Thursday, November 30, 2023

முஸ்லிம் எலி வளை நிபுணர்கள்....!

உத்தரகாண்ட்டில் 41 தொழிலாளர்களை மீட்க  மனிதநேயத்துடன் உழைத்த எலி வளை முஸ்லிம் நிபுணர்கள்....!

உத்தரகாண்ட் மாநிலம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பாஜக ஆளும் பிற மாநிலங்களில் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோன்ற ஒரு நிலை உத்தரகாண்ட்டிலும் இருந்து வருகிறது. மாநிலத்தில் ஒற்றுமையாக, சகோதர பாசத்துடன் வாழ நினைக்கும் முஸ்லிம் மக்களை, எப்போதும், விரோதிகளாகவே பார்க்கும் ஒரு மனநிலையை பாஜக ஏற்படுத்தியுள்ளது. எனவே, உத்தரகாண்டிலும் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இதனால், ஏழை, எளிய முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாக பணிபுரிந்து தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். எனினும், பிற மத சகோதரர்களை அவர்கள் எப்போதும் தங்களுடைய உறவுகளாகவே நினைத்து, இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைப்படி, அன்பு செலுத்தி வருகிறார்கள். 

சுரங்க விபத்து:

இத்தகையை சூழ்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த மாதம் 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றபோது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும்,  41 பேரையும் மீட்க தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் சிலநாட்கள் கழித்தே 41 பேர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்புப் படையினர் அவர்களுடன் பேசி வந்தனர். தொடர்ந்து தங்கள் கடும் முயற்சிகளில் மீட்பு படையினர் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இதையடுத்து வெளிநாட்டில் இருந்து ஆகர் ஏந்திரம் வரவழைத்து மீட்கும் பணி முழு வேகத்தில் நடைபெற்றது. இந்த மீட்புப் பணியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த  சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் தனது கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டார். பேராசிரியரான இவர் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அர்னால்ட் டிக்ஸ் அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் பணியாற்றி பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர்.

எனினும், தொழிலாளர்கள் அருகே சென்றபோது ஆகர் ஏந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது. இதனால் இனி அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அர்னால்டு டிக்ஸ் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டே இருந்தார். 

எலி வளை சுரங்கம் தோண்டும் முறை:

அவரது முயற்சிக்கு இடையே, மாற்று ஏற்பாடாக, எலி வளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டது. எலி வளை முறை என்பது, ஒரு ஆள் நுழையும் அளவுக்கு வளைந்தும் நெளிந்தும், பெரிதும், சிறிதுமாக எலி தோண்டுவதைப் போன்று தோண்டுவதுதான் எலி வளை முறையாகும். மேகாலயா போன்ற மாநிலங்களில் நிலக்கரி எடுக்க இந்த எலி வளை முறை பயன்படுத்தப்படுகிறது. சைடு கட்டிங் மற்றும் பாக்ஸ் கட்டிங் என இரண்டு முறைகளில் எலி வளை தோண்டப்படுகிறது. சைடு கட்டிங் மலைச்சரிவின் பக்கவாட்டிலும், பாக்ஸ் கட்டிங் செங்குத்தாக ஆழமாக தோண்டப்படுவதாகும். இந்த எலி வளை முறையை பயன்படுத்தித்தான் சுரங்கத்தில் சுக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 

முஸ்லிம் எலி வளை நிபுணர்கள்:

கடந்த 2014ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எலி வளை முறைக்கு தடை விதித்த நிலையில், மீண்டும் 2015ம் ஆண்டு எலி வளை முறைக்கு தடை நீக்கப்பட்டது. இந்த எலி வளை சுரங்கம் தோண்டும் முறையில் உத்தரகாண்ட்டில் உள்ள முஸ்லிம் தொழிலாளர்கள் நல்ல நிபுணர்களாக இருந்து வருகிறார்கள். எந்தவித அச்சமும் இல்லாமல், துணிச்சலுடன், எலி வளை முறையில் அவர்கள் சுரங்கங்களை தோண்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் தான், விபத்து நடந்த பகுதியில் 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில், முஸ்லிம் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். குறிப்பாக, முன்னா குரேஷி, பைரோஸ் குரேஷி, நசீர் கான், வகீல் உசேன், இர்ஷாத் அன்சாரி, ரஷீத் அன்சாரி, நஜீம் மாலிக், அன்குர் ஆகிய எட்டு முஸ்லிம் தொழிலாளர்களுடன், மனோ குமார், ஜாட் இன், தேவேந்தர் குமார், சவுராப் ஆகிய மற்ற நான்கு பேரும் இணைந்து கொண்டனர்,. 

மொத்தம் 12 பேர் கொண்ட இந்த எலி வளை குழு, கை வேலைப்பாட்டாகவே 13 மீட்டர் தொலைவை 21 மணி நேரத்தில் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாகப் பொருத்தினர். பிறகு இந்த குழாய்கள் வழியாக ஒவ்வொரு தொழிலாளராக 41 பேரும் வெளியே கொண்டு வந்தனர்.

குவியும் பாராட்டுகள்:

நிலச்சரிவு காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது, உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தது. 41 தொழிலாளர்களை மீட்க கடுமையாகவும் துணிச்சலுடனும் உழைத்த, முன்னா குரேஷி, பைரோஸ் குரேஷி, நசீர் கான், வகீல் உசேன், இர்ஷாத் அன்சாரி, ரஷீத் அன்சாரி, நஜீம் மாலிக், அன்குர் உள்ள 12 பேர் கொண்டு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள பிரபல பத்திரிகையாளர், ராஜ்தீப் சர்தேசாய், இது மதங்கள் கடந்த ஒற்றுமையே வெற்றிக்கான வழி என குறிப்பிட்டுள்ளார். சுரங்கத்தில் துளை தோண்டி 41 தொழிலாளர்களை காப்பாற்றிய அனைவரையும் பாராட்டுவதாகவும், குறிப்பாக ஃபெரோஸ், முன்னா குரேஷி, ரஷீது, இர்ஷாத், நசீம், வகில் ஹசன், மோனு நசீர், ஆங்குர், ஜாதின், சவுரப், , தேவேந்தர் ஆகியோரின் துணிச்சலான பணிகளை மறக்க முடியாது என்றும் ஒற்றுமையாக இருக்கும்போது தான் இந்தியா வெல்கிறது என்றும் ராஜ்தீப் சர்தேசாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, இடதுசாரி கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சுபாஷ்னி அலியும் எலி வளை குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.  எலி வளை தொழில் நுட்பம் மூலம் 41 தொழிலாளர்களை காப்பாற்றியவர்கள், ஃபைரோஸ், முன்னா குரேஷி, ரஷீத்,, இர்ஷாத், நசீம், மோனு, அங்குர், ஜத்தின், சவுரப், தேவேந்தர், வகீல் ஹாசன், அனைவருக்கும் வணக்கத்தை கூறியுள்ள அவர், பாஜகவும், முதலமைச்சர் தமியும் கூறியபடி உத்தரகாண்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றி இருந்தால், இப்போது யார் இந்த பணியை செய்து இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து-முஸ்லிம் தொழிலாளர்கள் இணைந்துதான் இதனை வெற்றிகரமாக முடித்தனர் என்றும் ஒற்றுமையே வலிமை என்றும் சுபாஷ்னி அலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோன்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 

ஒற்றுமையே வலிமை:

மதசார்பற்ற இந்திய நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால், ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே மொழி, என்ற வெற்று முழக்கங்கள் மூலம் நாட்டில் உள்ள மக்களை மத ரீதியாக பிரித்து, அவர்கள் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த இந்துத்துவா மற்றும் பாசிச அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியை தழுவார்கள் என்பது நிச்சயம், மக்கள் இப்போது அமைதியை விரும்புகிறார்கள். குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அனைவரும், நாட்டின் அமைதி, முன்னேற்றத்தை பெரிதும் விரும்பி அதன்படி தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அதன் காரணமாக தான், கனழை, பெருவெள்ளம், நிலச்சரிவு கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முஸ்லிம்கள், எந்தவித தயக்கமும் இல்லாமல் தங்களை அர்ப்பணித்து மக்கள் சேவையில் ஈடுபடுகிறார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறிக் கொண்டே போகலாம். அதில் ஒன்றுதான் உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 பேரை துணிச்சலுடன் எலி வளை தொழில் நுட்பம் மூலம் முஸ்லிம் தொழிலாளர்கள் காப்பாற்றியதை கூறலாம். எனவே, இந்திய முஸ்லிம்களையும் அவர்களின் சேவைகளையும் பாசிச அமைப்புகள் பாராட்டவில்லை என்றாலும், அவர்களை பார்த்து, இந்தியர்கள் இல்லை என இனி ஒருபோதும் கூறாதீர்கள். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள். நாட்டின் விடுதலைக்காக போராடி, உயிர் தியாகங்களை செய்தவர்கள். இதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, இனி வரும் நாட்களில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களையும் நேசிக்கும், அன்பு செலுத்தும் பண்யை நாம் வளர்த்துக் கொண்டால், அதன்மூலம் நாடு உண்மையான வளர்ச்சியை எட்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: