Saturday, November 4, 2023

முதல் நிபந்தனை.....!

 

அறிவைப் பெறுவதற்கான முதல் நிபந்தனை ஆர்வமே.....!

எந்தவொரு துறையிலும் நாம் சாதிக்க வேண்டுமானால், அந்த துறை குறித்த நல்ல ஞானம் நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும். அப்போதுதான், அதில் நாம் நிலைத்து நின்று, வெற்றியை பெற முடியும். குறிப்பிட்ட துறையில் அறிவை பெற, நமக்குள் நல்ல ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் செயல்பட்டால், வெற்றிக் கனியை பறிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இளமைப் பருவம் அதுவும் குழந்தை பருவம், ஆர்வம் மிகுந்த பருவமாக இருந்து வருகிறது. எனவே, குழந்தைகளின் ஆர்வத்தை அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

மெதுவாக நடந்து சில வார்த்தைகள் மட்டுமே பேசக்கூடிய ஒரு குழந்தை, எவ்வளவு ஆர்வமாகவும், விளையாட்டுத்தனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குழந்தைகளிடம் இருக்கும் பண்புகளை பெரியவர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

குழந்தைகளின் மனம்:

குழந்தைகளின் மனதை வெற்றுத் தாளாகக் கருதி, அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் பொறுப்பை பெற்றோர்கள் ஏற்க வேண்டும். குழந்தைகளை நல்லப் பண்புகளால் ஈர்க்க வேண்டும். குழந்தை பருவத்திலேயே, அவர்களின் மனதை இலட்சிய வாழ்க்கையை நோக்கி செல்லும் வகையில் தயார்படுத்த வேண்டும். குழந்தைகள் எல்லாவற்றையும் பற்றி நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். தங்களுக்கு திருப்தி அளிக்கும் பதில் கிடைக்கும் வரை அனைத்தையும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தங்களைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் சிறதும் கவலைப்படுவதில்லை.

குழந்தைகள் கேள்வி கேட்பதே ஓர் அழகுதான். அந்த அழகை பெற்றோர்கள் வரவேற்று ரசிக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் ஆனந்தம் எப்போதும் நிலைத்து இருக்கும். கேள்விக் கேட்கும் குழந்தைகளை அதட்டி தடுத்தி நிறுத்தக் கூடாது. திரும்பத் திரும்பக் கேட்டால் அது குழந்தைகளின் அறிவை அதிகரிக்கிறது. உண்மையில், அறிவைப் பெறுவதற்கான முதல் நிபந்தனை ஆர்வமே. அதேபோல், நமக்குள் ஆர்வ உணர்வை வளர்த்துக் கொண்டால், நமது அறிவை அதிகரித்து, ஒவ்வொரு நாளும் புதிய புதிய அனுபவங்களைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

சிறு பணிகளில் மகிழ்ச்சி:

குழந்தைகள் சிறிய வேலைகளில் கூட மகிழ்ச்சி அடைகிறார்கள். தாய்க்கு முன்பாக உணவை முடிப்பது அல்லது தண்ணீர் எடுத்து வருதல் போன்ற ஒவ்வொரு செயலையும் அவர்கள் விளையாட்டாகப் பார்க்கிறார்கள், அதை முடிப்பது அவர்களுக்கு ஒரு சாதனை உணர்வைத் தருகிறது. அதேபோல, சீரியஸை விட்டுவிட்டு, கொஞ்சம் விளையாட்டுத்தனத்தை நம் வாழ்வில் கொண்டு வந்தால், எதையும் சிறப்பாகச் செய்ய முடிவது மட்டுமல்லாமல், எல்லாவற்றிலும் மகிழ்ச்சியை உணர முடியும். குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு பணிகளையும் பெற்றோர்கள் பாராட்ட வேண்டும். இது குழந்தைகளை உற்சாகம் அடையச் செய்யும், அந்த உற்சாகம், இளமைப் பருவத்திலும் தொடர்ந்தால், அறிவுத் தேடல் அதிகரித்து இலட்சியப் பாதையை நோக்கி பயணம் தொடங்கும் என்பதை பெற்றோர்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சவால்களை எதிர்கொள்ளுதல்:

நடக்கக் கற்றுக்கொள்வது, சைக்கிள் ஓட்டுவது என எல்லாவற்றையும் குழந்தைகள் முழு கவனத்துடன் செய்கிறார்கள். ஒவ்வொரு பணியையும் சவாலாக ஏற்று, முடிவடையும் வரை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள். அதேபோல், பெரியவர்கள் தங்களுக்குள் இந்த குணங்களை வளர்த்துக் கொண்டால், அது, சவால்களை எதிர்கொள்ளவும், எளிதில் கைவிடாமல் இருக்கவும் ஊக்குவிக்கும். சவால்களையும் நெருக்கடிகளையும், தடைகளையும் சந்திக்காமல், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. வெற்றி என்பது எளிதல் கிடைக்கும் ஒரு பொருள் இல்லை. குறிப்பிட்ட இலட்சிய இலக்கை எட்ட நாம் பல்வேறு தடைகளை நிச்சயம் கடந்து வர வேண்டியிருக்கும். அந்த தடைகள் மூலம் தோல்விகள் கூட ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலைகளில், ஆர்வத்துடன் நமது அறிவைப் பயன்படுத்தி, பயணத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும். அப்போதுதான், சவால்களை முறியடிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

அச்சமின்மை:

புதிய விஷயங்களை முயற்சிக்கவும், ஆபத்துக்களை எடுக்கவும் குழந்தைகள் பயப்படுவதில்லை. அவர்களுக்கு தோல்வி குறித்த பயம் இருப்பதில்லை. அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றி பெற விரும்புவதற்குப் பதிலாக, ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்கள். இந்த அச்சமின்மை புதிய விஷயங்களை முயற்சிக்க குழந்தைகளைத் தயார்படுத்தும். மேலும், ஒரு பணி முடிக்கப்படாவிட்டால், தோல்வியைப் பற்றி வருத்தப்படமால், அந்த தோல்வி அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். பலமுறை முயற்சி செய்து தோல்வி கண்டவர்கள், தங்கள் தோல்வி மூலம் கிடைத்த பாடங்கள் மூலம் அறிவு பெற்று மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். எனவே, அச்சமில்லாமல், வாழ்க்கையை தொடர குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.  

குழந்தைகள் நேர்மையானவர்கள். எதிலும் தந்திரம் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகவும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துகிறார்கள். தனக்குப் பிடிக்கவில்லை என்றால் நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். மேலும், யாருக்கும் தீங்கு செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பது இல்லை. இந்த குணங்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு, குழந்தைகளின் நேர்மையை அடிக்கடி பாராட்ட வேண்டும்.  

அன்பின் வெளிப்பாடு:

குழந்தைகள் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை விரும்புகிறார்கள். குழந்தைகள் இதயத்தைத் தொடும் தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு மற்றும் அப்பாவித்தனமாகும். அதன் காரணமாக அவர்களின் சண்டையும் ஒரு நொடியில் முடிவடைகிறது. அவர்களின் இந்த குணத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், அன்பு மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் புரிந்து கொள்ளலாம். இதனுடன், குழந்தைகளின் அப்பாவித்தனமும் திறந்த இதயத்துடன் உறவுகளை கையாள கற்றுக்கொடுக்கிறது.

குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து அல்லது மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து தகவல்களை உள்வாங்குகிறார்கள். வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பார்ப்பதையும் கேட்பதையும் நகலெடுக்கிறார்கள். பின்னர் அவர்களின் நடத்தை அமைந்து விடுகிறது. எனவே, பெற்றோர்கள், தங்களது ஆளுமையை மற்றவர்களுக்கு ஒரு நேர்மறையான முன்மாதிரியாகக் காண்பிக்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், நடத்தை மற்றும் செயல்களையும் சிறப்பாக இருந்தால், அது குழந்தைகளின் எதிர்கால நடத்தையை நல்லவிதமாக அமைய  உதவும்.

நல்ல பக்குவம்:

குழந்தைகளுக்கு ஒரு நல்ல திறமை உள்ளது. ஏதாவது ஒரு விஷயத்தில் உடன்படவில்லை என்றால், அவர்கள் விரைவாக ஒப்புக்கொள்கிறார்கள். பிறகு இந்தப் பிரச்சினையை மறந்து விடுகிறார்கள். குழந்தைகளின் இந்த பழக்கத்தை பெற்றோர்களும் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றலாம். ஏதாவது தவறு நடந்தால், உடனடியாக அதை மன்னித்துவிட்டு செல்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதேபோன்று, குழந்தைகள் தங்கள் உணவு மற்றும் பொம்மைகளை தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பெரியவர்கள் குழந்தைகளின் இந்த பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தங்களும்  பின்பற்ற வேண்டும். மற்றவர்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் வாழ்க்கையில் மன அமைதி கிடைக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: