந்தியை தங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரியாக நினைத்து தெலங்கானா மாநில பெண்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பான வீடியோ காணொளி களை காணும்போது, அது உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது. 

தேர்தல் பிரச்சாரம் நாளை மறுநாள் நிறைவு பெறும் நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுவார்கள் என்பதால், நிலைமை காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

கருத்துக்கணிப்பு முடிவுகள்:

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், காங்கிரஸ் கட்சியே ஆட்சியை கைப்பிடிக்கும் என தெரிவிக்கின்றன.  119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. இதேபோன்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் அனுபவம் கொண்டவர்கள், காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என கணித்துள்ளார்கள். 

தெலங்கானாவில் நிலைமை திடீரென காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாற முக்கிய காரணம், கடந்த மே மாதம் கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதே என கூறலாம். கர்நாடக மாநில மக்கள், மதம் சார்ந்து தங்களது வாக்குகளை அளிக்கவில்லை. நாட்டின் அமைதி, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே வாக்கு அளித்தார்கள். இதேபோன்று, கர்நாடக மாநில முஸ்லிம் வாக்களார்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை அளித்தனர். இதனால், வாக்குகள் பிரிந்து போகாமல், பாஜக தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பிடித்தது. இதே பாணியில், தெலங்கானாவில் முஸ்லிம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என நம்பப்படுகிறது. 

பாஜக அதிர்ச்சி:

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சிக்கு அடுத்த இடத்தில் இருந்த பாஜக, எப்படியும் ஆட்சியை கைப்பிடித்து விட வேண்டும் என நினைத்து பிரச்சாரம் செய்தது. அதன்மூலம் தென் மாநிலங்களில் பாஜகவை வலுவான கட்சியாக மாற்றலம் என நினைத்தது.  ஆனால் நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி வருவதைக் கண்டு பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றினால், அது தேசிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என நம்பப்படுகிறது. எனவே, தெலங்கானாவில் எக்காரணத்தைக் கொண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பிடிக்கக் கூடாது என்ற ஒரே இலக்குடன் பாஜக தற்போது செயல்பட்டு வருகிறது. அதற்காக தாங்கள் ஆட்சிக்கு வராமல் போனாலும் கூட சரி, காங்கிரஸ் வரக்கூடாது என்ற நோக்கத்துடன், மறைமுகமாக கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சிக்கு பாஜக ஆதரவு அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் காரணமாக தான், பி.ஆர்.எஸ். பாஜக மற்றும் உவைசி கட்சி ஒரே அணியில் இருந்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், இந்த குற்றச்சாட்டை கூறி, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். 

காங்கிரஸ் நம்பிக்கை:

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் பெறும் என அக்கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குக்குப் பிறகு, தேர்தல்கள் குறித்த காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை தற்போது காண முடிகிறது. ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் சரியான அணிகள் மூலம் பணிகள், சமூக வலைத்தளங்கள் எப்படி பயன்படுத்துவது, பிரச்சாரம் எந்த வகையில் கொண்டு செல்வது, தொண்டர்களை எப்படி பணி செய்ய வைப்பது, மக்களின் கவனத்தை காங்கிரஸ் பக்கம் எப்படி திருப்புவது, அவர்களின் நம்பிக்கையை எப்படி பெறுவது என சரியான திட்டங்கள் மூலம் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் தெலங்கானாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என திட்டவட்டமாக கூறலாம். அதற்காக வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை நாம் கொஞ்சம் பொறுமையாக காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: