Wednesday, November 22, 2023

அதிர்ச்சி தகவல்....!

அதிகரித்து வரும் மூட்டு, தசை கோளாறுகள்....!

ஆய்வில் அதிர்ச்சி தகவல்....!!

உலகம் முழுவதும் மக்களிடையே மாறி வரும் உணவுக் கலாச்சாரம் காரணமாக, நாளுக்கு நாள் மனிதர்கள் சந்திக்கும்  பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய சூழ்நிலையில் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. 

விதவிதமான புதிய புதிய  நோய்கள் காரணமாக, மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இல்லை என்பதால், புதிய மருத்துவமனைகள்  தொடங்கப்படுகின்றன. அப்படி இருந்தும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவை இல்லாத காரணத்தால், மருத்துவ உலகம் திண்டாடி வருகிறது. நோயாளிகளும் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மூட்டு, தசை கோளாறுகள்:

உலகில் தற்போது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை முன்னிலையில் உள்ளன. இதனால் மக்கள் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம். அந்த வரிசையில் தற்போது மூட்டு, தசை கோளாறு நோய் இணைந்துள்ளது.

முதியவர்கள் மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட காலம் தற்போது மாறி விட்டது. இளம் வயது இளைஞர்களுக்கும் இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு, தசைக் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தினர். அந்த ஆய்வில், உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டுகள், தசைகள், எலும்புகள், தசைநார்கள், தசைநாண்கள் மற்றும் முதுகுத்தண்டு போன்றவற்றின் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் சுமார் 50 கோடி மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில்,  அதன் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் நூறு கோடியை எட்டும் என்றும்  தி லான்செட் ருமாட்டாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸின் சர்வதேச ஆய்வின்படி, தசைக்கூட்டு கோளாறு எண்ணிக்கை, 2020-ஐ விட சுமார் 115 சதவீதம் அதிகமாகும். மேலும் பெரும்பாலான நாடுகளில் 2020 மற்றும் 2050 க்கு இடையில் எண்ணிக்கைகள் குறைந்தது 50 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் கருத்து: 

இது குறித்து ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிசின் மருத்துவர் மானசி மூர்த்தி மிட்டிண்டி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  "மற்ற' தசைக்கூட்டு கோளாறுகள் என வகைப்படுத்தப்பட்டவற்றில் கணிசமான சுமை உள்ளது என்பதை தாங்கள் கண்டறிந்ததற்காக கூறியுள்ளார்.

ஆய்வு செய்யப்பட்ட தசைக்கூட்டு கோளாறுகள் உலகில் இயலாமைக்கான பெரிய மற்றும் வளர்ந்து வரும் ஆதாரமாக இருந்தன என்றும் இது பொதுக் கொள்கைக் கருத்தில் தேவைப்படுகிறது, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"உலகளவில் மற்ற தசைக்கூட்டு நிலைகளான சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் மற்றும் ஸ்போண்டிலோபதிகள் போன்றவற்றுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல், 2050 மற்றும் அதற்குப் பிறகும் அவர்களின் சுகாதாரத் தேவைகளும் அதிகரிக்கும்" என்று மிட்டிண்டி கூறியுள்ளார்.

பெண்கள் அதிகம் பாதிப்பு:

தசைக்கூட்டு கோளாறுகள் ஆண்களை விட பெண்களில் 47 புள்ளி 4 சதவீதம் அதிகமாக உள்ளன. மேலும் வயதுக்கு ஏற்ப இரு பாலினருக்கும் 65-69 வயதாக உயர்ந்தது, 23 நாடுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது 1990 முதல் 2020 வரை 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்த கோளாறுகள் பரவுவதை மதிப்பிட்டது மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி 2050 க்கான கணிப்புகளை உருவாக்கியது.

"கோவிட்-19க்குப் பிந்தைய தாக்கங்கள் தோன்றுவது நிச்சயமாகக் கணிப்பைச் சேர்க்கக்கூடிய ஒரு காரணமாகும். அங்கு தசைக்கூட்டு அறிகுறிகள் மற்றும் இயக்கம் இழப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் தொடர்புடைய நிலைமைகளின் வளர்ந்து வரும் கூட்டு அடையாளம் காணப்பட்டு, சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகங்கள் மீது மேலும் அழுத்தத்தை சேர்க்கிறது" என்றும் மருத்துவர் மிட்டிண்டி தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை:

இந்த புதிய ஆய்வை கண்டு அதிர்ச்சி அடையாமல், ஆரோக்கிய சிந்தனை, ஆரோக்கிய உணவு, ஆரோக்கிய வாழ்வு என நமது வாழ்க்கை முறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். நல்ல உணவு, உடற்பயிற்சி, சரியான தூக்கம், பிறர் மீது அன்பு செலுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எப்போதும் தூய எண்ணங்களுடன் கூடிய தூய வாழ்வை வாழ்ந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வந்தாலும் அது மிகப்பெரிய அளவுக்கு நம்மை எதுவும் செய்யாது. நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை சற்று கூர்ந்து கவனித்தால் அந்த ஆரோக்கிய வாழ்க்கையின் இரகசியம் நமக்கு புரிந்து விடும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: