Tuesday, November 7, 2023

பிரபலமான சந்தைகள்....!

 

வணிகமும் வளர்ச்சியும்….!


நாட்டின் வேகமான வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் துறையாக வணிகத்துறை இருந்து வருகிறது. மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க அதிகரிக்க வணிகமும் அதிகரித்து அதன்மூலம், பொருளாதாரமும் முன்னேற்றம் அடைகிறது. தற்போதைய நவீன காலத்தில் வணிகத்துறையில் பல்வேறு புதிய புதிய உத்திகள் கையாளப்பட்டு, பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேரடிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தேடி பார்த்து வாங்கும் வாடிக்கையாளர்கள் இருந்துவரும் நிலையில், ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் போக்கும் இளைஞர்கள் மத்தியில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்லைன் வர்த்தகம், நாட்டின் சிறிய வியாபாரிகளின் வாழ்க்கையை நசுக்கி விடுகிறது. சிறு முதலீடு செய்து வணிகம் செய்யும், ஏழை, மற்றும் நடுத்தர வியாபாரிகள், தங்களிடம் இருக்கும் பொருட்கள் நீண்ட காலம் விற்பனை செய்யப்படாமல் போவதால், அவர்களின் பொருளாதார நிலை தேக்கம் அடைந்து அதன்மூலம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கிவிட்டு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர வியாபாரிகளிடம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எனினும், குறிப்பிட்ட சிலர், அதில் அக்கறை கொள்வதில்லை. இதனால், சிறு வணிகர்கள் பாதிப்பு அடைவதை அவர்கள் கவலை கொள்வதும் இல்லை.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புகழ்பெற்ற சந்தைகள் இருந்து வருகின்றன. அந்த சந்தைகளில் அனைத்துவிதமான பொருட்கள் கிடைக்கும் என்ற நிலை இருந்து வருகிறது. இதனால், இந்த சந்தைகளுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. அந்த குறிப்பிட்ட சில சந்தைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட் :

ஒவ்வொரு நகரமும் மலிவான விலையில் கிடைக்கும்  பொருட்களைக் காணக்கூடிய சந்தையைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் நகரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் இந்தியாவில் மிகவும் பிரபலமான சந்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? குறிப்பிட்ட அந்த சந்தைகளில், நீங்கள் மிகவும் மலிவான விலையில் பொருட்களை வாங்க முடியும். மேலும்,  நீங்கள் பேரம் பேசலாம். நாட்டின்  பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள சந்தைகளில் ஒன்றுதான், டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட் ஆகும்.  இந்தியாவில் மிகவும் பிரபலமான சந்தை என்று இதை சொன்னால் அது தவறில்லை. இங்கு ஷாப்பிங் செய்யும்போது, நிறைய வெளிநாட்டினரையும் நீங்கள் காணலாம். நூறு ரூபாய் இருந்தால் கூட, இங்கு குறைந்தது இரண்டு ஆடைளையாவது நீங்கள் வாங்கலாம். இதனால் டெல்லியில் வாழும், ஏழை, மற்றும் நடுத்தர மக்களின் விருப்பங்களை சரோஜினி நகர் மார்க்கெட் வெகுவாக பூர்த்தி செய்து வருகிறது என உறுதிப்பட கூறலாம்.

மும்பை கலாபா காஸ்வே:


நாட்டின் மற்றொரு புகழ்பெற்ற சந்தையாக மும்பை காலபா காஸ்வே இருந்து வருகிறது. நீங்கள் ஃபேஷன் கலைஞராகவும், நவநாகரீக பொருட்களை வாங்க விரும்புபவர்களாகவும் இருந்தால், கலாபா காஸ்வே சிறந்ததாக இருக்கும். டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட் போல் இங்கு பொருட்களின் விலைகள் மலிவாக இருப்பது இல்லை. ஆனால்.500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்  வரை ஒரு ஆடையை எளிதாக வாங்கலாம். இந்த சந்தையில் நீங்கள் பல உணவகங்கள் மற்றும் புகழ்பெற்ற லியோபோல்ட் கஃபே ஆகியவற்றைக் காணலாம். அதனால் ஷாப்பிங் செய்து களைத்துப் போனால் இங்கே விருந்துண்டு. இந்தச் சந்தையிலும் பேரம் பேசலாம்.

மும்பை சோர் பஜார்:


இந்த சந்தையைப் பற்றி ஒரு பிரபலமான பழமொழி உண்டு. ஆட்டோ வாகன உதிரிபாகங்கள், உடைகள், தளபாடங்கள் மற்றும் ஆக்சிஸ் சீரிஸ் போன்றவற்றையும் இங்கு வாங்கலாம். இந்த சந்தைக்கு செல்லும் போது உங்கள் பணப்பை மற்றும் மதிப்புமிக்க பொருட்களை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜெய்ப்பூர் ஜொஹாரி பஜார்:


தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டன, ஆனால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹாரி பஜார் தங்கம் முதல் செயற்கை நகைகள் வரை அனைத்தையும் வழங்குகிறது. ராஜஸ்தானி பாணியில் அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும். ஜொஹாரி பஜார் மற்றும் பாபு பஜார் மிக அருகில் உள்ளன, ஜெய்ப்பூரின் இந்த இரண்டு சந்தைகளையும் நீங்கள் பார்வையிட்டு அதனை அழகை ரசிப்பதுடன், குறைந்த விலையில் அணிகலன்களையும் வாங்கலாம்.

கோவா அஞ்சுனா மார்க்கெட்:


கோவாவில் உள்ள இந்த மார்க்கெட் கவுன் ஸ்டைல் ​​ஆடைகள், ஆக்சிஸ் சீரிஸ் மற்றும் தொப்பிகளுக்கு பிரபலமானது. இங்கே நீங்கள் பல வெளிநாட்டினரைக் காணலாம். இங்கு இரவு சந்தையும் உள்ளது, இங்கும் விலை அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கோவாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த சந்தை உள்ளதால், பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தாலும், அதன் விற்பனையும் கூடுதலாகவே இருந்து வருகிறது.

சென்னை பர்மா பஜார்:


சென்னையில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக பர்மா பஜார் இருந்து வருகிறது. சிறிய சிறிய கடைகளை வைத்துக் கொண்டு இங்கு வணிகர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் மின்னணு பொருட்கள் இந்த சந்தையில் ஏராளமாக கிடைக்கும் என்பதால், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள், பர்மா பஜார் பக்கம் செல்லாமல் இருக்க மாட்டார்கள். இதேபோன்று, மூர் மார்க்கெட்டும், சென்னையில் பிரபல சந்தையாக இருந்து வருகிறது. தற்போது இந்த மார்க்கெட்டின் மவுசு குறைந்துவிட்டாலும்  பல அரிய பொருட்கள், மற்றும் நூல்கள் கிடைக்கும் என்பதால், மூர் மார்க்கெட், மக்களிடையே எப்போதும் பிரபலமாகவே இருந்து வருகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: