Tuesday, November 28, 2023

உங்களுக்கு விருப்பமா....?

இதய நோய்கள் வராமல் தடுக்க உங்களுக்கு விருப்பமா....?

அப்படியெனில் இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்...!!


உலகம் முழுவதும் மக்களிடையே தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக இதயம் தொடர்பான பிரச்சினைகள் முன்னிலையில் இருந்து வருகின்றன. தினசரி நாளிதழ்களை திருப்பினால், இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இளைஞன் பலி என்ற செய்தி நம் கண்ணில் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஹார்ட் அட்டாக் என்ற சொல் மிகமிக குறைவாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் மத்தியில் இதயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்க, அதிகரிக்க, இதய மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களில் இதய நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதய நோயாளிகளால், இந்த மருத்துவமனைகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. 

சரி, இதயம் ஆரோக்கியமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் வாழ வேண்டும்? மருந்து, மாத்திரைகள் இல்லாமல், இதய நோய்களில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பினால், நம்முடைய பழக்க வழக்கங்கள் மூலம் இதய நோய்களில் இருந்து ஓரளவுக்கு நிச்சயம்  தப்பிக்க முடியும். அத்துடன் ஆரோக்கிய எண்ணங்கள் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். 

எண்ணங்களின் தாக்கம்:

ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனது எண்ணங்களை அடிப்படையாக கொண்டே அமைகின்றன. எண்ணமே வாழ்வு என்ற சொல்லை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அது உண்மைதான். மனிதன் எதை எண்ணுகிறானோ, அதன்படியே அவனது வாழ்க்கை அமைகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும். எனவே தான் எப்போதும் ஆரோக்கியமான எண்ணங்களின் மத்தியில் நாம் இருக்க வேண்டும். வாழ வேண்டும்.  ஆரோக்கியமான, நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், மனிதனை எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் வாழ வைக்கும். 

அதேநேரத்தில், ஆரோக்கியமற்ற எதிர்மறை எண்ணங்கள் மனிதனின் வாழ்க்கையை சிதைத்துவிடும். இதனை பலரது வாழ்க்கையின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். நல்ல செல்வ வசதியுடன் வாழும் பலர், ஆரோக்கியமற்ற எண்ணங்கள் மூலம் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அவர்கள் உணராமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். கொடூர எதிர்மறை எண்ணங்கள், வாழ்க்கையில்  ஒருபோதும் ஆனந்தத்தை கொடுக்காது. ஆரோக்கியமற்ற எதிர்மறை எண்ணங்களால், இதயம் தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகும். இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வருவதற்கு காரணம் எதிர்மறை எண்ணங்கள் என்பது அறிவார்ந்த உண்மையாகும். 

மருத்துவர்கள் கருத்து: 


இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன என மனநல மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்  உள்ளது. ஹார்ட் அட்டாக் வர மனிதர்களின் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், அதிகளவு உடற்பயிற்சி என பல காரணங்களை மருத்துவர்கள் அடுக்கினாலும், எதிர்மறை எண்ணங்கள் உடல்நலத்தை மிகவும் பாதிக்கிறது என்றும் இதய சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் இதய நோய்ப் பிரிவு மையங்கள் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும், எதிர்மறை எண்ணங்கள் மிகவும் ஆபத்தானவை என்றும், இது இதயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. 

நாள்தோறும் எதிர்மறை எண்ணங்களுடன் நாம் வாழ்ந்தால், உடல் எப்படி ஆரோக்கியமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள இதய நிபுணர்கள், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்க்களில் அடைப்பு ஏற்பட, ஆரோக்கியமற்ற எதிர்மறை எண்ணங்களே முக்கிய காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்மறை எண்ணங்களால், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாகவும், அது இதயத்தை மிகவும் பாதிக்கிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். 

எதிர்மறை எண்ணங்களால், பயம், படபடப்பு, பதற்றம், உருவாகி உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் என்றும், இதன் காரணமாக, நீரழிவு நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் உருவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுவே இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வர முக்கிய காரணம் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.  எதிர்மறை எண்ணங்களால், சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி, பின்னர், அவை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்க தொடங்கி விடுகிறது என்றும் மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, எதிர்மறை எண்ணங்களில் இருந்து நாம் உடனடியாக விடுதலை பெற வேண்டும். 

ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்கள்:


ஆரோக்கியமான, நேர்மறையான எண்ணங்கள் மனிதனுக்கு எப்போதும் உற்சாகத்தை தந்துக் கொண்டே இருக்கும். நேர்மறையான எண்ணங்களை கொண்ட மனிதனின் வாழ்க்கையில் நாள்தோறும் மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வீட்டில் ஆனந்தம் குடி புகுந்து, அது எப்போதும் நிலைத்து நிற்கும். கடினமாக சூழ்நிலையிலும் எதையும் சமாளிக்கும் சக்தியை ஒருவருக்கு நேர்மறை எண்ணங்கள் நிச்சயம் தரும். ஒருவரை பற்றி நீங்கள் நினைக்கும் நேர்மறையான எண்ணங்கள் உங்களை நேர்மறையான செயல்களை அதாவது நல்ல அழகான செயல்களை செய்ய தூண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நல்ல செயல்களை செய்துக் கொண்டே இருந்தால், அதன் தாக்கம் நம் உடலிலும் பிரதிபலிக்கும்.  அத்துடன், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். 

எனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உருவாகாது. இதன் காரணமாகதான் எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் மனிதன் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சென்றதற்கு, அவர்களின் நேர்மறை எண்ணங்கள் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குரோத எண்ணங்கள் ஒருபோதும் உடல் ஆரோக்கியத்திற்கு பலன் அளிக்காது. நல்ல ஆரோக்கியமான உணவு, நல்ல ஆழ்ந்த உறக்கம், நல்ல உடற்பயிற்சி ஆகியவை எப்படி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் தேவையாக உள்ளதோ, அதுபோன்று, ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். 

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்:

ஆரோக்கியமான நேர்மறையான எண்ணங்கள் இருந்தால் மட்டுமே போதும், இதய நோய்கள் வராமல், அல்லது இல்லாமல் நாம் வாழ்ந்துவிடலாம் என்று நினைப்பது, அல்லது எண்ணுவது மிகவும் ஆபத்தானது. நல்ல எண்ணங்களுடன் நம்மிடையே நல்ல பழக்க வழக்கங்களும் தொடர்ந்து இருக்க வேண்டும். சரியான அளவுக்கு உணவு, நல்ல தூக்கம், முறையான ஓய்வு, போன்ற பழக்க வழக்கங்களை நாம் வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அத்துடன்,   அனைத்துத் தரப்பு மக்களையும் அன்புடன் நேசிக்கும் பண்பு நம்மிடம் இருக்க வேண்டும். பிறருக்கு உதவும் குணம் நம்மிடம் இருக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு அன்புக்கரம் நீட்டி, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். 

"உன் சகோதரனை பார்த்து புன்முறுவல் (புன்னகை) செய்வதும் கூட ஒரு தர்மமே"  என்ற நபிமொழியை நாம் கவனத்தில் கொண்டு, எல்லோரையும் நேசிக்கும் உயர்ந்து குணத்துடன் வாழ்ந்தால், இதய நோய் பிரச்சினைகள் நம்மை அண்டாது என உறுதியாக கூறலாம்.

வாருங்கள்...இனி வரும் நாட்களில்,  நம்முடைய வாழ்க்கையை நேர்மறை எண்ணங்கள் மூலம் நிரப்பி மகிழ்ச்சியமான வாழ்க்கையாக மாற்றுவோம். அதன்மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற்று எந்தவித இதய நோய்களும் வராமல், பாதுகாப்புடன் வாழுவோம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: